வீட்டிலிருந்து விலகி... சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்
எங்களுக்குப் பிறகு எங்கள் குழந்தைகள் நிலை என்னவென்பதே மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பெற்றோர்களது விடை தெரியாத கேள்வி..? இதற்குத் தீர்வு சொல்லும் முயற்சியாய், சிறப்புக் குழந்தைகளை ஒருங்கிணைத்து, சிலநாட்கள் பெற்றோரை விட்டு அவர்களைப் பிரித்து, தனித்துவமாக அவர்கள் வாழும் பயிற்சிக்கான சிறப்பு முகாம்களை தன்னார்வலர்களின் துணையோடு நடத்தி வருகிறார் ரஞ்சனி.
சிறப்பு முகாம் குறித்து அவரிடம் பேசியபோது...‘‘நானும் ஒரு சிறப்புக் குழந்தையின் அம்மா. பி.இ. முடித்து ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தவள். என் மகனுக்காக அந்த வேலையை
விட்டுவிட்டேன். ஒரு சிறப்புக் குழந்தையின் தாய் என்கிற முறையில், இந்தக் குழந்தைகளை என்னால் நன்றாகவே புரிந்துகொள்ள முடியும் என்ற ரஞ்சனி, என் முதல் குழந்தைக்கு மைல்ட் ஆட்டிசம்.
இப்போது அவனுக்கு வயது 13. உங்கள் குழந்தைக்கு ‘ஆட்டிசம்’ என மருத்துவர்கள் முதலில் சொன்னபோது, அந்த வார்த்தை எனக்கு கேட்கப் புதிதாய் இருந்தது. முதல் ஐந்தாறு வருடங்கள் அங்குமிங்குமாய் குழந்தையை அழைத்துக் கொண்டு ஓடியாடி அலைந்து, பலரையும் நம்பி ஏமாந்ததே அதிகம். ஆட்டிசம் குறித்து பத்து சதவிகிதம் மட்டுமே நல்ல வழிகாட்டுதல்களை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்தக் குழந்தைகளின் பெற்றோரை சுரண்டுபவர்களே இங்கு அதிகமாக உள்ளனர். ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர் தனியாய் முட்டிமோதி அடிபட்டுதான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் இருக்கிறது. காரணம், ஆட்டிசம் தொடர்பான புரிதல் மற்றும் நெட்வொர்க்கிங் இங்கு மிகமிகக் குறைவு என்றவர், நான் பார்த்தவரை பல பெற்றோர் இதே உணர்வில்தான் இருக்கிறார்கள். முதல் 5 வருடங்கள் நான் என் குழந்தையோடு பட்ட கஷ்டங்களையும் பிரச்சனைகளையும், புதிதாக வரும் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டுதலாய் கொடுக்கவே முதலில் நினைத்தேன்.
குறிப்பாக சிறப்புக் குழந்தைகளுக்கு மூடப்பட்ட அறைக்குள் அமர வைத்து தெரபி கொடுப்பது மிகவும் தவறான அணுகுமுறை. இதில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினேன். பாதிக்கப்பட்ட பெற்றோரில் சிலரை ஒருங்கிணைத்து அவர்களை குழுவாக்கி திறந்தவெளி முகாம்களை, 6 மாதத்திற்கு ஒருமுறை வெவ்வேறு ஊர், வெவ்வேறு சூழல் என கடந்த 5 வருடமாக சிறப்புக் குழந்தைகளுக்காகவே நடத்திவருகிறேன்.
மூன்றரை வயது குழந்தையில் தொடங்கி 32 வயது வரை என்னுடைய முகாமில் சிறப்புக் குழந்தைகள் வந்து பங்கெடுக்கிறார்கள். எம்.எஸ்.டபிள்யூ, சோஷியாலஜி மாணவர்கள் தன்னார்வலர்களாய் உடனிருந்து சிறப்புக் குழந்தைகளுக்கு உதவுகிறார்கள், வழிகாட்டுகிறார்கள். கூடவே சைக்கோ தெரபிஸ்ட், ஸ்பெஷல் எஜுகேட்டர், பிட்னஸ் கோச் மற்றும் தேவைப்படுகிற தெரபிஸ்டுகளையும் அவ்வப்போது முகாமுக்கு அழைக்கிறோம்.
திறந்தவெளி முகாம்களில் குழந்தைகளை நாங்கள் ஒரே இடத்தில் அடைத்து வைப்பதில்லை. அவர்கள் சுதந்திரமாக விளையாட நிறையவே இடம் இருக்கிற பகுதியாக தேர்ந் தெடுப்போம். கூடவே நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டுகள், கேம்ப் ஃபயர் போன்ற பொழுதுபோக்கும், சிட்டிங் ஆக்டிவிட்டிஸ், குரூப் ஆக்டிவிட்டிஸ் போன்ற தேவையான தெரபிகளையும் செய்ய வைக்கிறோம். பெற்றோர்களுக்கும் தங்களின் சிறப்புக் குழந்தையினை தனியாக விட்டுவிட்டுப் பிரிவது மனதளவில் கஷ்டம்தான். அவர்கள் எண்ணத்தை முதலில் உடைத்து, முழுநம்பிக்கையை கொடுப்பதே எங்கள் முகாமின் மிக முக்கிய நோக்கம்.
