நடிகைகளின் அந்த ஒப்பந்தங்கள்





பல மாதங்களாகவே எழுதலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சனாகான் பொதுமேடையில் போட்டு உடைத்துவிட்டார். எனவே இப்போது அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. ‘சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் நடிகைகள் ‘அந்த’ மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமாமே..?’ என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இதுதான்.

‘‘வாய்ப்புக்காக ‘அந்த’ மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளும் வழக்கம் நீண்ட காலமாகவே சினிமாவில் இருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் நானே நேரில் பார்த்திருக்கிறேன். ‘இந்த’ ஒப்பந்தங்களால் வாய்ப்பு பெற்ற சிலர் நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள். சிலர் வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள். கடவுள் அருளால் எனக்கு அந்த மாதிரியான சூழ்நிலைகள் அமையவில்லை. அப்படி அமைந்திருந்தால் அதற்கு உடன்பட்டிருக்க மாட்டேன். சினிமாவில் ‘அது மாதிரி’ ஒப்பந்தம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று யாராவது சொன்னால். அது முழுப்பொய்...’’

சனாகான் சொல்ல வந்தது இதுதான். வாய்ப்புக்காக உடல் ரீதியாகவும் அனுசரித்துச் செல்ல வேண்டும்... ‘இந்த மாதிரி’ ஒப்பந்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது அறிமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகளும்தான். பெரிய நட்சத்திரமாகிவிட்ட பிறகு இந்த ஒப்பந்தங்களின் வடிவங்கள் மாறி விடுகின்றன. யாராவது ஒரு பெரிய நடிகரின், இயக்குநரின், தயாரிப்பாளரின் நிழலில் ஒதுங்கிக் கொள்வதன் மூலம் அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். இன்றைய நடிகர் நடிகைகள் பற்றி வரும் கிசுகிசுக்கள், திடீர் காதல்கள், திருமணங்கள் பற்றிய செய்திகளின் பின்னணியை ஆராய்ந்தால் இந்த உண்மை தெரியவரும்.

இந்த ‘ஒப்பந்தங்கள்’ எப்படி எழுதப்படுகின்றன?
ஒரு புதுப்பணக்காரர் படம் எடுக்க வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கென்றே புதுமுகங்களை சப்ளை செய்யும் ஏஜெண்டுகள் இருப்பார்கள். அவர்களிடம் தகவல் சொன்னால் போதும். வரிசையாக கொண்டு வந்து இறக்கி விடுவார்கள். ‘ஆடிசன்’ என்ற பெயரில் இண்டர்வியூ நடக்கும். அப்படி நடக்கும்போதே ஒப்பந்தத்துக்கு கட்டுப்படும் பெண்களை ஏஜெண்ட் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார். அந்த பெண்களிடம் ‘‘சின்னச் சின்ன அட்ஜெஸ்மெண்ட் செய்து கொண்டால் போதும். அந்த டைரக்டர் நல்ல மனுஷன். ஆனா, அந்த தயாரிப்பாளர்தான் கொஞ்சம் எதிர்பார்ப்பார். நீங்க ஓகேன்னா நாளையே உங்களை ஹீரோயினா அறிவிச்சுடுவாங்க...’’ என்று ஆசை காட்டுவார். இறுதியில் பார்த்தால், ஆசை வார்த்தை கூறிய ஏஜெண்ட் முதற்கொண்டு பலரையும் ‘அட்ஜெஸ்’ செய்துவிட்டுதான் வெளியே வரவேண்டியது இருக்கும். அப்படி இருந்தும் படம் வருமா வராதா என்று தெரியாது.



அடுத்த வகையான ஒப்பந்தம் கொஞ்சம் வேறு மாதிரி. அவர் பெரிய இயக்குநர். அவர் படத்தில் வாய்ப்பு கிடைத்தாலே போதும், டாப் ஹீரோயின் ஆகலாம். ஆனாலும் அவர் இத்தகைய ஒப்பந்தங்கள் போடுவதில்லை. படத்தின் கேரக்டருக்கு தேவையான பெண்ணை பஸ் நிலையத்திலோ, கேரளாவுக்கு சென்றோ தேடிக் கொண்டு வருவார். எந்த ஒப்பந்தமும் இல்லாமல் அந்த பெண் நடிக்கத் தொடங்குவார். அவரே புதுசா பெயரும் வைத்து விடுவார். திடீர் விளம்பரங்கள், திடீர் புகழ் அந்த பெண்ணையும் அவரைச் சேர்ந்தவர்களையும் கிறங்க வைத்திருக்கும்.

அந்த நேரத்தில் அந்த இயக்குநரின் உதவியாளர் அந்த புது நடிகையிடம் வந்து ‘‘சார் இத்தனை படம் இயக்கியிருக்கிறார். இன்னிக்கி டாப்ல இருக்கிறவங்க எல்லாரும் சார் அறிமுகப்படுத்தினவங்கதான். நீங்க அழகா இருக்கீங்க. ஆனா, சரியா நடிக்க வரலைன்னு சார் ரொம்ப ஃபீல் பண்றாரு...’’ என்று பிட்டைப் போடுவார். புதுப் புகழில் மயங்கி இருக்கும் நடிகை நடுங்கி விடுவார். ‘நான் என்ன பண்ணணும் சொல்லுங்க...’ என்பார். ‘‘வேற ஒண்ணுமில்லை. ஷூட்டிங் முன்னாடி சாரோட ரிகர்சல் எடுத்துடுங்க’’ என்பார். ரிகர்சல் என்னவென்பது அந்த  புதுமுக நடிகைக்கு தெரிந்துவிடும்.



சரி... சினிமாவில் ஜெயிக்கும் அத்தனை நடிகைகளுமே இப்படித்தான் வளர்கிறார்களா... என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. பெரிய நடிகர்களின் வாரிசுகள், சரியான பின்புலத்தோடு சினிமாவுக்கு வரும் பெண்களுக்கு இந்த பிரச்னைகள் இல்லை. மற்றபடி அரிதாக ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இதனைத் தாண்டித்தான் வரவேண்டியுள்ளது.
இந்த நிலை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் சினிமா உருப்படும்.
(படத்தில் இருக்கும் நடிகைகள் ஸ்ரீலேகன் ரெட்டி, காவ்யா சிங், வர்ஷா ஆகியோருக்கும் இந்தச் செய்திகளுக்கும் தொடர்பில்லை)
- மீரான்