100 பேருக்கு சமைக்கணும்னு சொன்ன போது அதிர்ச்சியா இருந்தது!



நல்ல சுவையான சாப்பாடு இருந்தாலும், அதை பரிமாறும் விதம் தான் திருப்தியாக சாப்பிட்ட ஒரு முழு மனநிறைவை தரும். அப்படி சாப்பாடு மட்டுமில்லாமல் இவர்களின் உப

சரிப்பும் தான் மனம் மட்டுமில்லை வயிறும் நிறைந்த ஒரு உணர்வினை ஏற்படுத்தி வருகிறார்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜீவா, வைத்தீஸ்வரன் தம்பதியினர்.
இவர்கள் கடந்த 15 வருஷமாக இங்கு ‘ஆச்சி மெஸ்’ என்ற பெயரில் அசைவ உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். ‘‘2007ல் என் கணவர் தான் இந்த மெஸ்சை ஆரம்பிச்சார். நாங்க காரைக்குடியை சேர்ந்தவங்க. அவரோடது பெரிய குடும்பம். அவர் கூட பிறந்தவங்க பத்து பேர். பெரிய கூட்டுக் குடும்பம் என்பதால தினமுமே தடபுடலான சமையல் நடக்கும்.

பொதுவாகவே காரைக்குடி உணவு என்றால் அதன் சுவை மற்றும் ருசி கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கும். காரணம் எல்லா மசாலாவும் அப்பப்ப அரைச்சு போடுவதால் தான் அந்த சுவை. இவங்க வீட்டிலும் அப்படித்தான் தினமும் சமையல் நடக்கும். மேலும் அவங்க வீட்டில் என் மாமியார் முதல் என் நாத்தனார் வரை எல்லாருமே நல்லா சமைப்பாங்க. இவரும் அவங்க சமையலைப் பார்த்து வளர்ந்ததால், இவருக்கும் சமையல் மேல் தனிப்பட்ட விருப்பம் இருந்தது. நல்லா சமைக்கவும் செய்வார்’’ என்றவர் இந்த உணவகம் ஆரம்பித்த காரணத்தைப் பற்றி விவரித்தார்.

‘‘இவர் ஆரம்பத்தில் நிறைய வேலைப் பார்த்து இருக்கார். பட்டரையில் வேலைப் பார்த்தார். குத்துவிளக்கு எல்லாம் நல்லா செய்வார். நல்லா ஓவியம் வரைவார். சில காலம் ஓவியங்கள் வரையும் வேலையில் இருந்தார். அதன் பிறகு ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு கேக், பிரட் எல்லாம் செய்யக் கத்துக்கிட்டார்.

ஓவியம் வரைவதால்  ஒருவரின் புகைப்படம் கொடுத்தால் அதை அப்படியே கேக்கின் மேல் வரைந்திடுவார். அந்த சமயத்தில் தான் தனியாக ஒரு உணவகம் ஆரம்பிக்கலாம்ன்னு இவருக்கு எண்ணம் ஏற்பட்டது. என்னிடம் சொன்னபோது... எனக்கும் சரின்னு பட முதலில் வீட்டிலேயே முறுக்கு, கேக் எல்லாம் செய்து கடைகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பிச்சோம்.

இதன் அடுத்து கட்டம் தான் இந்த மெஸ் துவங்கினோம். முதலில் மதிய உணவு மட்டுமே கொடுத்து வந்தோம். செட்டிநாடு உணவு என்றால் அசைவம் தான் பேமஸ் என்பதால், அசைவ உணவினை வீட்டுச் சாப்பாடு போல கொடுக்க விரும்பினோம். நான் அவருக்கு கூட இருந்து எல்லா வேலையும் செய்து கொடுப்பேன். சமையல் மட்டும் அவர் பார்த்துக் கொள்வார். யாரையும் உள்ளே விட மாட்டார். காரணம் ஒரு உணவிற்கான சுவை மற்றும் கைப்பக்குவம் மாறக்கூடாது என்பதில் அவர் உறுதியா இருந்தார்.
 
அதனால் ஒரு உணவிற்கு தேவையான மசாலா அளவு முதல் எல்லாமே அவர் தான் சொல்வார். மதிய உணவு சாப்பிட வந்தவங்க காலை மற்றும் இரவு நேர உணவும் கொடுத்தா நல்லா இருக்கும்ன்னு கேட்டாங்க. அவங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காரைக்குடியில் இருந்து மாஸ்டரை வரவழைச்சு காலை மற்றும் இரவு நேரமும் உணவு வழங்கி வந்தோம். ஆனால் அவர்கள் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அதனால் மூன்று வேளை உணவும் எங்களால் மட்டுமே செய்ய முடியாது என்பதால் மதியம் மட்டுமே எல்லா உணவினையும் கொடுக்க முடிவு செய்தோம். ஆரம்பத்தில் அவர் தான் எல்லாமே பார்த்துக்கிட்டார்.

நின்று கொண்டே சமைக்கணும் என்பதால், இப்ப அவரால முழு நேரம் செய்ய முடியல. அதனால எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தார்.இதனால் வரை நான் கூட இருந்து அவருக்கு வேண்டிய உதவி மட்டுமே செய்து வந்தேன்.

இப்ப நானே எல்லாருக்கும் சமைக்கணும்ன்னு நினைச்ச போது  கொஞ்சம் அதிர்ச்சியா தான் இருந்தது. நானும் நல்லா சமைப்பேன். ஆனால் எனக்கு ஒரு மெஸ் நடத்தும் அளவிற்கு எல்லாம்  சமைக்க தெரியாது. 30 பேருக்கு கூட சமைச்சிடுவேன். ஆனால் 100க்கும்  மேற்பட்டவர்கள் என்றால் எனக்கு தெரியாது. மேலும் அந்த சமயத்தில் பசங்க  எல்லாம் படிச்சிட்டு இருந்ததால், முழு நேரமும் கடையை பார்த்துக்க முடியாது  என்பதால் அவரே சமையலில் முழுமையாக ஈடுபட்டார்.

