மனதை கட்டுப்படுத்துவோம்!
நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை இயந்திரத்தன்மையாக மாறி வருகிறது. இயந்திரத்திற்கு கூட ஓய்வு கிடைக்கிறது. ஆனால் அதனை கண்டுபிடித்த மனிதனாகிய நமக்கு பல நேரங்களில் ஓய்வு என்பதே இல்லை. இது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கிறது. அந்த மனவலியே நாளடைவில் இதயநோய், ஹிஸ்டிரியா, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு நம் உடம்பில் அடித்தளம் போடுகின்றன.
வெளியே தெரியாத வலி, சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எச்செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் ஆரம்ப கட்ட அறிகுறி. வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள்.
செய்த செயல் ஒன்றிற்கு எதிர் பார்த்த விளைவு ஏற்படாதபோதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும் போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மன அழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும். குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து நீண்ட கால மன அழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் மன அழுத்தத்தினை சரிசெய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழி முறைகளை கையாண்டு வருகிறார்கள். பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்தபடி நிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன.
*மனச்சோர்வை விட மனஅழுத்தம் எளிதில் கையாளக் கூடியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
*இனம் புரியாத காரணங்களால் மனச்சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிந்தால் அதற்கான தீர்வைக் கண்டறிவதும் எளிது.
*மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சி முறைகள் இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
முக்கியமாக நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நம் மனதும், மூளையும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள். தியானம்: இது மிகவும் பயன்தரக் கூடிய ஒரு வழி. தினமும் இதற்கென சிறிது நேரம் ஒதுக்கி தியானம் செய்வது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். அதற்காக பயிற்சி வகுப்புகளுக்குத்தான் செல்ல வேண்டுமென அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடி ‘‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என மனப்பூர்வமாக உணர்ந்து சொல்லுங்கள். இது உங்களின் அன்றைய நாளின் போக்கையே மாற்றிவிடும். நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என நம்முடைய எண்ணங்கள்தான் முடிவு செய்யும்.
மூச்சுப் பயிற்சி: ஒரு அழுத்தமான சூழ்நிலையை எதிர்கொள்ள போகிறோம் என நீங்கள் உணர்ந்தால் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு உங்கள் சுவாசித்தலில் கவனம் செலுத்துங்கள். நேராக உட்கார்ந்து, கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். ஆழமாக மூச்சு விடுவது இதய துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தெளிந்த மனநிலையுடன் இருக்கும்போது எந்த சூழ்நிலையையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.
பயணம்: மன அழுத்தம் அதிகரிக்கும் போது சோர்வடையாமல் சிறிது நேரம் வெளியே செல்லுங்கள். நொடிக்கு நொடி மாறும் காட்சிகளும், சுத்தமான காற்றும் உங்கள் மனநிலையை மாற்றி புத்துணர்ச்சியாய் உணரச்செய்யும்கலந்துரையாடல்: மன அழுத்தம் அதிகரிக்கும் போது உங்களுக்கு தேவை அதனை குறைக்க ஒரு வடிகால் மட்டும்தான்.
அது உங்களுக்கு பிடித்தவரை தவிர வேறு யாராக இருக்க முடியும். எனவே அவர் உங்கள் அருகில் இருப்பவராய் இருந்தால் நேரில் சென்று பேசுங்கள். அது முடியவில்லை எனில் தொலைபேசியிலாவது பேசுங்கள். இதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது.
புன்னகை: நீங்கள் படங்களில் பார்த்திருப்பீர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிலர் சிரிப்பார்கள். ஆனால் உண்மையில் அது பலன் தரக்கூடிய ஒன்றுதான். சிரிக்கும்போது அது மன அழுத்தத்தை தரும் கார்டிசோல் எனும் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது. மேலும் நம் மனநிலையை மாற்றக்கூடிய எண்டோர்பின்ஸ் எனப்படும் மூளை ரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே முடிந்த வரை சிரிக்க முயலுங்கள். மன அழுத்தத்தை புன்னகையால் தோற்கடியுங்கள்.
உணவு: இது சற்று வேடிக்கையாக இருக்கலாம். ‘‘மன அழுத்தத்தில் இருக்கும்போது எப்படி சாப்பிடுவது?” என்று உங்களுக்குள் கேள்வி எழலாம். ஆனால் மன அழுத்தம் உங்களின் உடல் தேவைகளை கவனித்துக் கொள்ளவிடாது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் போது அதுவே உங்கள் மனநிலையை மோசமாக்கும்.
எனவே சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உங்கள் மனநிலையை சீராக்கும். அதிலும் உங்களுக்கு பிடித்த உணவாக இருந்தால் கூடுதல் பலனை தரும்நடைப்பயிற்சி: நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கி விட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது. இசை: எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக் கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் ஹார்மோன் பெருகவும் வழிவகுக்கிறது.தோட்டம்: தாவரங்களோடு சிறிது நேரம் பேசுங்கள். பேச மற்றும் பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவ சக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.
மன அழுத்தத்தை சில நேரங்களில் திடீரென குறைக்க இயலாது. மேலே குறிப்பிட்ட சில வழிகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். எப்போதுமே மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்காமல் நமது கட்டுப்பாட்டில் மனம் இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதில் தீர்க்க முடியும்.
ப்ரியா மோகன்
|