எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் டிசைன்களை மட்டுமே வடிவமைக்கிறேன்! ஃபேஷன் டிசைனர் வினோ சுப்ரஜா
ஃபேஷன் என்றால்… முக்கியமாக நம்முடைய சிந்தனையில் வருவது உடை. இப்போது என்ன டிரெண்ட் என்று பார்த்து அதற்கு ஏற்ப தான் உடைகளை நாம் தேர்வு செய்கிறோம். ஆனால் முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் போன்ற முக்கிய தினத்திற்கு மட்டும் தான் உடைகள் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தோம். அப்படியே வாங்கினாலும் சில நாட்கள் நாம் பயன்படுத்திவிட்டு அந்த உடையினை நம்முடைய தங்கை அல்லது வேறு யாருக்காவது கொடுத்திடுவோம்.
ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரு உடை வாங்குவார்கள். அதை இரண்டு முறை அணிவார்கள். மீண்டும் புதிய உடை வாங்க தயாராகிவிடுவார்கள். இப்படி நினைக்கும் போது எல்லாம் ஆடைகளை வாங்கி குவிக்கிறோம். இதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்க ‘சஸ்டெயின்ட் ஃபேஷனை’ அறிமுகம் செய்துள்ளார் சென்னையை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் வினோ சுப்ரஜா.
‘‘என் சொந்த ஊர் வந்தவாசி. அங்க தான் படிச்சேன். அதன் பிறகு சென்னையில் ஆர்கிடெக்சர் படிப்பு முடிச்சிட்டு மீடியாவில் ஐந்து வருடம் வேலை பார்த்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமானது. என் கணவருக்கு சீனாவில் வேலை என்பதால், நான் அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீடியா துறையில் இருந்ததால் கண்டிப்பாக அங்கு ஒரு வேலை கிடைக்கும்ன்னு நினைச்சேன். ஆனா அங்கு சீனா பாஷை தெரிந்தால் தான் எங்கும் வேலை பார்க்க முடியும்ன்னு அங்கு போன பிறகு தான் தெரிந்தது.
அதனால் மீடியா குறித்து ஆன்லைனில் ஏதாவது படிக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனால் எல்லா கல்வி இணையதளமும் சீன மொழியில் தான் இருந்தது. பிசினஸ் மற்றும் ஃபேஷன் கல்வி சார்ந்த இணையம் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது. பிசினசா ஃபேஷனான்னு யோசிச்ச போது ஆர்கிடெக்ட் என்ற கிரியேடிவ் பேக்கிரவுண்ட் இருந்ததால், ஃபேஷனே எடுத்து படிக்கலாம்ன்னு படிச்சேன்.
இது முறையான இளங்கலை பட்டப்படிப்பு என்பதால், இறுதியாண்டு படிக்கும் போது நமக்கான ஒரு ஃபேஷன் கலெக்ஷனை அறிமுகம் செய்யணும். அதில் கை டர்னர் என்ற எழுத்தாளரின் புத்தகம் ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்த உடைகளின் விரிவாக்கத்தில் ஈர்க்கப்பட்டு, அதில் என்னுடைய கிரியேடிவிட்டியினை புகுத்தி ஒரு டிசைனை உருவாக்கினேன். அதில் நான் பயன்படுத்திய டெக்ஸ்டைல் பிராண்டுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அது குறித்து அங்குள்ள பத்திரிகையில் எழுதியதால், ஷாங்காய் ஃபேஷன் ஷோவில் என்னுடைய உடைகள் இடம்பெற்றது. எனக்கான அடையாளம் கிடைத்த நேரத்தில் என் கணவருக்கு அமெரிக்கா டெட்ராயிட்டில் வேலை மாறியதால், அங்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. நியூயார்க் அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் தான் ஃபேஷனுக்கான ஹப். ஆனால் டெட்ராயிட் நான் போன போது ரிசெஷன் காரணமாக அந்த நகரமே இருள் சூழ்ந்து கோஸ்ட் நகரம் போல மாறி இருந்தது. அதைப் பார்த்ததும் நம்முடைய ஃபேஷன் எதிர்காலம் எப்படி இருக்க போகுதுன்னு கவலையா இருந்தது.
அப்படியும் சும்மா இருக்க பிடிக்காமல் வீட்டிலேயே தையல் மெஷினைப் போட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உடைகளை தைத்துக் கொடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. மேலும் நியூயார்க் ஃபேஷன் மற்றும் பப்ரூக்லின் ஃபேஷனுடைய பத்தாம் ஆண்டு விழாவில் என் உடைகளை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைச்சது. ஆனால் விதி சும்மா இருக்குமா? மீண்டும் என்னுடைய வாழ்க்கையில் விளையாடியது. மறுபடியும் என் கணவருக்கு இடம் மாற்றம்.