இப்ப நான் தான் பார்த்துக்க வேண்டும் என்பதால், அவர் தான் தைரியம் கொடுத்து உன்னால் செய்ய முடியும்ன்னு ஒவ்வொரு உணவுக்கும் தேவையான மசாலா எல்லாம் எப்படி போடணும்ன்னு சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லித் தர நான் ஒவ்வொரு உணவாக செய்ய கத்துக்கிட்டேன். இப்ப எனக்கு கூட இரண்டு பேர் உதவியா இருக்காங்க. அவங்க காய்கறி நறுக்கவும், எல்லாவற்றையும் சுத்தம் செய்யும் வேலையைப் பார்த்துப்பாங்க. சமையல் முழுதும் என்னுடைய வேலை’’ என்றவர் மெஸ் பரிமாறப்படும் உணவுகள் குறித்து விவரித்தார்.
‘‘காலை எட்டு மணிக்கு மதிய உணவிற்கான வேலை ஆரம்பிச்சிடுவோம்.

காய்கறி வாங்குவது முதல் மட்டன், சிக்கன், மீன் எல்லாம் வாங்கி வந்திடுவோம். நாங்க திருவண்ணாமலையில் இருப்பதால், இங்கு அணையில் பிடிக்கும் மீன்கள் தான் அதிகம். கடல் மீன்கள் இங்கு பெரிய அளவில் கிடைக்காது. முன்பு இறால், நண்டு எல்லாம் கூட செய்துவந்தோம். அவை சரியாக கிடைப்பதில்லை என்பதால் மீன் மட்டுமே கொடுக்கிறோம். மதியம் ஃபுல் மீல்ஸ் தான். சாப்பாடு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர், கீரை, ஊறுகாய், முட்டைன்னு கொடுக்கிறோம்.

இது நார்மல் சாப்பாடு. இதுவே ஸ்பெஷல் சாப்பாடு என்றால் நார்மல் சாப்பாட்டில் கொடுக்கும் உணவுடன் காம்போவாக சிக்கன், மட்டன் மசாலா ஒரு கப் மற்றும் இரண்டு மீன் துண்டுகள் தருகிறோம். இதில் ஒரு சிலர் நார்மல் சாப்பாட்டுடன் சிக்கன் கிரேவி மற்றும் மட்டன் கிரேவி தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம். சாப்பாடு மட்டும் அன்லிமிடெட். எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளலாம். மீன் மட்டும் அதன் அளவிற்கு ஏற்ப விலை மாறுபடும்.  

செட்டிநாடு என்றால் அசைவம் கண்டிப்பாக இருக்கும். அதுவும் இவருக்கு சொல்லவே வேண்டாம். தினமும் ஏதாவது ஒரு அசைவ உணவு சாப்பாட்டில் இருக்கணும். அப்படியே பழகிட்டார். மேலும் எங்க ஊர் கோவில் திருவிழா கெடா வெட்டி தான் கொண்டாடுவாங்க. ஒரு பெரிய விருந்தே நடக்கும்.

தலைவாழை இலையில் நடுவில் சாப்பாடு அதைச் சுற்றி எல்லா வித அசைவ உணவுகளும் பரிமாறப்படும். அப்படிப்பட்ட உணவை சுவையோடு மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினார். இப்ப அவர் சமைக்கவில்லை என்றாலும், எல்லா உணவும் அதே சுவையோடு இருக்கான்னு பார்ப்பார். உப்பு, காரம் குறைந்திருந்தா அதை சரிசெய்வார். திருக்கோவிலூரிலும் ஒரு கடை வச்சிருந்தோம்.

அதை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். இதை நான் கவனிச்சுக்கிட்டேன். வியாபாரமும் நல்லபடியா இருந்தது. ஆனால் தனி ஒருவரால் அங்கு முழு வேலையும் செய்ய முடியல. வேலைக்கான ஆட்களும் சரியாக கிடைக்கல. அதனால் அந்த கடையை மூடிவிட்டு இங்க மட்டுமே முழுமையா கவனம் செலுத்தி வருகிறோம்.

இப்ப என்னுடைய மூத்த மகனும் மருமகளும் கூட எனக்கு உதவியா இருக்காங்க. குடும்பமா செய்வதால் எங்களால் இதில் முழுமையா கவனம் செலுத்த முடியுது. இப்ப இரவு நேரமும் கடை நடத்தலாம்ன்னு ஒரு எண்ணம் இருக்கு. மேலும் காடை, இறால் போன்ற உணவுகளையும் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம்.

என்னதான் அசைவ உணவகம் என்றாலும், சுத்தமாகவும், கவுச்சி வாடை இல்லாமல் இருந்தால் தான் மக்கள் விரும்பி சாப்பிட வருவாங்க. அதனால் தினமும் காலை வேலையை ஆரம்பிக்கும் முன் கடை முழுக்க மஞ்சள் தண்ணீர் தெளிச்சிடுவேன். அதேேபால் மதியம் கடை மூடியதும், எவ்வளவு நேரமானாலும், சுத்தம் செய்திடுவோம். எங்களின் இந்த தரமான சுவையான உணவு மற்றும் சுத்தமான இடத்தினை பாராட்டி ‘அறுசுவை களஞ்சியம்’ மற்றும் ‘ராஜகலைஞன்’ என்ற விருது கிடைச்சிருக்கு. இது எங்க அனைவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்’’ என்றார் ஜீவா.

செய்தி: ஷம்ரிதி

படங்கள்: திவாகர்