இளநரைக்கு குட்பை
கண்ணாடியில் முதன் முதல் கண்ணில் படும் நரைமுடி நம் அனைவருக்குமே சற்று அதிர்ச்சியை தரும். நம் அழகை மிகைப்படுத்திக் காட்டுவது சிகை என்றால் மிகை ஆகாது. ஆனால் பல காரணிகள் நம் சிகையை பாதிப்படையச் செய்கின்றன.
அவற்றில் பொடுகு, கூந்தல் உதிர்தல், கூந்தல் அடர்த்தி குறைதல், வழுக்கை போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், நம்மில் பலருக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுப்பது இந்த இளநரை தான். தற்போதைய நூற்றாண்டில் வேகமாக நகரும் நவ நாகரீகத்தால் பல உடல் உபாதைகள் நமக்கு வருவது போல் இந்த இளநரையும் மிக இளமையிலேயே வந்துவிடுகிறது. இள நரை என்பது இப்போது 20-25 வயதிலேயே காண்பது ஒரு பொதுவான நிகழ்வாக ஆகிவிட்டது.
கூந்தல் நரைப்பது என்பது வயதாவதால் ஏற்படும் ஒரு இயற்கையான, தவிர்க்க முடியாத மாற்றமேயாகும். ஆனால், நம் கூந்தல் முன்கூட்டியே நரைக்க ஆரம்பித்தால் அது நமக்கு மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறிவிடும். பித்தத்தின் தாக்கம், மரபணு பண்பு, ஒரு சில நோய்கள் மற்றும் மருந்துகள் அல்லது மோசமான ஊட்டச்சத்து ஆகியவை இள நரைக்கு வழிவகுக்கக்கூடிய சில காரணங்கள். துரதிர்ஷ்டவசமாக, கூந்தலுக்கு வண்ணம் பூசினால் மட்டுமே நரையை சரிசெய்ய முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இது ஒரு தற்காலிக தீர்வேயாகும்.
மேலும் நமது கூந்தலில் மீண்டும் மீண்டும் சாயம் பூசிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி போடப்படும் சாயங்களில் உள்ள அனைத்து கடுமையான ரசாயனங்களும் தொடர்ந்து நீண்ட நேரம் மற்றும் நாட்கள் பயன்படுத்துவதால் நம் தலைமுடிக்கும் உடம்புக்கும் பல தீங்குகளை விளைவிக்கும்.
கூந்தல் நரை பற்றிய நிறைய கட்டுக்கதைகளை நாம் கேட்டதுண்டு. அந்த கட்டுக்கதைகள் உண்மையா? நரைத்த கூந்தலை இயற்கையாகவே மீண்டும் கருப்பாக்க முடியுமா? இல்லை ரசாயன சாயத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டுமா என்பதை இங்கு பார்க்கலாம். கூந்தல் நரைப்பது மீள முடியாத பிரச்சினை இல்லை.
ஆனாலும், நாம் நம் கூந்தல் நரைத்த பிறகு என்ன செய்வது என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, வருமுன் தடுக்க முயற்சி செய்வதே சிறந்த வழியாகும். ‘இள நரை’ என்பது 20 முதல் 25 வயதிற்கு முன் கூந்தல் நரைக்க ஆரம்பித்தல். மெலனின் உற்பத்தி நிறுத்தப்படும்போது அல்லது குறையும் போது கூந்தல் நரைஏற்படும். கூந்தலின் அனைத்து இயற்கையான நிறங்களும் ‘மெலனின்’ எனப்படும் நிறமியால் ஏற்படுகின்றன. இந்த நிறமி கூந்தலின் கால்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிக மெலனின் சுரப்பு கூந்தலுக்கு அடர்ந்த கருமையைத் தரும். வயதுக்கு ஏற்ப, இந்த செல்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது, இதன் விளைவாக கூந்தலின் நிறம் குறைந்து நரை ஏற்படுகிறது.இள நரையை ஆயுர்வேதத்தில் ‘அகால பாலித்யம்’ என்கிறோம். இது பித்த தோஷத்தின் காரணமாக ஏற்படுவதாக கருதப்படுகிறது. இரண்டு வகையான கூந்தல் நரை உள்ளது, ஒன்று அகால பாலித்யம் [முன்கூட்டிய நரை] மற்றும் மற்றொன்று கால பாலித்யம் [முதுமை நரை] என்றும் ஆயுர்வேதம் விளக்குகிறது. ‘அகால பாலித்யம்’ முக்கியமாக பித்த தோஷத்தின் அதிகப்படியான உஷ்ண குணத்தால் ஏற்படுகிறது. ‘பிரஜக பித்தம்’ என்னும் பித்தத்தின் ஒரு வகை நமது கூந்தல் மற்றும் தோலின் இயற்கையான நிறத்திற்கு காரணமாக அமைகிறது. நவீன கண்ணோட்டத்தில் பிரஜக பித்தமே மெலனின் ஆகும். பிரஜக பித்தத்தில் உள்ள சமநிலையின்மை மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது, இதன் விளைவாக கூந்தல் முன்கூட்டியே நரையாகிறது.
