எப்போதும் ஒரு பேக்கப் பிளான் வச்சிருக்கணும்! நடிகை கனிகா



கடந்த வருடத்துடன் நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. எல்லாரும் சொல்வது போல் சினிமாவிற்குள் நான் நுழைந்தது ஒரு விபத்து தான். முதல் பட வாய்ப்பு வந்த போது நான் பிட்ஸ் பிலானியில் பொறியியல் படிச்சிட்டு இருந்தேன். அப்பவே நான் கிளியரா இருந்தேன். நடிச்சாலும் படிப்பை பாதியில் விடக்கூடாதுன்னு நான் தெளிவா இருந்தேன். அதே சமயம் சினிமாவில் எல்லாரும் சாதிக்க முடியும்னு சொல்ல முடியாது. அதனால் எனக்கு நடிக்க வாய்ப்பு வரும் வரை நடிப்பேன். இல்லைன்னா இருக்கவே இருக்கு கையில் படிப்பு’’ என்றார் எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரியாக நடிக்கும் கனிகா.  

‘‘நாங்க ரொம்ப சாதாரணமான குடும்பம். நான் சினிமாவில் வருவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. காரணம் எனக்கு படிக்க பிடிக்கும். ஆனால் நான் படிப்பாளின்னு சொல்ல முடியாது. கடைசி நேரத்தில் படிப்பேன். ஆனா நல்ல மார்க் வாங்கிடுவேன். பள்ளியில் கூட ரொம்ப சைலன்ட். நான் உண்டு என் படிப்புண்டுன்னு இருப்பேன். நானும் அக்காவும் முதலில் மதுரையில் தான் படிச்சேன். அதன் பிறகு சென்னையில் படிச்சேன். அப்புறம் பொறியியல் படிக்க பிலானிக்கு போயிட்டேன். படிப்பு ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம்ன்னு இருந்தேன்.

இதற்கிடையில் எனக்கு திருமணமாச்சு. என் கணவர் ஷ்யாம், அமெரிக்காவில் இருந்ததால், அங்கு போயிட்டேன். எங்களுக்கு ஒரு மகன். அவனுக்கு பிறக்கும் போதே இதயத்தில் பிரச்னை இருந்ததால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவன் கொஞ்சம் தேறி வந்ததும், நானும் என் கணவரும் இந்தியாவிற்கு வந்திடலாம்ன்னு முடிவு செய்தோம்.
தாத்தா, பாட்டியின் அரவணைப்போடு வளரணும்ன்னு நாங்க விரும்பினோம். காரணம் இந்தியாவில் வளரும் குழந்தைகள் ஸ்ட்ரீட் ஸ்மார்ட்டா இருப்பாங்க. அவங்களால எந்த ஊரிலும் எந்த இடத்திலும் தங்களின் வாழ்க்கையினை துவங்க முடியும். என் மகனையும் அப்படித்தான் நாங்க வளர்க்கிறோம்’’ என்றவர் தன் சினிமா பயணங்கள் பற்றி விவரித்தார்.

‘‘நான் இருபது வருஷமா சினிமா துறையில் இருந்தாலும், அதை என் கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தேன். சிலர் அந்த எரிமலைக்குள் சிக்கிக் கொண்டு அதிலேயே சுழன்று கொண்டு இருப்பாங்க. நான் அப்படி இல்லை. எனக்கு நேரம் கிடைக்கும் போது தான் படம் செய்தேன். அதுவும் பிடித்த படமாதான் செய்தேன்.

சில காரணங்களால் நிறைய பட வாய்ப்பினை தவிர்த்து இருக்கேன். தமிழில் நான் நடிச்ச படங்களை விரல் விட்டு எண்ணிடலாம். மலையாளத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு படங்கள் செய்திருக்கேன். ‘பழசிராஜா’ மலையாளத் துறையில் எனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த படம் முடித்த கையோடு எனக்கு திருமணமாச்சு. அமெரிக்கா போனாலும், ஷூட்டிங் போது வருவேன்.

எனக்குள் இருந்த ஆர்டிஸ்டையும் திருப்தி செய்த சந்தோஷம் இருந்தது. அம்மாவுடனும் நேரம் கழிக்க முடிந்தது. என் மகனுக்கு இரண்டு வயசு இருக்கும் போது இந்தியா வந்துட்டோம். இங்க வந்த பிறகு நிறைய படம் செய்வதற்கான வாய்ப்பு வந்தது. விஜய் சேதுபதியோட ஒரு படம் செய்திருக்கேன். இன்னும் ரிலீசாகல. கோவிட் நேரத்தில் வெப் சீரியலில் நடிச்சேன். அப்பதான் திருச்செல்வம் அவர்கள் என்னை அணுகினார். நான் அமெரிக்காவில் இருந்த போதே அவர் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு அளித்தார். சினிமா வேண்டும் என்றால் அமெரிக்காவில் இருந்து வரலாம். சீரியல் கஷ்டம். அதனால அப்ப செய்ய முடியல.

