“ஒரு ஒளிப்பதிவாளர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஒப்புக் கொண்டிருக் கிறார். அதனால் பல சிக்கல்கள் என்று சொல்லியிருந் தீரே, ஆனால் அவர் ஒரு படத்தில் மட்டுமே கமிட் ஆவதாகச் சொல்கிறார்களே’’ என்று சரோஜா வந்ததும் வராததுமாகக் கேள்வியை எழுப்பினோம். அவர் மிக நிதானமாக, ‘‘நான் சொன்னதும் உண்மைதான், நீங்கள் கேள்விப்பட்டதும் உண்மைதான்’’ என்றார். ‘‘என்ன குழப்புகிறீர்?’’ என்று நாம் சற்று உஷ்ணம் காட்ட, ‘‘குழப்பமெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டு படங்களையும் ஒப்புக்கொண்ட ஒளிப்பதிவாளர், இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் தொடங்கும் என்பதை எதிர்பார்க்கவில்லையாம்.
அப்படி ஒரு சிக்கல் வந்ததும் இரண்டு நிறுவனங்களிலும் பேசி, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட லிங்கமானவரின் படத்தில் மட்டுமே பணிபுரியப் போவதாகச் சொல்லிவிட்டாராம். அவர்களும் அதை ஏற்றுக்கொள்ளவே சிக்கல் தீர்ந்தது. இப்போது பெரியஇடத்துப் பிள்ளை நடிக்கும் படத்துக்கு வேறு ஒளிப்பதி வாளரைத் தேடிக் கொண்டிருக் கிறார்களாம்’’ என்று சொல்லி முடித்தவர், ‘‘இதை வேண்டு மானால் உங்களுடைய தொடர்பில் உறுதிசெய்து கொள்ளுங்கள்’’ என்றார்.
‘‘சரி, சரி விஷயத்துக்கு வாருங்கள்’’ என்றதும், ‘‘சூப்பர் தயாரிப் பாளரின் மகனை வைத்து அரசியல் கட்சித் தலைவரின் மகன் படமெடுக்கத் திட்டமிட்டு அது நடக்காமல் போனதை ஏற்கெனவே பேசியிருந்தோமல்லவா? எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் நடிக்கவே முடியாது என்று தயாரிப்பாளர் மகன் ஒதுங்கிக் கொண்டதால், வேறுவழியின்றி அந்தக்கதையில் மோதி விளையாடிய நாயகனை ஒப்பந்தம் செய்தார்களாம். அவரும் முன்புபோல் சம்பளம் உட்பட எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்’’ என்று சொன்ன சரோஜா, சற்றும் தாமதியாமல் அடுத்த செய்திக்குப் போனார்.
‘‘தேடிவரும் வாய்ப்பு களை ஒரு அம்மா நடிகை நிராகரித்து வருகிறார்’’ என்று தொடங்கிய சரோஜா, நாம் யாரெனக் கேட்குமுன்பே தொடர்ந்தார். ‘‘அண்மையில் வெளியான சண்டை செய்கிற படத்தில் சண்டை போட்டு நடித்த அந்த அம்மாவுக்கு நிறைய வாய்ப்புகளாம். ஏற்கெனவே சம்பளம் மற்றும் பல விஷயங்களால் காஸ்ட்லியான அம்மாவாக இருக்கும் அவரிடம் அதையும் மீறிபலர் வந்தும். அந்த வாய்ப்புகளை நிராகரிக்கிறாராம். காரணம் என்னவென்று கேட்டால், ‘சம்மரில் நான் எந்தப்படத்திலும் நடிக்கமாட்டேன்.
ஏற்கெனவே படப்பிடிப்பில் நிறைய லைட்ஸ் வைத்திருப்பார்கள். அந்தச் சூட்டையே தாங்க முடியாது. இதற்குமேல் மொட்டை வெயிலில்நிற்கவைத்து விடுவார்கள், என்கிறாராம். இது மாதிரியான ஒரு பதிலை இதுவரை யாரிடமிருந்தும் கேட்காதவர்கள் அதிர்ந்து போகிறார்களாம்’’ என்று சொன்ன சரோஜா ‘அடுத்த வாரம் சந்திப்போம்’ என விடை பெற்றார்.