வெயில் காயும் ஒரு நண்பகல் வேளை... ஒகேனக்கல் ஆற்றில் நடந்து கொண்டிருந்தது ‘இளமை ஊஞ்சல்’ படப்பிடிப்பு. காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடிக் கொண்டிருந்தாலும் படப்பிடிப்பு முழுக்க இளமை பொங்கி வழிந்தது. இருக்காதா பின்னே... நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஷிவானி, ஆர்த்தி என்ற 6 ஹீரோயின்களும் அரைக்கால் டவுசரும், முண்டா பனியனும் போட்டுக் கொண்டு ஆற்றின் நடுவில் உட்கார்ந்திருந்தால் கவர்ச்சி வெள்ளம் பெருகி ஓடத்தானே செய்யும்?!
நாம் சென்றபோது இயக்குநர் ‘மங்கை’ அரிராஜன் நடிகைகளை பெரேடு வாங்கிக் கொண்டிருந்தார். ‘‘அங்கிருந்து ஓடிவாங்க, இங்கிருந்து ஓடிவாங்க. ஓடிவரும்போது கிரண் நீங்க அப்படியே கீழ விழுந்து புரண்டு எழுந்து வாங்க...’’ என்று ஏகத்துக்கு மைக்கில் மில்ட்ரி கேப்டன் மாதிரி உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். ஹீரோயின்கள் பாவம் சிக் உடையில் அங்கும் இங்கும் ஓடி வியர்த்து விறுவிறுத்து ஆற்றின் நடுவிலேயே அமர்ந்தார்கள். கேமராமேன் ஜே.ஜி.கிருஷ்ணா ‘டேக் ஓகே’ என்று கை காட்டியதும் பிரேக் விட்டார் இயக்குநர்.
‘‘5 டாப் ஹீரோயின்களை ஒரு தீவிரவாத கும்பல் காட்டுக்குள்ள கடத்தி வச்சிருக்கு. அவங்களை மீட்க நமீதா தலைமையில் ஒரு அதிரடிப்படை வருது. ஹீரோயின்களை நமீதா மீட்கும் விதத்தை பரபர திரைக்கதைல சொல்லியிருக்கோம். பேசிக்கா காமெடி கதைதான். கொஞ்சம் கிளாமரை மிக்ஸ் பண்ணியிருக்கேன். தேவையான இடத்துல ஆக்ஷனும் இருக்கும். அதுக்காக ஹீரோக்களே கிடையாதான்னு கேட்காதீங்க. என்னையும் சேர்த்து படத்துல ஆறு கதாநாயகர்கள் இருக்காங்க. நாங்கல்லாம் நமீதாவோட அதிரடிப்படையை சேர்ந்தவங்க...’’ என்றவர் அடுத்த காட்சியை எடுக்க ஆரம்பித்தார்.
நமீதாவிடம் அவர் உயரத்துக்கு ஒரு நவீன துப்பாக்கியை கொடுத்து ஓடவிட்டார்கள், பிறகு கயிறு கட்டி தூக்கினார்கள், இறக்கினார்கள். திடீரென்னு ஒரு சின்ன பரபரப்பு. ஓடிப்போய் பார்த்தால் கயிறு அறுந்து நமீதா பொத்தென்று விழுந்து கிடந்தார். வேகமாக ஓடிப்போய் தூக்கி உட்கார வைத்தார்கள். சற்று நேர ஓய்வுக்குப் பிறகு எழுந்து வந்தவர் நேராக தயாரிப்பாளர் எஸ்.ஆர். மனோகரனிடம் சென்று, ‘‘சார் உங்க டைரக்டருக்கு நான் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கலைன்னு கோபம். அதான் இந்த மாதிரி கஷ்டமான ஷாட்டெல்லாம் எனக்கு கொடுக்குறாரு...’’ என்று சொல்லிவிட்டுப் போனார். நாம் இயக்குநரை நோக்கி அதிர்ச்சியுடன் திரும்பினோம்.
‘‘அது ஒண்ணுமில்லை சார்... எல்லா ஹீரோயினையும் என்க்ரேஜ் பண்றதுக்காக அவங்ககூட ஃபிரெண்ட்லியா இருப்பேன். காலையில ஷூட்டிங் வந்தவுடன் கைகொடுத்து கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் கொடுப்பேன். இந்த விஷயத்தை யாரோ நமீதாகிட்ட போட்டுக் கொடுத்துட்டாங்க. அதனால அவங்க என்னைக் கண்டதும் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லிட்டு போயிடுறாங்க. மற்ற ஹீரோயினுங்க பாசிட்டிவா எடுத்துக்கிற விஷயத்தை நமீதா தப்பா எடுத்துக்கிட்டாங்க. இதுக்கு நான் என்ன செய்ய முடியும்?’’ என்றார் அப்பாவியாக.
‘‘அடுத்த சீன் சார்...’’ என்று கேட்ட உதவியாளரிடம், ‘‘எல்லா ஹீரோயினையும் நீச்சல் உடையில் வரச் சொல்லு. அருவியில குளிக்கிறது அடுத்த சீன்...’’ என்றார்.
அதுசரி!
- மீரான்