வாழ்க்கை+வங்கி=வளம்!



சிறு, குறு அல்லது நடுத்தர தொழில் நிறுவனப் பதிவுவங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கும் முன்பு சிறு, குறு அல்லது நடுத்தர பயனராகப் பதிவு செய்வது முதன்மையானதாகும். புதிய தொழில் முனைவோர் பதிவு எண் பெற்ற பிறகு மேற்கொள்ளும் தொழிலுக்கு ஏற்ற வங்கியின் கடன் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.
தொழில் தொடங்குபவரின் பெயர் மற்றும் ஆதார் எண்ணை பின்வரும் இணைய முகவரியில் பதிவு செய்தவுடன் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் ஆதாரின் இணைப்பில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு வரும். அதனை இணையத் தொடரில் பதிவிட வேண்டும்.

இணைய முகவரி: https://udyamregistration.gov.in/Government-India/Ministry-MSME-registration.htm. முன்னரே பதிவு எண் பெற்றிருந்தால் அதற்குரிய கட்டத்தில் அந்த எண்ணைப் பதிவு செய்து தொழில் தொடங்கும் விவரங்களை உள்ளீடு செய்து புதிய தொழிலினை பதிவு செய்ய வேண்டும். தொழில் விவரத்திற்கு ஏற்ப வங்கியின் கடன் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து அணுக வேண்டும். ஒவ்வொரு வங்கியும் அரசு நிர்ணயித்துச் செயல்பட வைக்கும் கடன் திட்டங்களைத் தவிர தனிப்பட்ட தொழில் கடன்  திட்டங்களை வகுத்துள்ளன. வியாபாரம், உற்பத்தி, சேவைத்துறை என்று பிரிக்கப்பட்டு கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

வணிகக் கடன் திட்டங்கள் (Business Loan Schemes)

 நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் பெரும்பங்காற்றுகின்றனர். இந்தத் துறைகள்தான் மிக அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகம் நடத்த அரசு, வங்கிகள் வழங்கும் கடன் திட்டங்கள் திட்டச் செலவு, லாபமீட்டும் அளவு அனைத்துத் துறைகளுக்கும் பயனளிக்கும் அரசின் திட்டங்கள் வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக இந்திய அரசு உருவாக்கிய இந்த திட்டம் குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக வழங்கப்படும். இத்திட்டம் வங்கிகளின் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. 2015-2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ரூபாய் பத்து லட்சத்திற்கும் குறைவாக கடன் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப் படுகிறது. இத்திட்டத்தின் மூன்று பிரிவுகள் பின்வருமாறு:

SHISHU - ரூ.50,000/- வரை கடன் பெறலாம்.
KISHOR - ரூ.50,000/- முதல் ரூ.5,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.
TARUN - ரூ.5,00,000/- முதல் ரூ.10,00,000/- வரை கடன் வசதி உள்ளது.

யாருக்குக் கடன் கிடைக்கும்அனைத்து வகையான வணிகம், சேவை மற்றும் உற்பத்தி செய்பவர்கள் கடன் பெறலாம். உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் வாகனம் வாங்குவதற்கும் கடன் வசதி உள்ளது. புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அதற்குரிய திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கவேண்டும்.

ஏற்கனவே இயங்கி வரும் தொழிலகங்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறமுடியும். விவசாயத்திற்கென்று சிறப்பான, தனி கடன்திட்டங்கள் உள்ளதால் வணிகம் மற்றும் உற்பத்தித் தொழில் சார்ந்தவைகளுக்கு மட்டும் முத்ரா கடன் கிடைக்கும். வீடு வாங்க, சொந்தப் பயன்பாட்டுக்காக வாகனம் வாங்க, கல்வி மற்றும் திருமணச் செலவுக்காக, தனிநபரின் வீட்டுச் செலவுகளுக்காக முத்ரா கடன் திட்டத்தில் கடன் வழங்கப்பட அனுமதியில்லை.

கடன்பெற விண்ணப்பிப்பவர் இயந்திரம், உபகரணங்கள், பொருட்கள் வாங்குவதற்கு விண்ணப்பித்தால், விலைப்பட்டியலின்படி அதற்குரிய கடன்தொகை விற்பனையாளரின் பெயரில் வரைவோலை / காசோலையாகவோ வழங்கப்படும். வங்கியின் பணமாற்றுதல் மூலம் உரியதொகை கடன்பெறுபவரின் எழுத்து மூலமான அனுமதியுடன் விற்பனையாளரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். வங்கிகள் பணமாக கடன் தொகையை வழங்குவதில்லை.