நான் இந்தியா வந்த பிறகு மீண்டும் என்னை எதிர்நீச்சல் தொடருக்காக அணுகினார். அவர் ெசான்ன கதை எனக்கு பிடிச்சிருந்தது. பொதுவா எல்லா தொடரிலும் நாயகி மட்டும்தான் எல்லா பிரச்னையையும் தன் தலையில் போட்டுக் கொள்வாள். இது அப்படி இல்லாமல் நான்கு பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது போல இருந்தது. மேலும் சன் டிவி என்னுடைய தாய் வீடு. நான் ‘தங்க வேட்டை’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி இருக்கேன்.

கதையும் பிடிச்சிருந்ததால் சரின்னு சொன்னேன். இந்த தொடரில் என்னுடைய பெயர் ஈஸ்வரி. என் முதல் படத்தின் கதாபாத்திரத்தின் பெயரும் ஈஸ்வரி என்பதால். ஒரு சென்டிமென்டுக்காக அந்த பெயரை வைக்க டைரக்டரிடம் சொன்னேன். சீரியல், ஓ.டி.டின்னு போயிட்டா சினிமா வாய்ப்பு வராதுன்னு சொல்வாங்க. அந்த மனநிலை இப்ப மாறி இருக்கு. இந்த மாற்றம் எனக்கு பிடிச்சிருக்கு’’ என்றவர் தன் ஃபிரண்ட்ஸ் பற்றி பகிர்ந்தார்.

‘‘நான் இன்ட்ரோவர்ட்ன்னு சொல்ல முடியாது. அதே சமயம் எக்ஸ்ட்ரோவர்டும் இல்லை. யாரிடமும் உடனடியா பேசமாட்டேன். ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்த பிறகு தான் ஃபிரண்டாவேன். அந்த வகையில் என்னுடன் பள்ளியில் படிச்சவங்களுடன் நட்பு இன்றும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் இருந்த போது தொலைபேசி மூலமா பேசிக் கொள்வோம். இந்தியா வந்த பிறகு எல்லாரும் சேர்த்து ஒரு டிரிப் போகலாம்னு முடிவு செய்தோம்.

என்னதான் நாம பேசி பழகினாலும், எல்லாரும் ஒன்றாக இருக்கும் போதுதான் நமக்குள் இருக்கும் அந்த நட்பு பிணைப்பு அதிகமாகும். தாய்லாந்திற்கு டிரிப் பிளான் செய்தோம். பொதுவாக பெண்கள் மட்டுமே செல்லக்கூடிய டிரிப் எப்போதும் சுவாரஸ்யமா இருக்கும். அவங்க அவங்களாக இருப்பது நண்பர்கள் முன்னிலையில்தான். அந்த நாட்களை மறக்கவே முடியாது. அவ்வளவு சந்தோஷமா இருந்தது. எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். பசங்க காலையில் பள்ளிக்கு அவசரமா கிளம்ப வேண்டியது இருக்காது. குறிப்பா சமைக்க வேண்டாம். அதுவும் இந்த டிரிப்பில் நான் ராணி மாதிரி இருந்தேன். காரணம் ஒவ்வொருத்தர் ஒரு பொறுப்பு எடுத்துக்கிட்டாங்க.

ஒருத்தி டிக்கெட் புக் செய்தா. ஒருத்தி அங்க தங்கி ஓட்டல் பார்த்துக்கிட்டா. இன்னொரு ஃபிரண்ட் எல்லாரையும் ஒருங்கிணைத்தா. மற்றொரு தோழி வரவு செலவு பார்த்துக் கொண்டா. நான் முன்பே சொல்லிட்டேன். என்கிட்ட பொறுப்பு கொடுக்காதீங்கன்னு. எந்த டென்ஷன் இல்லாம அந்த டிரிப்பை ஜாலியா என்ஜாய் செய்தோம். இதைப் பார்த்து பலர் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ஜாலியா இருக்கீங்கன்னு சொல்லுவாங்க. ஆனால் அந்த இரண்டு நாள் சந்தோஷத்திற்கு நாங்க எவ்வளவு பிளான் செய்திருப்போம்ன்னு யாரும் யோசிப்பதில்லை. முதல்ல கணவர் ஒத்துக்கணும். அடுத்து சாப்பாட்டிற்கான ஏற்பாடு செய்யணும். பசங்கள மாமியார் பார்த்துக்க சம்மதிக்கணும். இப்படி பல கட்டங்களை தாண்டி தான் நாங்க ஒரு இடத்துக்கு போக முடியும்.