குடும்பத்திற்கு உள்ளேயும் சரி, வெளியிலும் சரி, சிறப்புக் குழந்தைகள் எங்கு சென்றாலும் தங்கள் அம்மாவை மட்டுமே முழுமையாக சார்ந்து வாழ்கிறார்கள். குழந்தைகள் வளர வளர அவர்களின் பின்னால் அம்மாக்கள் ஓடுவது கடினமான ஒன்று. அதுவும் அடுத்தடுத்து குழந்தைகளுடைய பெற்றோர்கள் நிலை இன்னும் மோசம்.
நாங்களில்லாமல் எங்கள் குழந்தை தனியாக இருக்கிறது. தானாகவே செயல்படுகிறது. அடிப்படைத் தேவைகளை கவனித்துக்கொள்கிறது என்ற நம்பிக்கை பெற்றோருக்கு முழுமையாக வரவேண்டும். அதற்காகவே இந்த திறந்தவெளி கேம்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறேன் என்கிறார் ரஞ்சனி.
முதல் நாள் என்னை வீட்டுக்கு அனுப்புங்க எனப் பெற்றோரை நினைத்து அழும் குழந்தை.. திறந்தவெளி முகாம்களின் செயல்பாடுகள் பிடித்துப்போகவே, ஒரே நாளில் முகாமில் உள்ள மற்ற குழந்தைகளோடு அடாப்டாகி விடுகிறார்கள். அடுத்தமுறை கேம்பிற்கு வருவதற்குத் தேவையானதை அவர்களாகவே எடுத்து பேக் செய்து தயாராகிறார்கள்.
சில குழந்தையால் தானாகவே எல்லாவற்றையும் செய்வதற்கு முடியும். இருந்தாலும் பெற்றோர் காட்டும் சலுகையால் செய்ய முயற்சிப்பதில்லை. அப்படியான குழந்தைகளை அவர்களையே முகாம்களில் செய்ய வைப்போம். அவர்களால் முடியாத நிலையில் மட்டுமே தேவைப்படும் இடத்தில் உதவி செய்வோம். ‘தங்களின் வழக்கமான நடவடிக்கைகளிலிருந்து, சிறப்புக் குழந்தைக்கும்... குழந்தையின் அம்மாவுக்கும் இதுவொரு சிறிய மாற்றம்... அவ்வளவே’ என்ற ரஞ்சனி, சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களாய், நாங்கள் பொது சமூகத்தின் முன் கேட்பது திறமையோ.. புத்திசாலித்தனமோ.. வெற்றியோ... சாதனையோ... அதற்கான வாய்ப்புகளோ இல்லை. இதிலெல்லாம் எங்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை.
எங்கள் குழந்தைகளும் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. தேவை எங்களுக்கு மகிழ்ச்சியான சூழல். ஆரோக்கியமான வாழ்வு. சிறப்புக் குழந்தைகளின் வேலைகளை அவர்களே செய்யும் கட்டமைப்பு. எங்களுக்கு இதுவே மிகப் பெரிய விஷயம் என்றவர், சிறப்புக் குழந்தைகளின் பிரச்னைகளை அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களாய் நாங்கள் மட்டுமே பேசி வாழ்வது மாதிரியான நிலையினை மாற்றி, ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும் இந்த முகாம்களை கொண்டு போக நினைக்கிறோம்’’ என்று விடைபெற்றார் சிறப்புக் குழந்தைகளுக்கான முகாம்களை ஒருங்கிணைக்கும் ரஞ்சனி.
விக்கி, தன்னார்வலர்
தன்னார்வலராக வருமானத்திற்காகத்தான் இந்த வேலைக்குள் வந்தேன். பார்க்கும் சிறப்புக் குழந்தைகளையெல்லாம், மனநிலை சரியில்லாத குழந்தை என்றுதான் முதலில் தவறாக நினைத்தேன். ஆனால், இவர்களோடு பயணிக்க ஆரம்பித்த பிறகே, இந்தனை விதமான டிசபிளிட்டி குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்தது.
நார்மலான குழந்தைகளே வீட்டில் பெற்றோர் சொல்வதைக் கேட்காமல் அடம் செய்வார்கள்தானே. அதுபோலத்தான் சிறப்புக் குழந்தைகளும். பெற்றோர் தங்கள் அருகே இல்லையென்றால், அவர்கள் வேலைகளை அவர்களாகவே செய்வதை நான் இந்த சிறப்பு முகாம்களில் தொடர்ச்சியாக பார்க்கிறேன்.
இந்தக் குழந்தைகள் தங்களுக்கான இலக்கு எதுவெனத் தெரியாமலே முழு எனர்ஜியோடு ஓடுகிறார்கள். பிகேவியர் தெரபி, உடற்பயிற்சி, ஆக்குபேஷனல் தெரபி இவையெல்லாம் தொடர்ந்து கொடுத்தால் கண்டிப்பாக மாற்றம் இருக்கிறது. முயற்சித்தால் இவர்களையும் நியர்பை நார்மல் வாழ்வை வாழவைக்க முடியுமென்பதை இவர்களோடு பழகிப் புரிந்துகொண்டேன்.
