செம்பி
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், நிலா ஆகியோர் நடித்து வெளியாகி இருக்கும் படம் செம்பி. மலை கிராமத்தில் வசிக்கும் வீரத்தாய் தன் பேத்தி செம்பியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். சிறுமி செம்பி மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்.
இது குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரி குற்றவாளிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வழக்கை வாபஸ் வாங்கு என வீர்த்தாயையும் அவருடைய பேத்தி செம்பியையும் மிரட்ட, அவரை தாக்கி விட்டு வீரத்தாயும் செம்பியும் தப்பி ஓடி விடுகிறார்கள். இந்த விஷயத்தை அரசியல் ஆதாயத்திற்காக பேசும் அரசியல் கட்சிகளால் செம்பிக்கு என்ன நேர்ந்தது? செம்பிக்கு நீதி கிடைத்ததா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனரா என்பதுதான் படத்தின் மீதி கதை. சிறுமிகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஒரு விழிப்புணர்விற்காகவும் அது நிகழும் போது சமூகம் அதை எப்படி எதிர் கொள்ளுகிறது என்பதையும் யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறது செம்பி. மைனா, தொடரி போன்ற படங்களை போல பாதி படம் பேருந்துக்குள்ளேயே நகர்கிறது. ஆனாலும் எந்த ஒரு சோர்வும் தட்டாமல் திரைக்கதையை நகர்த்திஉள்ளார் பிரபு சாலமன். காதலை மையமாக வைத்து படங்களை எடுத்தவர் தன்னுடைய வழக்கமான டெம்பிளேட்டிலிருந்து மாறுபட்டு காதல் காட்சிகளே இல்லாமல் ஒரு சமூக அக்கறையுள்ள படத்தை கொடுத்ததற்காக இயக்குநரை பாராட்டலாம்.
வீரத்தாய் கதாபாத்திரத்தில் பழங்குடி பெண்ணாக நடித்திருக்கும் கோவை சரளாவிற்கு இது ஒரு முக்கியமான படம். காமெடி கதாபாத்திரத்தில் படம் முழுக்க சிரிக்க வைத்தவருக்கு இந்த படம் முழுக்கவும் சீரியஸான கதாபாத்திரம். தனியாக வாழும் வயதான பெண்களுக்குண்டான உடல் மொழி, பேச்சு, விட்டோத்தியான நிலை, அழுகை என அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் கோவை சரளா.
தனது பேத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள் என தெரிந்ததும் அங்கும் இங்கும் நடந்து தனியாக சென்று கதறி அழும் காட்சி நகைச்சுவை நடிகர்களாலும் உணர்வையும் வெளிக்காட்டி உணர்ச்சிபூர்வமாக நடிக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ‘தரைக்கட்டுல வாழுற உங்களுக்கு மலைகட்டுல வாழுற எங்களை பார்த்தா உங்களுக்கு அசிங்கமா தெரியுது’ என அழுத்தமான வசனங்கள் மூலம் ஈர்க்கிறார்.
செம்பியாக நடித்திருக்கும் நிலா என்ற சிறுமியும் கோவை சரளாவோடு போட்டி போட்டு நடித்திருக்கிறார். வழக்கறிஞராக வரும் அஸ்வின்குமாரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பேருந்து நடத்துனர் தம்பி ராமையா அரசியல்வாதிகளாக வரும் நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, நீதிபதி ஞான சம்பந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் படத்திற்கு வலிமை சேர்க்கின்றன.பிரபு சாலமனின் படங்களுக்கே உரிய வகையில் கொடைக்கானலின் குளிர்ச்சியையும், மலைகளின் அழகையும் ஒளிப் பதிவாளர் ஜீவா கண் முன் கொண்டு வர இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவினுடைய இசை நம்மை வருடி இழுத்து செல்கிறது அந்த மலைகளுக்கு.
போக்சோ வழக்குகள் எப்படி விசாரிக்கப்படுகின்றன என்பதை காட்டுவதற்காகவே நீதிமன்றத்தில் குழந்தைகளுக்கென தனி அறை ஒன்றையும் காட்டியிருப்பதும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இயற்றப்பட்ட சட்டங்களில் போக்சோ சட்டம்தான் வலிமையானது என்பதை இந்த சமூகத்திற்கு எடுத்துரைத்துள்ளது. மேலும் அந்த வழக்குகள் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்கு கொடுத்துள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் போக்சோ வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றை பற்றியும் படத்தில் விவாதித்திருப்பது நல்ல விஷயம்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு மீண்டு வருகிறார் என்பதும் அதன் பின்னால் இந்த சமூகத்தை அவள் பார்க்கும் விதம் எவ்வாறு மாறுகிறது என்பதை வசனங்கள் மூலம் இல்லாமல் காட்சிகளாக காட்டப்பட்டிருப்பதுதான் படத்தின் ஆன்மாவே. அரசியல் கட்சிகளும் பெண் மீது நிகழக்கூடிய வன்கொடுமைகளை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். ஒரு கட்சி கையிலெடுத்த விஷயத்தை சமாளிக்க மற்றொரு கட்சி எப்படியெல்லாம் கதைகளை சொல்கிறது என காட்டியிருப்பது தற்கால அரசியலின் கண்ணாடி.
சுதந்திரமாக ஓடியாடி விளையாடும் சிறுமிகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளால் அவர்கள் தங்களின் குழந்தை பருவத்தை இழப்பதை இந்த படம் மூலம் மக்களுக்கு ஒரு செய்தியாக உணர்த்தியிருக்கிறார். சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தயங்காமல் வெளியே சொல்ல வேண்டும். அதற்கு கிடைக்கக்கூடிய நீதியினை யாராலும் தடுக்க முடியாது என்பதைதான் செம்பி நம்மிடையே சொல்ல வருகிறாள்.
மா.வினோத்குமார்
|