பெண் சுயதொழில் முனைவோர்களை உருவாக்கியவர்!



பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றி, குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர். அந்தவகையில் ‘அனா புட்ஸ்’ எனும் ஆன்லைன் உணவுப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தை நடத்திவரும் திவ்யா, தனக்கென பிரத்யேக சந்தையை உருவாக்கி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். தான் மட்டும் தொழிலில் ஈடுபடாமல் மற்ற பெண்களுக்கும் சுய தொழில் செய்ய உதவி செய்து வருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் நாமக்கல். தற்போது சேலம் ஆரமங்கலத்தில் வசித்து வருகிறேன். பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள எம்.என்.சி நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் வேலை பார்த்து வந்தேன்’’ என்ற திவ்யா, சுயதொழிலில் தான் ஈடுபட்ட காரணத்தை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.‘‘நான் கர்ப்பமாக இருக்கும் போது தான் உடல் ஆரோக்கியம் பற்றிய கவனம் வந்தது. குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தால் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை வாங்க ஆரம்பித்தேன். அதிலும் கலப்படம் இருந்தது தெரிய வரவே நாட்டுச்சர்க்கரை தயாரிக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்த்தேன்.

அப்போது தான் உண்மையான நாட்டுச்சர்க்கரை பற்றிய தெளிவு கிடைத்தது. பின்னர், நாட்டுச்சர்க்கரை செய்து வரும் உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு என்னுடைய சொந்தத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தேன். அதன் தரமும் சுவையும் மிகச்சிறப்பாக இருந்ததால், அந்த நாட்டுச் சர்க்கரையால் உணவு பண்டங்கள் செய்து என் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் கொடுத்தேன். சாப்பிட்டவர்கள் பாராட்ட... அப்போது தான் இதை தொழிலாக ஏன் செய்யக் கூடாது? என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டது. அந்த எண்ணம் தான் ‘அனா ஃபுட்ஸ்’ உருவாக காரணம். FSSAI, MSME போன்ற அரசு அமைப்புகளில் என்னுடைய பிராண்ட் பெயரைப் பதிவு செய்தேன்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விற்பனையை தொடங்கினேன். தற்போது ‘அனா ஃபுட்ஸ்’ என்ற பிராண்டில் தனியாக இணையதளம் தொடங்கி ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறேன். அடுத்ததாக அமேசான், பிளிப்கார்ட், மீசோ உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் எங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதற்கு உரிமம் வாங்கி அதிலும் விற்பனையை தொடங்க இருக்கிறோம்’’ என்ற திவ்யா, தான் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்து கூறினார்.

‘‘முதலில் கலப்படம் இல்லாத நாட்டுச் சர்க்கரையை விற்பனை செய்தோம். பின்னர் வாடிக்கையாளர்கள் கருப்பட்டி கேட்க ஆரம்பித்தார்கள். நாமக்கல் அருகே பெரிய மணலி கிராமத்தில் பலரும் கருப்பட்டி தயாரித்து வந்தார்கள். அவர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து விற்பனை செய்தேன். நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, பனங்கல்கண்டு மூன்றையும் விற்பனை செய்தோம். எனது மாமனார் வீட்டில் கடலை விவசாயம் செய்தார்கள்.

அதை மதிப்புக்கூட்டி கடலை எண்ணெய்யாக விற்க ஆரம்பித்தேன். அதனை தொடர்ந்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், முந்திரி, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், சிறுதானிய நூடுல்ஸ், சிறுதானிய சேமியா, சிறுதானிய சத்துமாவு, கேரட் மற்றும் பீட்ரூட்டை வைத்து ஊட்டச்சத்து பானங்கள் உள்பட 25 வகையான பொருட்கள் எங்களின் தயாரிப்புகளாகச் சேர்ந்திருக்கின்றன. இதனுடன் விவசாய சங்கத்துடன் இணைந்து சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்து வருகிறோம்.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் உணவு பொருட்களின் தரம் என்றுமே குறையாமல் பார்த்துக் கொள்கிறோம். மேலும் ஐதராபாத், மும்பை மற்றும் புனே ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் எங்களிடம் பொருட்கள் வாங்கி அவர்களே சுயமாக விற்பனை செய்துவருகின்றனர்’’ எனக் கூறும் திவ்யா உலக சாதனையும் படைத்துள்ளார்.

‘‘எனது தொழிலில் சிறப்பாக விளங்கியதால் பெண் தொழில்முனைவோர் குழுவின் சார்பாக எனக்கு சாதனைப் பெண்கள் விருது கிடைத்தது. பொதுவாகவே நிறைய மனிதர்களுடன் உரையாடுவது, அவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். எனவே பெண் தொழில்முனைவோர் குழு நடத்தும் சாதனைப் பெண்கள் எனும் யூடியூப் சேனலில் விஜே-வாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன்.

அதில் சிறப்பாக செயல்பட்டதால் பெஸ்ட் சப்போர்ட்டர் விருதும் கிடைத்தது. அதேபோல் கிளப் ஹவுஸ் செயலியில் சக பெண் தொழில் முனைவோரை ஒருங்கிணைத்து தொடர்ந்து 100 மணி நேரம் உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அடுத்ததாக தொடர்ந்து 279 மணி நேரம் உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இதற்கு ஆசிய புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பாக உலக சாதனை சான்றிதழ் கிடைத்தது ” என்றார்.

‘‘ஒரு தொழில் துவங்க பல சவால்களை சந்திக்க வேண்டும். குறிப்பாக உணவுப் பொருட்கள் சம்பந்தமான தொழில் செய்வதால் அதற்கு  FSSAI மற்றும் MSME-யிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழை பெறுவதற்கான நடைமுறை முதலில் எனக்கு தெரியவில்லை. ஏஜென்சி மூலமாக சான்றிதழ் பெறலாம் என்றால் அவர்கள் அதிக தொகை கேட்டார்கள். அதன்பிறகு நானாக தேடி, நடைமுறைகளை தெரிந்து கொண்டு ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெற்றேன். இப்போது என்னுடன் தொடர்பில் இருக்கும் தொழில் செய்ய ஆசைப்படுவோருக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

நான் என்னுடைய தொழிலில் இவ்வளவு சாதிக்க காரணம் என் கணவர் மற்றும் என் பெற்றோர். நான் துவண்டு விழும் போது உன்னால் முடியும்ன்னு ஊக்கமளித்தார்கள். பலர் ஐ.டி வேலையை விட்டுவிட்டு ஆன்லைனில் சர்க்கரை விற்க போகிறாயா? என கிண்டல் செய்தனர். உனக்கு பிடித்ததை செய்... நாங்க உடன் இருக்கிறோம்ன்னு எனக்கு முழு சப்போர்டாக அவங்க தான் இருந்தாங்க. இந்த தொழில் துவங்கி இரண்டரை வருடமாகிறது. நல்ல வருமானமும் கிடைக்கிறது. பெண்களால் முடியாதது ஏதும் இல்லை. நம்மை நாமே நம்ப வேண்டும். விடா முயற்சியும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எல்லோரும் சாதிக்கலாம்’’ என்றார் திவ்யா தன்னம்பிக்கையுடன்.

வெங்கட்