ஆட்டிசம் குழந்தைகளின் அன்னை
மதுரை அண்ணா நகர் பகுதியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், சிறுவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார் ஜேனட் ரஜினி. பள்ளி நிர்வாகியான இவர் இந்த குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை தரும் தாயாக, அன்பு காட்டும் அன்னையாக, செயல்பட்டு வருகிறார்.
*எத்தனையோ வேலைகள் இருக்கும்போது இந்தப் பணியில் ஈடுபட காரணம்?
கோவில்பட்டிதான் என் சொந்த ஊர். முதலில் “ஸ்பீச் தெரபிஸ்ட்”டாகத்தான் வேலை பார்த்து வந்தேன். அந்த சமயத்தில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்னிடம் பயிற்சிக்காக வருவாங்க. அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான சிறப்பு படிப்பு படிக்க வேண்டும்.
மதுரையில் தான் அந்த படிப்பு இருப்பதால் அங்கு சென்று படிக்க விரும்பினேன். என் கணவருக்கு வெளிநாட்டில் வேலை. அவரிடம் விவரத்தை சொன்ன போது அவரும் சம்மதித்தார். நான் மதுரைக்கு படிக்க சென்றால் என் இரு மகன்களையும் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் அவர்களை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு ஆட்டிசம் குறித்த பயிற்சியில் சேர்ந்தேன். அதன் பிறகு மதுரையில் உள்ள ஆட்டிசம் பயிற்சி பள்ளியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறேன்.
*இவர்கள் யார்?
இந்த குழந்தைகளை பார்த்தவுடனே கண்டுபிடித்து விடலாம். கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச மாட்டார்கள். மூன்று வயதிற்கு முன்பு வரை அவர்களுக்கு இந்த பாதிப்பு இருப்பதை கண்டறிய முடியாது. அதே சமயம் ஆரம்ப நிலையில் ஆட்டிசம் பாதிப்பினை கண்டறிந்தால், அதற்கான சிறப்பு தெரபி மற்றும் பயிற்சி மூலம் அவர்களை இயல்பான நிலைக்கு மாற்றலாம். காலம் கடந்து விட்டால் சிகிச்சை அளித்தாலும் பலன் கிடைக்காது.
ஆனால் அவர்கள் தொடர்ந்து பயிற்சியில் இருக்க வேண்டும். கோபம், முரட்டுத்தனம் மிக அதிகமாக இருக்கும். ஆட்டிசம் குழந்தைகளுக்கு “நியூராலஜி டிஸ்ஆர்டர்” என்றுதான் சொல்வார்கள். மூளையின் செல்கள் பாதிக்கப்படும் போது அது இந்த பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் பாதிப்பு வராமல் இருக்க படிப்பது, எழுதுவது, ஆக்குபேஷனல் தெரபி, பிசிக்கல் ஆக்டிவிட்டி என்று பயிற்சி தருவோம். எப்ேபாதும் அவர்களை ஒருவர் பராமரித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
ஆட்டிசம் குழந்தைகள் செய்த ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்துகொண்டே இருப்பார்கள். பார்ப்பதை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எளிதில் தூங்க மாட்டார்கள். ஒன்றை வேண்டும் என்றால் அது வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அதுவே வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சத்தம் போட்டு கத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்வார்கள். சிலர் கொஞ்சம் அதிகப்படியாக அடுத்தவர்களை அடிப்பார்கள், கடிப்பார்கள் அல்லது தன்னைத்தானே காயப்படுத்தி கொள்வார்கள். இவர்களை பூரணமாக குணப்படுத்த முடியாது என்பதால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
*உங்களின் பணி
பகல், இரவு என்று பாராமல் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பயிற்சிகளை அளித்து வருகிறேன். இவர்களுக்கு பல்தேய்ப்பது, குளிப்பது, சாப்பிடுவது, இயற்கை உபாதைகளுக்கு கழுவிக்கொள்வது வரை எதுவுமே தெரியாது. அதனை அவர்களின் தினசரி வேலையாக செய்ய வைப்பேன். உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சிகள் தருவேன். கைவினை கலை பொருட்கள் செய்ய கற்றுத் தருகிறேன்.