அந்த டிரிப்பிற்கு பிறகு வருடம் ஒரு முறை எல்லாரும் சந்திக்க திட்டமிட்டிருக்கோம். இதற்காக ஃபேன்சியான இடத்திற்கு தான் ேபாக வேண்டும்னு இல்லை. யாருடைய வீட்டிலோ அல்லது காபி ஷாப்பில் அல்லது ஒரு டின்னருக்கு கூட பிளான் செய்யலாம். கடந்த மாசம் எல்லாரும் பெங்களூரில் ஒரு தோழியோட வீட்டில் சந்தித்தோம். நாங்க மட்டும் சந்திப்பது மட்டுமில்லாமல் எங்க பசங்களையும் உடன் கூட்டிக் கொண்டு போவோம். எல்லாருக்கும் ஒரே வயதுள்ள பசங்க இருக்காங்க. இவங்க எல்லாரும் செல்போன் என்ற தொழில்நுட்பத்திற்குள் வாழ்றாங்க. இப்படி போகும் போது மற்றவர்களுடன் பேசவும் நேரம் செலவிடவும் முடியும்.

நான் சென்னை மட்டுமில்லாமல் மதுரையிலும் படிச்சேன். அந்த பள்ளியில் ஒரு சில நண்பர்கள் இருக்காங்க. கடந்த மாதம் மதுரையில் எல்லாரும் ரீயூனியன் செய்தோம். நாங்க தொடர்பில் இருந்தாலும், 20 வருஷம் கழிச்சு நேரில் சந்தித்துக் கொண்டோம். ரொம்பவே மனசுக்கு நெருக்கமா இருந்தது. இந்த வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதை நல்ல விதமா சந்தோஷமா வாழலாமே’’ என்றவர் கலைத் துறையில் உள்ள நட்புகளைப் பற்றி விவரித்தார்.

‘‘சினிமா பொறுத்தவரை எனக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் கிடையாது. ஒரு சிலரைப் பிடிக்கும். அதில் நான் அட்மையர் செய்தவர் விஜய் சேதுபதி. நடிகரா பிடிக்கும். அவருடன் படம் செய்த போது நடிகரையும் தாண்டி தனிப்பட்ட மனுஷனா அவரைப் பார்த்தேன். இப்படியும் ஒருவரான்னு ஆச்சரியப்பட்டேன். மளையாளத்தில் மம்தா மோகன்தாஸ். அப்புறம் கவுதமி மேம். நானும் அவங்களும் மலையாளத்தில் ஒரு ஷோ சேர்ந்து செய்திருக்கோம்.

அவங்களுக்கு என மேல தனிப்பட்ட பிரியம். இயக்குனர்களில் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சேரன் அவர்கள். மலையாளத்தில் மம்முட்டி. இவங்க எல்லாரும் பெரிய ஆர்டிஸ்ட்தான். ஆனா ஏதாவது ஒரு உதவி வேணும்னா முகம் சுளிக்காம செய்வாங்க. இப்ப ரீசென்ட்டா நானும் பிரசன்னாவும் ஒரு வெப்சீரிஸ் செய்திருக்கோம். 20 வருஷம் கழிச்சு மீண்டும் நானும் பிரசன்னாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். ஃபைவ் ஸ்டார் கேங் (நான், கிருஷ்ணா, பிரசன்னா மற்றும் சந்தியா) பொறுத்தவரை ஒரு ஆறு வருஷமா அப்பப்ப மீட் செய்கிறோம். எதிர்நீச்சல் சீரியல் பொறுத்தவரை பிரியதர்ஷினி கூட நான் ஏற்கனவே வேலைப் பார்த்திருக்கேன்.

அதனால அந்த பாண்டிங் எங்களுக்குள்ள இன்னும் இருக்கு. ஹரிப்பிரியா கலகலன்னு பேசிட்டு இருப்பாங்க. மது ரொம்ப சைலன்ட். அவள பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கும். சத்தியப் பிரியா அம்மா எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட். அந்த கெத்தே காண்பிக்க மாட்டாங்க. சபரி, விபு, கமலேஷ் எல்லாரும் ரொம்ப நல்லாவே பழகுவாங்க.

‘‘சீரியல் பொறுத்தவரை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமில்லை, படிச்சவங்களும் பார்க்கிறாங்க. அவங்கள அந்த கதாபாத்திரத்தோடு ரிலேட் செய்றாங்க.பெண்கள்  பிராட்மைண்டா இருந்தாலும், என்னுடைய துறையில் நான் மிளிர காரணம் எனக்கு கிடைச்சிருக்கும் சப்போர்டிவ் கணவர்ன்னு தான் சொல்றோம். ஆனால் இதை எத்தனை கணவர்கள் சொல்றாங்க. நான் அமெரிக்காவில் இருந்த போது வேலை செய்தேன்.

காரணம், படிச்ச டிகிரியை வீணாக்க விரும்பல. என்னுடைய அட்வைஸ் எப்போதும் இன்னொரு பிளான் வச்சிருங்க. படிப்பு மட்டுமில்லை, சொந்தமா தொழில் செய்தாலும், ஒரு பிளான் பி இருக்கணும். அது நம்முடைய இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுக்கும். எல்லாவற்றையும் விட இது பெண்களுக்கு ஒரு தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை தரும்’’ என்றார் கனிகா.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்