கலைச்செல்வி சிறப்புக் குழந்தையின் அம்மா
சிறப்புக் குழந்தையான என் மகளுக்கு இப்போது 21 வயது. எனக்குப்பிறகான அவளின் வாழ்வில், நானில்லாமல், மினிமம் சப்போர்ட்டுடன் அவள் வாழ்ந்து பழக வேண்டும். அதற்காகவே மூன்று நாள் இண்டிபென்டென்ட் லிவிங் கேம்பில் அவளை விட்டிருக்கிறேன். பல்வேறு மாவட்டங்கள், அதாவது சென்னை, கோவை, திருச்சி, திருப்பதியில் இருந்தெல்லாம் குழந்தைகள் இந்த சிறப்பு முகாமிற்கு வந்திருக்கிறார்கள்.
என்னைப் பிரிந்து என் மகள் இருக்கிறாள் என்பதைத் தாண்டி, சிறப்புக் குழந்தைகள் தங்கள் வேலைகளை அவர்களையே செய்ய வைப்பதற்கான பயிற்சிகளையும் வழங்குகிறார்கள். கூடவே பிகேவியர் தெரபி, உடற்பயிற்சி, விளையாடுவது, பாடுவது, தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்படுறது. இனி அடுத்தடுத்து நடக்கும் முகாம்களிலும் என் மகளைவிட நினைத்திருக்கிறேன்.
ஷாருக்கான், சைக்கோ தெரபிஸ்ட்
எனக்கு ஊர் மதுரை. இந்த சிறப்புக் குழந்தைகள் முகாமிற்காக நான் சென்னை வந்திருக்கிறேன். என் குழந்தை சிறப்புக் குழந்தை எனத் தெரிந்தும், பல பெற்றோர் வெளியில் சொல்லத் தயங்கி மறைத்து வைக்கும் நிலை இன்றும் இருக்கிறது.ஆட்டிசம் என்பது மனித மூளையின் ஒரு நிலை. இது குறையில்லை. தடங்கல். சுருக்கமாய் தங்களின் சிந்தனையை குழந்தைகள் வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் நிலை.
அவர்கள் மொழியில் பேசி, பிறகு நமது மொழியில் பேச முயற்சிப்பார்கள். இதை பெற்றோர் புரிந்துகொண்டு, அதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்க வேண்டும். ஆட்டிசம் குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நம்மால் நியர் பை நார்மலுக்கு மாற்ற முடியும். குழந்தைகள் இதுபோன்ற பொதுவெளிகளில் ஒன்றாக இணையும்போது கண்டிப்பாக மாற்றம் வரும்.
மற்றவர்களுடன் பழகி தங்களை சோஷியலைஸ் செய்ய இவர்கள் முதலில் தயங்குவார்கள். தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதற்காகத்தான் நான்கு சுவற்றுக்குள் வைத்து கொடுக்கும் தெரபியினை, திறந்தவெளிகளில், இயற்கையோடு இணைத்து, தெரபிகள் அனைத்தையும் விளையாட்டாக மாற்றி, குழுவாக செய்ய வைத்து, சோஷியலைஸ் செய்யத் தூண்டுகிறோம்.
முக்கியமாக சிறப்புக் குழந்தைகளுக்கான சிபிடி (congenital behavior therapy) தெரபியினை இசை மூலமாக கொடுக்கும் முயற்சியில் நான் இருக்கிறேன். இசையில் குழந்தைகள் தங்களை ஓப்பன்அப் செய்கிறார்கள். நமக்கு ரெஸ்பான்ஸ் செய்வது, ஐ கான்டாக்ட் செய்வது போன்ற மாற்றங்கள் இசை மூலம் அவர்களுக்கு வருகிறது. சிறப்புக் குழந்தைகளை பாட வைப்பது, மியூசிக் செய்ய வைப்பதென இவர்களை வைத்து ஒரு தனித்துவமான மியூசிக் பேண்ட் கொண்டுவரும் எண்ணமும் எனக்கு இருக்கிறது.
மீரா பாலாஜி,ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரி
சிறப்புக் குழந்தைகளுக்கான இந்த முகாம் என்பது மிகவும் தேவையான வரவேற்க வேண்டிய ஒன்று. மாதத்தில் மூன்று நாளாவது இந்த முகாமினை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்போதுதான் பெற்றோர்கள் இல்லாமல் தாங்களாகவே வாழும் பழக்கம் குழந்தைகளுக்கு வரும். இதில் பெற்றோருக்கும் மாதத்தில் மூன்றுநாள் சின்ன மாற்றம் கிடைப்பதுடன், குழந்தையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் கிடைக்கிறது. இதில் சிறப்புக் குழந்தைகளைப் பற்றிய புரிதல் நம்முடைய பொது சமூகத்திற்கு ஏற்படுத்த வேண்டியதும் மிக முக்கியமான ஒன்று.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி
|