நியூஸ் பைட்ஸ்



திருமணமான பெண்களும் அம்மாக்களும் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் பங்கு பெறலாம்!

பொதுவாக திருமணமாகாத, குழந்தை பெறாத இளம் பெண்கள் மட்டுமே மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஆனால் பெண்களுக்கான முன்னேற்றம் மாறி வர, விதிகளும் அதனுடன் சேர்ந்து மாறி வருவதை பார்க்க முடிகிறது. அதன்படி,  இனி மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் திருமணமான பெண்களும், குழந்தை பெற்ற இளம் பெண்களும் கலந்துகொள்ளலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பேருந்தில் பெண்களுக்கு தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை

தமிழ்நாட்டில், பேருந்தில் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பேருந்தில் பெண்களை பார்த்து ஆண்கள் விசில் அடித்தால், முறைத்து பார்த்தால், கண் சிமிட்டினால் அல்லது பாலியல் ரீதியாக பெண்களுக்கு அசெளரியத்தை உண்டு செய்தால் நடத்துனர்கள் அவர்களை உடனே அந்த பேருந்தில் இருந்து இறக்கி விடவேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அப்படி நடத்துனரின் கண்டிப்பை மீறும் பட்சத்தில் அந்த நபரை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தவிர பெண்களையும் சிறுமிகளையும் எரிச்சலூட்டும் வகையில் நடத்துனர்கள் நடந்துகொள்ள கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LGBTQ+ பிரிவினருக்கான சொல்லகராதி

பால்புதுமையினர் எனப்படும் எல்.ஜி.பி.டி.க்யூ பிரிவினரை மரியாதையுடன் எப்படி அழைக்க வேண்டும் என்ற விரிவான சொல் அகராதியை தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி இனி ஊடகங்களில், அரசு சார்ந்த அறிக்கைகளில் மற்றும் பொதுவாக சமூகத்தில் முன்றாம் பாலினத்தவர்களை மருவிய, மாறிய பாலினத்தவர் என்றும் திருநங்கை, திருநம்பி என்று இடத்திற்கு ஏற்றவாறு அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Gay- தன்பாலீர்ப்பு ஆண், Lesbian-தன்பாலீர்ப்பு பெண், Bisexual-இரு பாலீர்ப்புடைய நபர், Queer - பால்பதுமையர் என்று அழைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இனிஷியலுடன் தமிழில் முழுமையான கையொப்பம்

பள்ளி, கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் இனி தங்கள் பெயரின் முன்னெழுத்தையும் (இனிஷியல்) கையொப்பத்தையும் தமிழில் குறிப்பிட வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் எமிஸ் தளத்தில் பெற்றோரின் பெயரை பதிவேற்றும்போதும் முன்னெழுத்தையும் தமிழில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை புத்தக கண்காட்சி

மதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 2 ஆம் தேதியில் தொடங்கி செப் 12ஆம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. காலை பதினொறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை அரங்குகள் திறந்திருக்கும் எனவும், பொதுமக்களும் மாணவர்களும் இந்த புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் அதிக குழந்தைகள் = அதிக சலுகைகள்!

சீனாவில் ஒரு நாடு, ஒரு குழந்தை  என்ற திட்டத்தின் மூலம் மக்கள் தொகை குறைந்துள்ளது என்பது ஒரு புறம் இருந்தாலும், இன்று சீன இளைஞர்கள் பலர் குழந்தை பெற்றுக்கொள்வதையே தவிர்த்து வருகின்றனர். இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உழைக்கும் இளைஞர்கள், குழந்தைகளின் எண்ணிக்கை அங்கே குறைந்துள்ளது. ஒரு குழந்தை விதியை சீனா அரசு தளர்த்தியும் எந்த பயனும் இல்லாததால், இப்போது சீன அரசு அதிக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு வரி தள்ளுபடி, கடன் தள்ளுபடி, வேலை வாய்ப்பு என பல சலுகைகளை அறிவித்துள்ளது.

ஸ்வேதா கண்ணன்