மலையேறுவது என்னுடைய அடையாளம்! கௌசல்யா தேவி



பொழுதுபோக்கில் பல வகை உள்ளன. அதில் இன்று பெரும்பாலானவர்கள் விரும்புவது மலை ஏறுதல். அதாவது, டிரக்கிங். இதற்கென தனிப்பட்ட கழுக்களம் உள்ளன. ஆண், பெண் என பலரும் இந்த பொழுதுபோக்கில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட பொழுதுபோக்கினை தன்னுடைய அன்றாட பழக்கமாக கொண்டுள்ளார் கௌசல்யா தேவி.
இவர் ஊட்டி, பெங்களூர், மேகாலயா, கர்நாடகா பகுதியில் உள்ள முக்கொம்பு, இமாச்சலம் என பல இடங்களுக்கு சென்று அங்கு டிரக்கிங் செய்துள்ளார். மாஸ் கம்யூனிகேஷன், ஆங்கில இலக்கியம், சைக்காலஜி, வரலாறு, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் என பல பட்டங்களை பெற்றிருக்கும் இவர் பகுதி நேரமாக கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாப்ட் ஸ்கில்ஸ் குறித்த பயிற்சி அளித்து வருகிறார். மேலும் டிரக்கிங் என தனி குழு அமைத்து அதன் மூலம் பலருக்கு அந்த அனுபவங்களை உணர செய்கிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் ஊட்டி. அங்கு வனாகா என்னும் பழங்குடி இனம் உள்ளது. அந்த இனத்தை சேர்ந்தவள் நான். ஊட்டியில் நாங்க இருக்கும் இடத்தில் பெரிய அளவு கல்விக்கான வசதி அதிகம் கிடையாது என்பதால் பெங்களூருக்கு நாங்க குடும்பத்துடன் வந்து செட்டிலாயிட்டோம். நான் இங்குதான் படிச்சேன், வேலையும் இங்கு தான் பார்க்கிறேன். மலை ஏறுவது என்பது என் ரத்தத்தில் ஊறி இருக்கும் விஷயம். காரணம் நான் ஊட்டியில் எங்க கிராமத்தில் வசித்த போது, எங்க வீட்டை விட்டு வெளியே வந்தாலே மலை தான்.

கடைக்கு போக, பால் வாங்க, ஏன் நாங்க விளையாட போகணும் என்றாலும் மலை மீது ஏறி இறங்கி தான் போகணும். ஒரு இடத்திற்கு செல்ல மலையினை கடந்து செல்ல வேண்டிய சூழல் என்பதால், சின்ன வயசில் இருந்தே எங்க இன மக்களுக்கு மலை ஏறுவது என்பது சர்வசாதாரணமாக பழகிவிட்டது.
அதைத்தான் இங்க சிட்டி மக்கள் டிரக்கிங்னு செய்றாங்க. எனக்கும் அது தான் டிரக்கிங்னு தெரியாது. இங்க டிரக்கிங் செய்யும் போது காலில் உயர் ரக ஷூ, கையில் ஒரு சின்ன குச்சி, பையில் தண்ணீர், உணவுப் பொருட்கள் எல்லாம் கொண்டு செல்கிறார்கள். கிராமத்தில் அதெல்லாம் கிடையாது. வெறும் காலில் தான் நாங்க மலையை கடந்து செல்வோம்.

அதனால் எங்காவது வழுக்கி விழுந்துடுவோமேன்னு பயம் இருக்காது. வெயில், மழை மற்றும் பனிக் காலத்தில் மலையில் எப்படி பயணிக்க வேண்டும்னு தெரியும். அதனால் எங்களுக்கு மலையைக் கடப்பது பெரிய விஷயமாக இருந்ததில்லை. பெங்களூர் வந்த பிறகு இங்குள்ள சின்ன சின்ன இடங்களுக்கு விடுமுறை நாட்களில் செல்ல ஆரம்பித்தேன். நான் மட்டுமே எனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்பிடுவேன். சின்னதா ஒரு டிரக்கிங் செய்திட்டு வருவேன். இப்படித்தான் பெங்களூரில் டிரக்கிங் என்னுடைய பொழுதுபோக்கா ஆரம்பமாச்சு.