இணையத்தின் மூலமாக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அல்லது அருகிலுள்ள வங்கிக்கிளைக்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்திசெய்து அதில் பட்டியலிடப்பட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும். அரசின் வழிகாட்டுதலில் வழங்கப்படும் முத்ரா கடன் திட்டத்திற்கு அரசின் மானிய உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.

நிலுவையில் உள்ள கடன்தொகைக்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது. கடனை திருப்பச் செலுத்தும் காலம் 60 மாதங்கள். வங்கி நிர்ணயித்து அறிவிக்கும் தொகையை இ.எம்.ஐ முறையில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் வங்கியின் கடன்கணக்கில் செலுத்தவேண்டும்.

கடன்பெற விண்ணப்பிப்பவருக்கு எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இருக்கக் கூடாது. மேலும் நிறுவனத்தின் பெயர் வாராக்கடன் பட்டியலில் இடம் பெற்றிருக்கக்கூடாது. முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற சொத்து பிணையமோ அல்லது மூன்றாம் நபர் பொறுப்புறுதியோ தேவையில்லை. முத்ரா திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வங்கியும் அவசியம் கடன் வழங்கவேண்டுமென்று அதற்கான இலக்கினை வங்கிகளுக்கு மத்திய ரிசெர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள், தனியார்துறை வங்கிகள், மண்டல கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறுநிதி வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் (Micro Finance Institutions), வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்க தகுதி பெற்றவையாகும்.

விண்ணப்பத்துடன் இணைத்து வங்கியில் வழங்க வேண்டியவை

(நகல்)

(1)தனிநபர் அடையாள சான்று - வருமானவரித்துறை வழங்கிய நிரந்தரக் கணக்கு எண் அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம்

(2)இருப்பிடச் சான்று - மின்சாரக் கட்டண ரசீது. இடத்தின் வரி ரசீது, தொலை பேசிக்கட்டண ரசீது

(3)விண்ணப்பதாரரின் இரண்டு புகைப்படங்கள்

(4)வாங்க வேண்டிய உபகரணங்கள், பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றின் விலைப்பட்டியல்

(5)உற்பத்தித் தொழிலகம் எனில் மூலப்பொருட்கள் / வணிகமெனில் வணிகப்பொருட்கள் வழங்குபவர் / நிறுவனம் குறித்த விவரங்கள்

(6)    வணிகம் இயங்கும் இடம் பற்றிய விவரம், அதற்குரிய அனுமதிச் சான்றிதழ்

(7)அந்தப் பகுதியில் அரசு நிர்ணயித்து வழங்கும் அனுமதி சான்றிதழ்கள்

(8)விண்ணப்பிப்பவரின் தகுதிச் சான்று / பயிற்சி பெற்றவர் என்றால் அதற்குரிய சான்றிதழ்கள்

(9)அரசின் திட்டங்கள் செயலாக்கப் பதிவுகளுக்காக விண்ணப்பிப்பவரின் சாதிச்சான்று - வட்டி மற்றும் விளிம்புத் தொகை சலுகைகளுக்காக.

முத்ரா அட்டை

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவருக்கு கடன் வழங்க வங்கி ஒப்புதல் கொடுத்தவுடன் கடனாளிக்கு முத்ரா அட்டை வங்கியால் வழங்கப்படுகிறது. இந்த அட்டையைப் பயன்படுத்தி மூலப்பொருளோ அல்லது வணிகம் சார்ந்த பொருட்களை வாங்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையில் 10% வரை இந்த முத்ரா அட்டையின் மூலம் பெறலாம்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)

கல்லூரிப் படிப்பு அல்லது தொழிநுட்பவியல் படிப்பினை முடித்தபிறகு வேலை கிடைக்காமல் தவிக்கின்ற இளைஞர்களுக்கு பணி / சுயதொழில் வாய்ப்பினை உருவாக்க உதவும் இத்திட்டத்தின்படி அவர்கள் சிறு / குறு தொழிற்சாலைகள் தொடங்கலாம். மத்திய அரசின் முத்ரா திட்டம்போல மாநில அரசு நடைமுறைப்படுத்தும் இத்திட்டத்தின்படி பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினரின் வாழ்க்கைத் தரம் உயர வங்கிகள் கடன் வழங்குகின்றன. சுய தொழிலாக உற்பத்தி / சேவை / தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்த ரூ.15 லட்சம் வரை கடன் கிடைக்கிறது.  

