“நடிப்பை நான் நிறுத்தியதற்கு காரணம், என் மகன் பிரசாந்த்தான்...’’ என்று சிரித்த தியாகராஜன் தொடர்ந்தார்.
‘‘அது பிரசாந்துக்கு எம்.பி.பி.எஸ் படிக்க அழைப்பு வந்த கால கட்டம். ஆனால் எனக்கு தோளுக்கு மீது வளர்ந்த பையன் இருக்கிறான் என்று வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர் நடிகர் சத்யராஜ். அதற்குப் பிறகு நாலாப்பக்கமும் இருந்து பிரசாந்தை எப்படியாவது தங்கள் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். அந்த முயற்சியில் ஜெயித்தவர்தான் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன். அதற்குப் பிறகு மகனுக்கு வழி விட்டேன்.. அதே போல் அவரும் சினிமாவில் பல உயரங்களைத் தொட்டார். 1990-ல் தமிழில் ‘வைகாசி பொறந்தாச்சு’ மலையாளத்தில் தேசிய விருது பெற்ற ‘பெருந்தச்சன்’, தெலுங்கில் ‘பிரேம சிகரம்’, இந்தியில் ‘ஐ லவ் யு’ என ஒரே வருடத்தில் நான்கு மொழிகளில் சில்வர் ஜூப்ளி ஹிட் கொடுத்தார். .’ஆணழகன்’ ‘ஜெய்’, ‘அடைக்கலம்’, ‘ஷாக்’ உட்பட பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். ‘ஷாக்’, ‘மம்பட்டியான்’, ‘பொன்னர் சங்கர்’ ஆகிய படங்களை அவரை வைத்து இயக்கவும் செய்தேன்...’’ என்று சொன்னவர், கலைஞர், எம்ஜிஆர்., சிவாஜி ஆகியோருடன் இணைந்து பழக கிடைத்த வாய்ப்பை பாக்கியமாகக் கருதுகிறார்.
‘‘கலைஞர் குடும்பத்துக்கும், எங்கள் குடும்பத்துக்கும் உள்ள உறவு அனைவரும் அறிந்ததுதான். பிரசாந்தின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அவரிடம் ஆசி வாங்குவோம். பிரசாந்தை தன் பேரன் போலவே அவர் பார்த்துக் கொள்கிறார். பிரசாந்த் நடித்த ‘தமிழ்’ பட டைட்டில் கூட அவர் தன் கையெழுத்தாக எழுதிக் கொடுத்ததுதான். அவருடைய ‘பொன்னர் சங்கர்’ நாவலை படமாக எடுத்தது நாங்கள் செய்த புண்ணியம். அந்த நாவலுக்கு எப்படி திரைக்கதை எழுதுவது என்று யோசித்தபோது, அவரே எளிமையாக திரைக்கதை எழுதிக் கொடுத்தார்.
சிவாஜியுடன் ‘கருடா சவுக்கியமா’ படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த ஜாம்பவானுடன் என்னால் எப்படி நடிக்க முடியும்? எனவே மறுத்துவிட்டேன். இதையறிந்த நடிகர் திலகம், ‘நீதான் நடிக்கணும்’ என்று அன்புக் கட்டளையிட்டார். தட்ட முடியாமல் கூச்சத்துடன் நடித்தேன். பிறகு ‘நெஞ்சங்கள்’ படத்திலும் அந்த நடிப்பு இமயத்துடன் இணைந்தேன். சிவாஜி சார் என்னை ‘முத்துகிருஷ்ணா’ என்றும், ‘நகைக்கடை’ என்றும்தான் அழைப்பார். ‘நகைக்கடை’ என்று அவர் அழைக்கக் காரணம், என்னுடைய கெட்டப். கழுத்தில் ஐந்தாறு செயின், கையில் பிரேஸ்லெட், விரல்கள் தெரியாதளவுக்கு மோதிரங்கள் என்று அணிந்திருப்பேன்.
பிரசாந்த் நடிக்க ஆரம்பித்தபோது அவர் வழங்கிய ஆசியை மறக்கவே முடியாது...’’ என்று நெகிழ்ந்தவர், எம்ஜிஆர். தன் மீது வைத்திருந்த பாசத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
‘‘‘அலைகள் ஓய்வதில்லை’ வெற்றி விழாவில் நான் பங்கு பெறும் பாக்ஸிங் போட்டி நடைபெறும் என்று விளம்பரம் கொடுத்திருந்தோம். அந்த விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர், ‘நடிகனாகிய நீங்கள் ரியல் பாக்ஸிங் சண்டையில் கலந்து கொள்ளக்கூடாது. ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் நீங்கள் நடிக்க ஒப்புக் கொண்ட தயாரிப்பாளருக்கு அசௌகரியம் ஏற்படும். எனவே நீங்கள் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது. இது என் கட்டளை’ என்றார். அதை எப்படி மீற முடியும் சொல்லுங்கள். அன்றுடன் பாக்ஸிங்குக்கு குட்பை சொல்லிவிட்டேன்.
இன்னொரு முறை, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று நாளிதழில் செய்தி வெளியானது. மறுநாளே என் வீட்டுக்கு வந்து நலம் விசாரித்தார். நான் நடித்த ‘பூவுக்குள் பூகம்பம்’ படத்தின் ஆடியோ கேசட்டை வெளியிடுவதற்கு எம்ஜிஆரை அழைத்திருந்தேன். முழுப் பக்க அளவில் விளம்பரமும் கொடுத்திருந்தேன். அப்போது தான் சிகிச்சையை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து அவர் திரும்பியிருந்தார். எனவே அவர் வரமாட்டார் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், குறித்த நேரத்தில் விழாவுக்கு வந்தார். அதுதான் எம்ஜிஆர். ‘பூவுக்குள் பூகம்பம்’ படத்திலிருந்துதான் தமிழ் சினிமாவில் ஆடியோ கேசட் வெளியீடும் கலாச்சாரம் ஆரம்பித்தது. அதற்கு வித்திட்டவர் எம்.ஜி.ஆர்” என்று கண் கலங்கியவர், தனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு மட்டும்தான் என்கிறார்.
‘‘எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் உழைப்பு மட்டும்தான். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் உழைப்பு ஒன்றுதான் மூலதனம்...’’ என்கிறார். உண்மைதானே?
- சுரேஷ்ராஜா
புகைப்படங்கள் : ஆர்.சி.எஸ்.