சமைக்க தெரிந்தால் நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்!



எனக்கு வேலைக்கு எல்லாம் விருப்பம் இல்லை. ஆனால், சுவையாக சமைக்க பிடிக்கும். அதே சமயம் எனக்கான ஒரு வருமானம் வீட்டில் இருந்தபடியே பார்க்கவும் விருப்பம். என்ன செய்றது தெரியலன்னு பல பெண்கள் புலம்புகிறார்கள். சமைக்க தெரிந்தாலே போதும் உங்களுக்கான வருமானம் உங்களைத் தேடி வரும்.
என்னதான் ஓட்டல் உணவு மேல் மோகம் இருந்தாலும், வீட்டு சாப்பாட்டிற்கு என தனிப்பட்ட விருப்பம் உண்டு. அப்படிப்பட்ட சுவையான வீட்டு உணவினை உங்களின் டைனிங் டேபிளுக்கே கொண்டு வந்து தருகிறது ‘ஷீரோ ஹோம் புட்ஸ்’ நிறுவனம். பல்லாயிரக்கணக்கான இல்லத்தரசிகளின் பங்களிப்போடு இந்நிறுவனம் தற்போது, சமையல் துறையில் தனக்கென பங்களிப்பினை வழங்கி வருகிறது. இதனை ஜெயஸ்ரீ தன் கணவர் திலக்குடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.

‘‘நாங்க 15 வருஷமா உணவுத்துறையில் இருந்து வருகிறோம். கேட்டரிங், உணவகம் என அந்தத் துறையில் எங்களுக்கு தனிப்பட்ட அனுபவம் உண்டு. அதன் அடிப்படையில் தான் ஊபர், ஸ்விகி என்ற உணவு வணிக துறையினை ஆரம்பிக்க விரும்பினோம். அதற்கான ஆய்வில் இறங்கிய போது தான் கொரோனா பாதிப்பு நம்மை முற்றிலும் புரட்டிப் போட்டது. அப்போது பலர் ஓட்டல் உணவினை விட வீட்டுச் சாப்பாட்டின் தேவை அதிகமாக இருந்ததை உணர்ந்தோம்.

ஊபர், சோமாட்டோ போன்ற உணவு வணிகங்கள் எல்லாரும் ஓட்டலில் இருந்து தான் உணவினை வீட்டில் சப்ளை செய்கிறார்கள். அதையே ஏன் வீட்டில் இல்லத்தரசிகள் சமைக்கும் உணவினை வழங்கக் கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. விரும்பிய உணவினை ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டுச் சாப்பாட்டினை ஒவ்வொரு ஏரியாவிலும் பெண்கள் ஏதா ஒரு விதத்தில் செய்து சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறார்கள். அதாவது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் அதனை வழங்கி வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட வீட்டுச் சாப்பாடு நம்முடைய ஏரியாவில் எங்கு கிடைக்கும் என்பதே பெரிய சவாலாக இருந்து வருகிறது.

சாப்பாடு பொறுத்தவரை நாம் நாளை என்ன சமைக்கப் போகிறோம் என்று முதல் நாள் இரவே முடிவு செய்வதில்லை. அன்று நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அது தான் நம் சமையல் அறையில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் கிளவுட் கிச்சன் மூலம் உணவினை தயார் செய்து கொடுப்பவர்கள் 24 மணி நேரத்திற்கு முன்னரே ஆர்டர் செய்ய வேண்டும். காலை உணவு தேவை என்றால் முதல் நாள் இரவே சொல்ல வேண்டும் என்ற பல நிபந்தனைகளை கூறுகிறார்கள்.

இவர்களுக்கு தங்களுக்கான வாட்சப் குழு அமைத்து அதன் மூலம் தான் செயல்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதையே ஒரு நிறுவனமாக யாரும் செயல்படுத்தவில்லை. அது தான் எங்களின் சக்சஸாக அமைந்தது. 2020ல் முதலில் 50 கிச்சன் பார்ட்னர்களோடு எங்களின் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது 500க்கும் மேற்பட்டவர்கள் எங்களுடன் இணைந்து வெற்றியோடு செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவருமே வீட்டில் இருந்தபடியே சமையல் செய்து தரும் இல்லத்தரசிகள்.

கொரோனா காலத்தில் உணவகம் வைத்திருப்பவர்கள் கூட பின்பற்றிய முறைதான் கிளவுட் கிச்சன். அதாவது சமைக்கும் இடத்திலிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு செல்வதுதான். இந்த முறையை  வீட்டுச் சமையலிலும்  சாத்தியமாக்க முடியும் என்பதற்கு எங்க ஷீரோ ஃபுட்ஸ் ஒரு உதாரணம். அதாவது வாடிக்கையாளர்கள் எந்த ஏரியாவில் இருந்தாலும் ஷீரோ ஹோம் ஃபுட்ஸ் மூலம் உணவை பெற்றுக் கொள்ளலாம்’’ என்றவர் இதன் செயல்பாட்டினைப் பற்றி விவரித்தார்.

