இயக்குநராகும் என்ஜினியர்





‘மூடர் கூடம்’ என்று, தான் இயக்கும் முதல் படத்திலேயே கோலிவுட்டின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் அறிமுக இயக்குநர் நவீன். மெக்கானிக்கல் என்ஜினியரான இவருக்கு சினிமாதான் லட்சியமாக இருந்துள்ளது. சிம்புதேவன், பாண்டிராஜ் ஆகியோரிடம் சினிமாவைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.

‘‘இந்தக்கதையை எழுதி முடித்ததும் வழக்கம் போல் வாய்ப்புக்காக பல வருடம் அலைந்தேன். ஒரு கட்டத்தில் நான் நினைத்த மாதிரி எடுக்க வேண்டும் என்றால் நானே தயாரித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கூடுதலாக தயாரிப்பு சுமையையும் ஏற்றுக் கொண்டு இயக்கினேன். என்னுடைய உழைப்புக்கு இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய ‘பசங்க புரொடக்ஷன்’ வழியாக அங்கீகாரம் கொடுத்துள்ளார்.



இது ஸ்டைலிஷ் காமெடி கதை. ஆனால், டயலாக் காமெடி கதை அல்ல. நான்கு இளைஞர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொல்லியுள்ளேன். பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராஜாஜ்யை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளேன். நாயகி ஓவியாவுக்கு இது முற்றிலும் வித்தியாசமான படமாக அமையும். இது தவிர ‘நாளை’ இயக்குநர் மகேஷ்வரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கிஷோர் நடிக்க வேண்டிய ரோல் இது. ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. என்றாலும் டப்பிங் பேசியிருக்கிறார்.

அதேபோல் சென்றாயன் என்கிற கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். அந்தக் கேரக்டருக்கு இயக்குநர் பாண்டியராஜ் பொருத்தமாக இருந்தார். ஆனால், அவருக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. எனவே சென்றாயன் என்பவரையே நடிக்க வைத்திருக்கிறேன்...’’ என்று சொல்லும் நவீன், இதில் நடிகராகவும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
- எஸ்