அன்று அவமதித்தவர்கள் இன்று மரியாதையோடு பார்க்கிறார்கள் !
ஜெனிபர்
‘‘எங்களை பார்க்கும் பலர் கை, கால் நல்லாத்தானே இருக்கு. உழைச்சு சம்பாதிக்கலாமேன்னு கேட்பாங்க. எங்களுக்கும் கடையில் கைத்தட்டி பிழைக்க விருப்பமில்லை தான். உழைக்க நாங்க தயார். ஆனா, எங்களுக்கு வேலை கொடுக்க முன் வர இன்றும் பலர் தயங்குகிறார்கள். வீட்டிலும் நிராகரிக்கப்படுகிறோம். சமூகத்தில் இருந்தும் விலகி இருக்கிறோம்.
நாங்களும் நல்ல இடத்துக்கு போகணும். எங்களை மாத்திக்கணும்னு நினைச்சாலும் இந்த சமூகம் எங்களை அனுமதிப்பதில்லை. இதையெல்லாம் தாண்டி பல போராட்டங்களுக்கு பிறகுதான் நாங்க எங்களின் அடையாளத்தினை உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது’’ என்று ஆதங்கப்படுகிறார் ஜெனிபர். பிறப்பில் இவர் திருநங்கை என்றாலும், சமூகத்தில் தனக்கென ஒரு தனிப்பட்ட மரியாதை மற்றும் கவுரவம் வேண்டும் என்று சிகை அலங்கார கலைஞராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். ‘‘என் ஊர் சேலம். பள்ளியில் படிக்கும் போதே என்னுள் ஏற்பட்ட மாற்றத்தினை நான் ஆரம்பத்தில் பெரிய அளவில் உணரவில்லை. என்னுடைய பழக்க வழக்கம் எல்லாம் பெண் போல இருப்பதாக பலர் என்னிடம் கூறுவார்கள். அப்போது எனக்கு அது பெரியதாக தெரியவில்லை. அதைப் பார்த்து பலர் என்னை கிண்டல் செய்திருக்கிறார்கள்.
ஆனாலும் நான் வீட்டில் முடங்கிடாமல் கிண்டல் செய்பவர்கள் செய்யட்டும்னு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். அப்ப நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் எனக்குள் உள்ள பெண்மை தன்மையை நான் உணர்ந்தேன். அதன் பிறகு எனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை. அதனால் பத்தாம் வகுப்புடன் நிறுத்திட்டேன். சில நாட்கள் எஸ்.டி.டி பூத்தில் வேலை பார்த்தேன்.
அங்கு வந்த திருநங்கைகள் என்னைப் பார்த்தவுடனே நான் யார் என்று அடையாளம் கண்டு கொண்டார்கள். என்னை ஒரு நாள் அவர்கள் இருக்கும் இடம் அழைத்து சென்று அங்கு எனக்கு புடவை உடுத்தி, பூ பொட்டு எல்லாம் வைத்துவிட்டார்கள். அந்த கோலத்தில் நான் முழுமையாக என்னை பெண்ணாகவே உணர ஆரம்பிச்சேன். என்னிடம் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்த என் பெற்றோர் என்னை கண்டித்தனர். எனக்கு வீட்டில் இருப்பது நரகத்தில் இருப்பது போல இருந்தது. வீட்டை விட்டு வெளியேறினேன். சேலத்திலிருந்து சென்னைக்கு வந்தேன். கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்திறங்கிய எனக்கு எங்கு போறதுன்னே ெதரியல. அங்கேயே தங்கினேன்.
அங்க வந்த திருநங்கைகள் என் நிலையை அறிந்து அவர்களுடன் அழைத்து சென்று விட்டார்கள். அவர்களுடன் சேர்ந்த பிறகு நான் என்னை முழுமையாக பெண்ணாகவே அலங்கரிக்க ஆரம்பித்தேன். அதற்கான அறுவை சிகிச்சையும் செய்து கொண்டேன். சின்னச் சின்ன வேலைகள் செய்து எனக்கான வாழ்க்கையை நகர்த்தி வந்தேன். இருந்தாலும் சமூகத்தில் நிறைய கிண்டல்கள், கேலிகள், அவமதிப்புகளையும் சந்திக்க வேண்டி இருந்தது. நிரந்தர வேலை தேடினாலும், யாரும் தர முன்வரவில்லை. சமூகத்தில் ஏற்பட்ட நிராகரிப்புகள் மிகவும் மன வேதனையை எனக்கு கொடுத்தது’’ என்றவர் ஒப்பனை கலைஞராக மாறியதை பற்றி பகிர்ந்தார்.