ரூ.5 லட்சம் திட்டச் செலவு உள்ள தொழில்களுக்கு 25% அதாவது ரூ 2.50 லட்சம் மாநில அரசிடமிருந்து மானியம் கிடைக்கிறது. இந்தத்தொகை வங்கிக் கடன் கணக்கின்மூலம் அங்கீகரிக்கப்பட்ட கடனாளிக்குக் கிடைக்கும்.  மேலும் தொழில் தொடங்கி நடத்த முனையும் இளைஞர்களுக்கு அரசின் மூலம் வங்கியின் வழிகாட்டுதல்படி பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான அரசாணை 29-10-2022 அன்று வெளியிடப்பட்டது.

முதற்கட்டமாக திட்டவரைவு தயாரிக்க பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க முன்வருவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்கவேண்டும்.  மொத்த திட்ட செலவு ரூ.10 லட்சத்திற்குமேல் மற்றும் ரூ.5 கோடிக்கு மிகாமல் இருக்கவேண்டும். அரசுத்துறையில் இணையதளத்தில் முதலில் தொழில் தொடங்கவுள்ள நபர் மற்றும் தொழிலின் விவரத்தை பதிவு செய்து அதற்குரிய எண்ணுடன் திட்ட வரைவை வங்கியிடம் வழங்கவேண்டும்.  பதிவு செய்ய ஆதார் எண் தேவை.

 தனியார் ஒருவர் துவக்கும் நிறுவனமாக இருந்தால் அவரின் ஆதார் எண்ணை பதிவிடவேண்டும். நிறுவனப் பதிவெனில் ஜி.எஸ்டி எண் பதிவு செய்யவேண்டும். மேலும் வருமான வரி கணக்கு எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை இணையப்பதிவில் உள்ளீடு செய்யவேண்டும். இதைத் தொடர்ந்து, தொழில் செய்யவுள்ள இடத்தின் முகவரி, கடன்பெற விரும்பும் வங்கியின் பெயர், கிளையின் முகவரி, ஏற்கனவே உள்ள கணக்கு விவரங்கள் ஆகியவற்றை பதிவிடவேண்டும்.

பிறகு வங்கியை அணுகி வங்கியாளர் திட்ட அறிக்கை, தொழில் செய்யவுள்ள இடம், தொழிலின் வரைவுத் திட்டம், அரசுத்துறையின் அங்கீகாரத்துடன் கிடைக்கக்கூடிய மானியத்தொகை ஆகியவற்றை ஆராய்ந்து மேலும் கள ஆய்வு செய்தபிறகு கடன் தொகை நிர்ணயித்து உரிய ஆவணங்களின் உருவாக்கம் மற்றும் கையொப்பத்திற்குப்பிறகு கடன் தொகை வங்கியால் வழங்கப்படும். கடன் அங்கீகாரத்தின்படி தொகை தவணைமுறையில் கடனாளிக்கு வாழங்கப்படும்.  

கடன் உத்தரவாத திட்டம் மேற்குறிப்பிட்ட திட்டங்கள் தவிர விண்ணப்பதாரருக்கு பிணையமில்லாமல் கடன் உத்தரவாத திட்டத்தின் (Credit Guarantee Fund Trust for Micro & Small Enterprises [CGTMSE]) மூலமும் சிறு. குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளால் கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவைப்பிரிவுகளில் ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான தொழில்களுக்கு பிணையம் இல்லாமல் வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

முந்தைய ஆண்டின் லாபமீட்டிய நிலை, நிதி நிலவரம், கடன் மதிப்பெண், நிதித்தேவை, சந்தை நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் கடன்தொகை நிர்ணயிக்கப்படுகிறது.  சந்தையில் சிறந்த முன்னேற்றம் இருந்து, குறிப்பிட்ட தொழிலின் வளர்ச்சி மேலும் இருக்குமென வங்கியாளர் மதிப்பீடு செய்தால் இரண்டாவது ஆண்டு கடன்தொகை உயர்த்தப்படுகிறது.

புதிய வணிக நிலையை உருவாக்கவும், தொழில் நுட்ப ரீதியாக ஆராய்ச்சியினை மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்த வங்கிகள் மூலம் கடன் தொகை உரிய அளவில் உயர்த்தி வழங்கப்படுகிறது. மேலும் பொதுவாக வங்கிகள் வழங்கும் வணிகக் கடன் திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.