அதன் பிறகு பெங்களூரில் டிரக்கிங் குழு இருப்பது பற்றி கேள்விப்பட்டேன். அவர்களுடன் இணைந்து பயணித்தேன். நேரம் கிடைக்கும் போது நான் தனியே பயணம் செய்வேன். அதன் பிறகு நானே ஒரு குழு அமைத்தேன். அதில் விருப்பமுள்ளவர்களை அழைத்து செல்ல ஆரம்பித்தேன்’’ என்றவர் டிரக்கிங் செய்யும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி
விவரித்தார்.

‘‘டிரக்கிங் செய்வது எல்லாருக்கும் பழக்கம் இருக்காது. முதன் முதலில் செல்ல விரும்புபவர்கள் உடனே பெரிய இடத்திற்கு செல்லக்கூடாது. சின்ன சின்ன இடங்களுக்கு சென்று பழகிய பிறகு அதன் பிறகு கொஞ்சம் பெரிய இடங்களுக்கு செல்லலாம். முதலில் ஒரு நாள் செல்ல வேண்டும். அதன் பிறகு இரண்டு நாள், மூன்று நாள் என கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருப்பது எல்லாம் சின்னச் சின்ன மலைகள்தான். இங்கு பழகுவது சுலபம். ஆனால் வடநாட்டில் உள்ள மலைகள் உயரம் அதிகமாக இருக்கும். அங்கு ட்ரக்கிங் செய்வது கொஞ்சம் கடினம் என்றாலும் பழக்கப்பட்டுவிட்டால் அதையும் கடந்துவிடலாம்.

இதற்கென ஒரு பேக்கேஜ் போல் அமைத்து தருகிறார்கள். சாப்பாடு, தண்ணீர், தங்க இடம் மற்றும் அழைத்து செல்ல ஒரு ஆள் என எல்லா வசதிகளும் செய்து தருகிறார்கள். அவர்களையும் அணுகலாம். சில இடங்களில் தனியாக செல்லும் போது அங்கு சரியான உணவு எல்லாம் கிடைக்காது.

சமமான தரைத்தளத்தில் கூட படுக்க முடியாது. டென்ட் அடித்து தான் படுக்க வேண்டும். சில நேரங்களில் பாம்பு அல்லது காட்டு மிருகங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அந்த நேரத்தில் கிடைப்பதை உண்ண பழகிக் கொள்ள வேண்டும். கையில் மேகி போன்ற சிம்பில் உணவினை எடுத்துச் சென்று நாமே சமைத்து சாப்பிடலாம். சில சமயம் ருசி தெரியாத அளவிற்கு கூட டிரக்கிங் சோர்வினை தரும். சாப்பிட்டால் போதும் என்ற நிலை கூட வரும். அந்த சமயத்தில் பிஸ்கட், பன், கோதுமை ரொட்டி கள் உதவும்.

காடுகள், மலைகளில் செல்பவர்கள் 100 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கு விட்டுவிட்டு வரக்கூடாது. பிஸ்கெட், பிரட் கவர்களை அங்கேயே போட்டுவிட்டு வரக்கூடாது. அதை ஒரு சின்ன பையில் சேகரித்துக் கொள்ள வேண்டும். பின்பு மலை இறங்கியதும் குப்பைத் தொட்டியில் அப்புறப்படுத்த வேண்டும். இயற்கையை அசுத்தப்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை. அதேப்போல் இயற்கையில் இருந்து எதையும் எடுத்துச் செல்லவும் நமக்கு உரிமை இல்லை. நாம் வந்து போன நினைவுகளை மட்டுமே இயற்கையிடம் இருந்து பெற்றுச் செல்ல நமக்கு அனுமதியுண்டு’’ என்றவர் தன் அனுபவங்களை பகிர்ந்தார்.

‘‘இமய மலை... எல்லாரும் வாழ்நாளில் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படும் மலைகளில் ஒன்று. அங்கு செல்வது கடினம் என்றாலும் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு தான் மேலே ஏறிச் சென்றேன். கழுகுப்பார்வையில் மலையில் இருந்து பார்த்தால் புத்தர் படுத்திருப்பதைப் போன்ற தோற்றம் இருக்கும். பார்ப்பதற்கே அவ்வளவு அழகாகவும் ரம்மியமாகவும் இருக்கும். உடம்பில் இருக்கும் வலிகள் எல்லாம் அங்குள்ள பனிக்கட்டிகள் போல் கரைந்திடும். அந்த அனுபவத்தை இன்று நினைச்சாலும் என் உடல் எல்லாம் சிலிர்த்திடும்.

ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள ஜெய்சல்மர் நகரத்தின் தென்மேற்கில் 27 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கிராமம் உள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட கிராமம். இரண்டு தெருக்கள் அதில் 410 வீடுகள். 19-ஆம் நூற்றாண்டில் ஜெய்சல்மர் சமஸ்தானத்தின் திவான் சலீமின் கொடூர செயல்களால், கிராமத்து மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு, இரவோடு இரவாக வெளியேறினர். இப்போது அங்கு யாரும் இல்லை. அதைச் சுற்றிப் பார்க்க சென்றோம்.

பகலிலேயே இரவு போல் இருந்தது. வீடுகள் அனைத்தும் செங்கல் மற்றும் கருங்கல்லால் கட்டப்பட்டு இருந்தது. அங்கு மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் மட்டுமில்லாமல் அவர்களின் நினைவுகளையும் உணர முடிந்தது. அங்கு தான் முதன் முதலில் ஒட்டகத்தில் பயணித்தேன். ஒட்டகத்தில் பயணம் செய்வது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் கடினமானது. கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் இருக்கும். நம்மை அதன் மேல் சரியாக பேலன்ஸ் செய்துக் கொண்டு அமர வேண்டும். அது நடக்கும்போது முதுகுப்பகுதி நிலையாக இருக்காது. அதனால் நம்மால் சரியாக அமர முடியாது. கவனமாக அமர வேண்டும்.

என்னுடைய அடுத்த மறக்க முடியாத பயணம் 2017ல் மேகாலயா சென்றது. அங்கிருந்த மனிதர்கள் மிகவும் பின் தங்கி இருந்தார்கள். அவர்களுக்கு வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டிவி, எதுவுமே தெரியல. நாங்கள் அவர்களை புகைப்படம் எடுப்பதை பார்த்து பயந்து போய் ஒளிந்து கொண்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு அது என்ன என்று புரிய வைத்த பிறகுதான் எங்க அருகில் வந்தார்கள். அவர்கள் தாய்வழி மரபினைதான் பின்பற்றி வருகிறார்கள். அதாவது ஒரு பெண் அவளது பிறந்த வீட்டில் கடைபிடித்து வந்த பழக்க வழக்கத்தினை புகுந்த வீட்டிலும் கடைபிடிப்பாள். புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த பழக்கத்திற்கு கணவன் மாமியார், மாமனார் உட்பட மாற வேண்டும்.

அதை பார்க்க மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது. எனக்கு 10 ஆயிரம் மைல்கள் கடக்க வேண்டும். ஆயிரம் மலைகளை ஏற வேண்டும் என்ற இலக்கு எல்லாம் இல்ைல. என் வாழ்நாளில் என்னால் முடிந்த அளவிற்கு டிரக்கிங் செய்ய வேண்டும். அப்புறம் மலையில் இருந்து பாராசூட்டில் குதிக்க வேண்டும்’’ என்று கூறும் ெகளசல்யாவிற்கு சினிமா துறையில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியா இருக்க விருப்பமாம்.

‘‘சினிமா என்றால் நடிகை என்று தான் ஆக வேண்டும் என்றில்லை. அதில் பல துறைகள் உள்ளது. அதில் பெண்கள் தங்களின் திறமையினை பதிவு செய்யலாம். அதன் அடிப்படையில் சினிமா கலை மேல் ஆர்வம் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறேன். சினிமா துறைக்குள் புதியதாக வருபவர்களுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். அந்த நிலையை உடைக்க விரும்பினேன்.

பெண்களுக்கு ஒரு பிளாட்பார்ம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் குறும்பட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன். இதில் பெண்கள் இயக்கிய 20 குறும்படங்கள் இடம் பெற்றது. அதிலிருந்து ஒன்பது குறும்படங்களை தேர்வு செய்து  திரையிட்டோம். இதில் மூன்று திரைப்படங்களை சிறந்த படமாக தேர்வு செய்தோம். இந்த மூன்று படங்களுமே பெண்களால் இயக்கப்பட்டது. இப்போது அவர்கள் திரைப்படம் இயக்கும் முயற்சியில் உள்ளனர். இந்த பணியினை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ என்றார் ெகளசல்யா தேவி.