இந்த முறை துபாய். துபாய் போன போது அது ஃபேஷன் துறையில் வேறு ஒரு உலகமாக இருந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை புதிதாக ஒரு துறையில் கால் எடுத்து வைப்பவர்கள் திறமையானவர்கள் என்று தெரிந்தால், அவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பார்கள். ஃபேஷனை பொறுத்தவரை துபாய் ஒரு ஆடம்பரமான மார்க்கெட்ன்னு சொல்லணும்.
அங்கு புதிதாக கால் பதிப்பவர்களுக்கு பெரிய வாய்ப்பு எல்லாம் இருக்காது. என்ன செய்யலாம்ன்னு குழப்பமா இருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் தான் ஏதாவது படிக்க கிளம்பிடுவேன். துபாயில் ஃபேஷன் மார்க்கெட்டிங் குறித்து படிச்சேன்’’ என்றவர் அதன் பிறகு ஃபேஷன் துறையில் திரைக்கு பின் நடக்கும் பல அதிர்ச்சியான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளார்.
‘‘நான் பலருக்கு தனிப்பட்ட முறையில் உடைகளை வடிவமைச்சுக் கொடுத்திருக்கிறேன். பல ஆண்டு காலம் இந்த துறையில் இருந்திருக்கேன். அப்பெல்லாம் இந்த துறையின் இருட்டான பக்கம் பற்றி எனக்கு தெரிந்ததில்லை. ஆனால் துபாயில் நான் கல்லூரியில் படிக்கும் போது தான் என் பேராசிரியர் ஒருவர் சொன்ன விஷயங்கள் எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
வண்ணங்கள் நிறைந்த ஃபேஷன் துறையால் நம்முடைய சுற்றுப்புறச்சூழல் எவ்வளவு பாதிப்பினை சந்தித்து வருகிறது என்று புரிந்தது. உடைகளில் பயன்படுத்தப்படும் சாயங்கள் மற்றும் நான் வேண்டாம் என்று தூக்கி எறியும் உடைகள், ஆடைகளின் அபரீத உற்பத்தி... என பல கூற்றுகள் நம்முடைய சுற்றுப்புறச் சூழலை பாதிக்கிறது என்று புரிந்தது. அந்த தாக்கம் தான் என்னை ‘சஸ்டெயினபில்’ ஃபேஷனை அமைக்க காரணமாக இருந்தது. இதன் மூலம் என்னால் எவ்வளவு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க முடியுன்னு சிந்திக்க ஆரம்பிச்சேன். ஆனால் அதற்கான பாதை அவ்வளவு எளிதல்ல. மக்களை சஸ்டெயினபில் ஃபேஷன் உடைகளை வாங்க வைக்க விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்த வேண்டும். என்னைப் பொருத்தவரை என் ஆடைகள் விற்பனையாவதை விட அதனால் ஏற்படும் சுற்றுப்புற மாசினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற செய்தி மக்களுக்கு சென்றடைய வேண்டும்’’ என்றவர் சஸ்டெயினபில் ஃபேஷன் பற்றி விவரித்தார்.
‘‘ஃபேஷன் என்பது பஞ்சில் இருந்து துணியாக அதன் பின் உடையாக மாறி அது கடைக்கு வந்து கஸ்டமரின் கையில் சென்ற ஆறே மாசத்தில் அது குப்பைக்கு சென்றுவிடும். ஒரு துணி கடந்து வரும் பாதையின் ஒவ்வொரு நிலையிலும் நம்முடைய சுற்றுப்புறசூழலில் பெரிய அளவு பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. சஸ்டெயினபில் ஃபேஷன், ஆர்கானிக் பஞ்சினால் உருவான உடைன்னு நினைக்கிறோம். அது கிடையாது. உடையினை தேவையான அளவு மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது தான் சஸ்டெயினபில் ஃபேஷன். ஆஃபர் சேல்ன்னு விளம்பரம் பார்த்த உடனே உடைகளை வாங்கி குவிக்கிறோம். இதனால் உடைகளின் பயன்பாடு அதிகமாகி இருந்தாலும், அதனை தூக்கி எறிவதும் அதிகரித்து வருகிறது. ஒரு பிளாஸ்டிக் பை எளிதில் மக்காதோ, அதேபோல் தான் பாலியஸ்டர் உடையும் எளிதில் மக்கிப் போகாது.
