வெந்தயக்கீரை சாதம்



தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, தக்காளி - 3, வெங்காயம் - 2, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒரு கப், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை

கீரையைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நசுக்குங்கள். எண்ணெயில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம், கீரை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மீதமுள்ள மசாலாத்தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப்பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.