ஆட்டிசம் குழந்தைகள் பசித்தால் கேட்க மாட்டார்கள். நாம் தான் சாப்பாடு நேரம் பார்த்து ஊட்டி விட வேண்டும். அவர்களாகவே சாப்பிடவும் பயிற்சி அளிக்கிறோம். ஒரு சில குழந்தைகள் சிற்றுண்டி மட்டுமே சாப்பிடுவார்கள். சாப்பாட்டினை சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு ஆட்டிசம் குழந்தையும் தனிப்பட்ட உலகில் சஞ்சரிப்பார்கள். நாம்தான் அதை அறிந்து பழக வேண்டும். *மறக்க முடியாத சம்பவங்கள்
நிறைய இருக்கிறது. மூன்று வயது முதல் நான் பயிற்சி தந்து வளர்த்த சிறுவன் “டீன் ஏஜ்” வந்ததும் அவன் பார்வையில் பாசம் போய் “காமம்” தென்பட்டது. அவனை கட்டிப்பிடித்து குழந்தையாக நினைத்த நான் பதிமூன்று வயதில் அவன் பார்வையை பாரத்து விலகி நின்று பழக வேண்டும் என்பதை அவனுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். எல்லா ஆட்டிசம் குழந்தைகளும் “டீன் ஏஜ்” வந்துவிட்டால் மாறி விடுவார்கள் என்று சொல்ல முடியாது.
சிலர் மாறலாம். அவர்களின் “குட் டச்”, “பேட் டச்” அறிந்து நாம்தான் எச்சரிக்கையாக அவர்களை கவனிக்க வேண்டும். மற்றொரு சம்பவம், ஆட்டிசம் பாதித்த இளைஞன், பயிற்சி மூலம் ஓரளவு குணமானதால், அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அந்த தம்பதிக்கு குழந்தையும் பிறந்தது. சில வருடங்கள் கழித்து தான் தெரிந்தது, பிறந்த குழந்தைக்கும் ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது என்று.
இருவரையும் சமாளிக்க முடியாமல், அவர்களை எங்க பள்ளியிலேயே சேர்த்துவிட்டு அந்த பெண் சென்றுவிட்டாள். 32 வயதான ஆட்டிசம் பாதித்து எங்களிடம் பயிற்சி பெற்று வந்த வாலிபன் அவன் அம்மா இறந்த அடுத்த மாதமே வேதனையில் இறந்துவிட்டான். சிரிக்கவே தெரியாத சிறுவர்கள் வடிவேலு ஜோக்ஸ்களை பார்த்து சிரிக்கவும் செய்வார்கள்.
பெற்றோர் ஒருவருக்கு இரண்டு குழந்தைகள். இருவருக்குமே ஆட்டிசம் பாதிப்பு இருந்தது. அவர்களை எங்க பள்ளியில் சேர்க்க வந்த போது கண் கலங்கிடுவார்கள். இவர்கள் ஆடிப்பாடியும் மகிழ்வார்கள். மற்ற குழந்தைகளை விட ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு தனித்திறமைகள், அறிவுக்கூர்மை மிக அதிகம். அதனை அவர்களின் பல்வேறு செயல்களில் பார்த்து வியந்து இருக்கிறேன். *எதிர்கால லட்சியம்?
ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர்கள் வீட்டில் அவர்கள் போடும் சப்தம், சண்டைகள் தாங்க முடியாமல் தான் எங்க பள்ளியில் சேர்க்கிறார்கள். அவ்வளவு மூர்க்கத்தனமான குழந்தைகளை கூட பயிற்சி மூலம் சாந்தமாக்கி விடுவதை பார்த்து எங்களிடம் கண்ணீர் மல்க நன்றி சொல்லுவார்கள்.
அவர்களின் அந்த கண்ணீருக்கு ஒரு பாலமாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் இறுதி மூச்சு வரை என்னுடைய இந்த பணி தொடரும். என் கணவரும் இதில் ஈடுபட உள்ளார். என் மூத்த மகன் “ஆக்குபேஷன் தெரபிஸ்ட்” படிப்பு படித்து வருகிறான். என் இளைய மகன் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறான். எனவே நாங்கள் நால்வருமே குடும்பத்துடன் ஆட்டிசம் குழந்தைகளின் நல்வாழ்விற்காக செயல்பட இருக்கிறோம்.
விஜயா
|