முன்பு ஒரு துணி கிழிந்து விட்டால், அது நம் வீட்டை சுத்தம் செய்யும் துணியாக மாறும். ஆனால் இப்போது அப்படி இல்லை. துணியில் சின்ன பாதிப்பு ஏற்பட்டாலே அதை தூக்கி எறிந்துவிடுகிறோம். அப்படி இல்லாமல் கிழிந்த துணியில் கூட வேறு மதிப்பூட்டும் பொருட்களை உருவாக்க முடியும்’’ என்றவர் ‘வாட் இஸ் சஸ்டெயினபில் ஃபேஷன்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘‘நிறைய பேர் என்னிடம் ‘நீயே துணி விக்கற, அப்புறம் நீயே வாங்கக்கூடாது’ன்னு சொல்றன்னு கேட்டாங்க. நான் என்ன சொல்றேன்னா துணி வாங்குங்க. அவசியம் என்றால் மட்டுமே வாங்குங்க. ஒரு கல்யாணத்திற்கு கட்டிய புடவையை வேறு கல்யாணத்திற்கும் உடுத்தலாம். புதிய புடவை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடைகள் தேவை என்றால் மட்டுமே வாங்க வேண்டும். இதனை என்னுடைய புத்தகத்தில் மூன்று பகுதியாக பிரித்திருக்கிறேன். முதல் பகுதி ஃபேஷன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும். இரண்டாவது, உடை எவ்வளவு அவசியம்ன்னு சிந்திக்க வைக்கும். மூன்றாவது ஒரு வாடிக்கையாளரா என்னென்ன மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை குறித்து இருக்கும்.
நான் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கடைசி பாகம் மேல் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு துணியினை வெட்டும் போது கிடைக்கும் பிட் துணிகளை கொண்டு கைப்பை, ஸ்லிங் பேக், நோட்பவுச்சஸ், மாஸ்க் எல்லாம் தயாரிக்கிறோம். அதே போல் ஒரு உடை வாங்கினால் அதை குறைந்தபட்சம் 30 தடவையாவது போடுவேன் என்றால் மட்டுமே வாங்க வேண்டும். அப்படி பயன்படுத்திய துணியை குப்பையில் போடாமல் எங்களிடம் கொடுங்க. நாங்க அதை வேறு விதமா பயன்படுத்துவோம். சில திருமணங்களில் பேனர்கள் அடிப்பாங்க. அந்த பேனரை வாங்கி பேக்பாக்ஸ் செய்து, தாழ்த்தப்பட்ட பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தோம்’’ என்றவர் தன்னுடைய புதிய கலெக்ஷனான ‘புரிசை’ப் பற்றி விவரித்தார்.
‘‘என்னுடைய ஊர் வந்தவாசி. அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் தான் புரிசை. இங்கு கூத்து நாடகம் ரொம்ப பிரபலம். கூத்து கலைஞர் புரிசை கண்ணப்பதம்பிரான் அந்த ஊரைச் சேர்ந்தவர். அவருடைய குழு சர்வதேச அளவில் கூத்துக்களை நடத்தி இருக்காங்க. என்னுடைய காலத்தில் டி.வி கிடையாது. கூத்து பார்த்து தான் நான் வளர்ந்தேன். கூத்து கலைஞர்கள் குறித்து என்னுடைய ஆடையில் வடிவமைக்க விரும்பினேன். அவர்களுடன் ஒரு நாள் இருந்து அவங்க எப்படி டிரெஸ் செய்றாங்க, மேக்கப் போடுறாங்ன்னு தெரிந்து கொண்டு அதை என்னுடைய உடையில் இணைச்சிருக்கேன்.
அதாவது அவங்க டிரெஸ் செய்யும் அறையை ஓலையில் நெய்து இருப்பாங்க. என்னுடைய உடைகளில் ஓலை டிசைன் இருக்கும். அங்குள்ள ஒரு கலைஞரின் முகத்தை ஆடையில் வரைந்திருக்கிறேன். இப்படி அவங்க கலை சார்ந்த விஷயங்களை் என்னுடைய துணியில் கொண்டு வந்திருக்கிறேன். நான் இப்போது தனிப்பட்ட முறையில் டிசைன் செய்வதில்லை. காரணம் ஒரு பிளவுஸ் டிசைனில் எல்லாம் பிளாஸ்டிக் மணிகள் தான் பயன்படுத்துறாங்க. அது என்னுடைய கோட்பாடு கிடையாது. எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் டிசைன்களை மட்டுமே நான் வடிவமைக்கிறேன்’’ என்றார் வினோ சுப்ரஜா.
நிஷா
|