‘‘சாதிக்கும் ஆண்கள் ஹீரோ என்றால், சாதிக்கும் ெபண்கள் ஷீரோ... இதுதான் எங்களின் தாரக மந்திரம். இல்லத்தரசிகளுக்கு பல பொறுப்புகள் உள்ளது. அவர்கள் ஏதாவது ஒரு வகையில் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுவும் வீட்டில் இருந்தபடியே. எங்களின் நிறுவனத்தில் இணையும் பெண்களுக்கு எந்தவித முதலீடும் கிடையாது. சமைக்க தெரிந்தால் போதும். அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். அப்படி இருந்தால் அவர்கள்தான் ஷீரோ.

சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ் முறைப்படி சமைக்க தெரியும். ஆந்திராவில் இருப்பவர்களுக்கு ஆந்திரா சமையல். இப்படி அவரவர் முறைப்படியே சமையல் செய்தாலே போதும். எங்க நிறுவனத்தில் ஒரு ஆந்திரா பப்பு, கேரளா அவியல் ஆர்டர் செய்தால், அதே பாரம்பரிய சுவையுடன் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை வரவேண்டும்.

அதை எங்களின் ஷீரோ ஃபுட் தொழில்நுட்பம் மூலம் அவர்களுக்கு சொல்லித் தருகிறோம். அதாவது ஒரு ஆர்டர் வந்தால் 20லிருந்து 30 நிமிடங்களில் எப்படி சமைத்து, அதை பேக் செய்து கொடுக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறோம். ஆர்டர் வந்தால் அதை எவ்வாறு டெலிவரி செய்ய வேண்டும், எந்த உணவில் என்ன பொருட்கள் சேர்க்க வேண்டும், அதை எப்படி எளிதாக சமைக்க வேண்டும் என்பதையும் நாங்க சொல்லித் தருகிறோம்.

எல்லாவற்றையும் விட எங்களிடம் இணைந்திருக்கும் அனைத்து ஷீரோக்களுக்கும் FSSAI உரிமம் பெற்றுக் கொடுக்கிறோம். மேலும் அவர்கள் சமைத்த உணவினை டெலிவரி செய்யவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். எல்லாவற்றையும் விட இரண்டு பேர் அதே ஏரியாவில் இருந்தால், ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்துதான் அவர்களுக்கான ஆர்டர் வரும்படி அமைத்திருக்கிறோம். இதன் மூலம் அனைவருக்கும் சமமான ஆர்டர்கள் கிடைக்கும். அதன் மூலம் அவர்கள் வருமானமும் பார்க்க முடியும். எங்களை பொறுத்தவரை் ஒரு வீட்டு அடுப்பங்கறையிலிருந்து கஸ்டமருக்கு நல்ல முறையில் உணவு அளிக்க முடியும்  என்ற அடிப்படையில்தான் இதை செய்து கொண்டிருக்கிறோம்.

தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் பிரான்சைசி கொடுத்து வருகிறோம். இதன் மூலம் அந்த ஏரியாவில் உள்ள ஷீரோக்களை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். இதன் மூலம் அனைத்து மாநிலங்களில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தர முடிகிறது’’ என்றவர் அது இயங்கும்
முறையினை விவரித்தார்.

ஷீரோ ஹோம் ஃபுட்ஸில் காலையிலிருந்து இரவு வரையில் டிபன், சாப்பாடு, ஸ்நாக்ஸ், டின்னர் என அனைத்து உணவுகளும் வழங்கி வருகிறோம். ஒரு உணவகத்தில் என்ன உணவுகள் உள்ளன என்பதை மெனுவில் கொடுத்திருப்பாங்க. அதேபோல்தான் எங்களின் இணையத்திலும் அளித்திருக்கிறோம். சிலர் சாதம் வைத்துக் கொள்வார்கள். குழம்பு மற்றும் பொரியல் மட்டும் போதும்னு நினைப்பார்கள். அதனால் விரும்பும் உணவை தனித்தனியாக ஆர்டர் வாங்கிக் கொள்ளலாம். சிலர் வீட்டில் மாவரைத்து வைத்து விட்டு எங்களிடம் குருமா மட்டும் ஆர்டர் செய்வார்கள்.

சிலர் மாவு மட்டுமே வாங்கிக் கொள்வார்கள். எங்களின் கிச்சன் பார்ட்னர்கள் 150க்கும் மேற்பட்ட வெரைட்டி உணவுகளை  செய்து கொடுக்கிறார்கள். சாம்பார், ரசம் இவற்றிலேயே ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. வீட்டிலிருந்தபடியே தனது அம்மாவோ, அக்காவோ சமைத்துக் கொடுப்பது போன்ற உணர்வு எங்க உணவு கொடுக்கிறது’’ என்றார் ஜெயஸ்ரீ.

ஜெனிஃபா