‘‘நாங்கள் பிறவியில் பெண்கள் கிடையாது. எங்க உடலில் ஏற்பட்ட மாற்றம்தான் எங்களை அப்படி உணர செய்தது. அதனால் தோற்றத்தில் பெண்மை தெரிந்தாலும், நாங்க எங்களை மேலும் அழகாக தெரியவேண்டும்னு ஒப்பனைகளை செய்து கொள்வோம். எங்களுக்கு எப்படி மேக்கப் போட்டுக் கொள்ளணும்னு நான் தெரிந்து வைத்திருக்கேன். மேக்கப் கலை எனக்கு நன்கு பரிச்சயம் என்பதால், அதையே என்னுடைய தொழிலாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தேன். இதனை கற்றுக் கொள்ள பல பயிற்சி மையங்களுக்கு விண்ணப்பித்தேன்.
நிராகரிப்புகளை தான் சந்தித்தேன். ஆனால் எங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர் என்னை ஏற்றுக் கொண்டு எனக்கு பயிற்சி அளித்தார். மூன்று மாத பயிற்சிக்கு பிறகு அழகுக் கலை நிறுவனம் ஒன்றில் ஒப்பனை கலைஞராக வேலை செய்தேன். அங்கு வந்தவர்கள் மூலம் சினிமாவில் ஒப்பனை செய்யும் வாய்ப்பு வந்தது. சினிமா ஒப்பனை கலைஞர்களுக்கென தனிப்பட்ட யூனியன் இருக்கு, அதில் பதிவு செய்ய சென்ற போது முதலில் சின்னத்திரையில் மூன்று வருடங்கள் இருந்தால்தான் வெள்ளித்திரைக்குள் நுழைய முடியும்னு சொன்னாங்க. ஆனால் அதிலும் ஆண்களுக்கு தான் ஒப்பனை கலைஞருக்கான அட்டை வழங்குவார்கள்.
பெண்கள் சிகை அலங்காரம் சார்ந்த வேலைகளை மட்டுமே தான் செய்ய முடியும். நான் கற்றுக் கொண்டதோ அழகுக் கலை, சிகை அலங்காரம் எனக்கு தெரியாது. அதனால் சிகை அலங்கார நிபுணரிடம் சேர்ந்து அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டு, சின்னத்திரை நடிகைகளுக்கு சிகை அலங்காரம் செய்ய ஆரம்பித்தேன். அருந்ததி, பேரழகி, நிலா, அன்பே வா போன்ற தொடர்களில் பணியாற்றியிருக்கிறேன். சினிமா துறைக்குள் செல்வதற்காக ஒப்பனை சார்ந்த அட்வான்ஸ் படிப்புகளையும் படித்து வருகிறேன்.
சின்னத்திரையில் நான் கால் பதித்து மூன்று வருடங்கள் முடிந்திருந்தாலும், ஆரம்பத்தில் பல கேலி கிண்டல்களை இங்கும் சந்தித்து இருக்கேன். நாங்க செல்லும் இடத்தில் சண்டை சச்சரவு ஏற்படும்னு பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்க அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை என்னுடைய கண்ணியமான நடத்தை மூலம் அவர்களுக்கு உணர்த்தினேன். என்னை அன்று அவமதித்தவர்கள் இன்று மரியாதையோடு பார்க்கிறார்கள்.
இந்த மாற்றம் சமூகத்தில் எங்கள் மேல் இருக்கும் கண்ணோட்டத்தை மாற்றும். இது எனக்கான போராட்டம் இல்லை. என்னுடைய ஒட்டு மொத்தவர்களுக்கான போராட்டம். வட இந்தியாவில் எங்களை கடவுளாக பார்க்கிறார்கள். அப்படிக் கூட பார்க்க வேண்டாம். சக மனிதர்களாக பாருங்கள். நாங்க எதிர் பார்ப்பது ஒன்று மட்டும்தான். எங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பினை கொடுங்க’’ என்கிறார் ஜெனிபர்.
மா.வினோத்குமார்
|