பெண்களுக்கு இளநரை அநேக பெண்களுக்கு சிகை என்பது ஒரு சுய அடையாளத்தின் / வெளிப்பாட்டின் வடிவமாக இருக்கும். அது வெள்ளை / சாம்பல் நிறமாக மாறத் தொடங்கும் போது, சில பெண்கள் அதைப் பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு, இது விரக்தியையோ அல்லது பதற்றத்தையோ கொடுக்கலாம். குறிப்பாக, இது எதிர்பார்த்ததை விட முன்னதாக நடந்தால் அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கலாம்.பெண்களில், நரைத்தல் பொதுவாக நெற்றியை சுற்றி தொடங்கி, உச்சந்தலையின் மேல் நோக்கி நகரும். முதலில் சாம்பல் நிறமாக மாறி இறுதியில் வெண்மையாக மாறக்கூடும்.
இளநரைக்கு காரணம்
இள நரைக்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது உணவுமுறை, இரண்டாவது வாழ்க்கை முறை, மூன்றாவது மனோநிலை மற்றும் நான்காவது மரபியல் காரணம். மெலனின் உற்பத்தியில் ஏற்படும் கோளாறு காரணமாக சிகையின் நிற வேறுபாடுகள் ஏற்படலாம். மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் முறையற்ற உணவு முறைகள் ஆகியவை போன்றவற்றால் பித்தம் கேடாகி மெலனின் உற்பத்தி பாதிக்கப்படலாம்.
மொத்தத்தில், இளநரை என்பது பித்த தோஷ சீற்றத்தின் ஒரு பண்பாகும்.
*பித்த பிரகிருதியைக் கொண்டிருப்பது மற்றும் பித்தத்தை மோசமாக்கும் உணவுகள் மற்றும் நடைமுறைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நமது பித்த தோஷத்தை நாம் சீற்றமடையச் செய்து இள நரையை வரவழைத்துக் கொள்கிறோம்.
*கூந்தலில் மற்றும் உச்சந்தலையில் தொடர்ந்து எண்ணெய் தடவாமல் இருப்பது.
*அசிடிடி, GERD, அல்சர், அடிக்கடி ஏற்படும் வயிற்று உபாதைகள், வயது முதிர்ந்த முகப்பரு, குதிகால் வெடிப்பு, மெலிந்த கூந்தல் போன்ற பித்த தோஷம் சமநிலையை இழக்கும்போது ஏற்படும் முக்கியமான அறிகுறிகளை நாம் புறக்கணிப்பது.
இளநரையின் பிற காரணங்கள்
*ரத்த சோகை
*நாள்பட்ட மற்றும் மீண்டும் மீண்டும் வரும் ஜலதோஷம்
*நாள்பட்ட மலச்சிக்கல்
*உச்சந்தலையின் மோசமான சுகாதாரம்
*துரித உணவுகள் அல்லது மசாலா நிறைந்த உணவுகள்
*ஃபோலிக் அமிலக் குறைபாடு
*பரம்பரை காரணிகள்
*ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
*உணவில் குறைவான அளவு இரும்பு, தாமிரம், கால்சியம், வைட்டமின் பி, பி12 மற்றும் டி3.
*புகைப்பிடித்தல், மது அருந்துதல்
*தூக்கமின்மை
*மன அழுத்தம், மனச்சோர்வு, கோபம், கவலைகள், பதட்டம்
*நாள்பட்ட சைனசிடிஸ்
*தைராய்டு கோளாறுகள்
*கன உலோக விஷம்
*முடி சாயங்களைப் பயன்படுத்துதல்
*மின்சார உலர்த்திகளின்(Drier).
பயன்பாடு.
சிகிச்சை
இள நரைக்கு ஆயுர்வேதத்தில் பல நல்ல மருந்துகள் இருந்தாலும் ஒரு தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே மருந்துகளை உபயோகிக்கவேண்டும். இளநரைக்கு முதலில் ஆயுர்வேத பேதி மருந்துகளை வெந்நீரில் இரவில் மட்டும் மூன்று நாள் கொடுக்கலாம். இதை ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மிருது விரேசனம்’ என்று கூறுவோம், இதன் மூலமாக உடம்பில் உள்ள அதிகப்படியான பித்தமும் நச்சு நீர்களும் வெளியேற ஒரு சிறந்த மருத்துவமாக அமையும். இள நரைக்கு ஆயுர்வேத பேதி மருந்தாக ‘கல்யாண குடம்’ பயன்படுத்தலாம்.
பின் தண்ணீர் விட்டான் கிழங்கு சூரணம், கரிசலாங்கண்ணி சூரணம், அதிமதுர சூரணம், காசிச பற்பம், பவள பற்பம் ஆகிய பித்தத்தை சமநிலைப்படுத்தக் கூடிய மூலிகைகளை நெய்யுடன் சேர்த்து இரவில் கொடுக்க நல்ல பலன் தரும்
நஸ்ய சிகிச்சை
இள முடி நரைப்பதற்கு பிங்கராஜ நெய், பிரபௌண்டரீகாதி எண்ணெய், மகா திக்தக நெய், சந்தனாதி தைலம், பிருங்கராஜ தைலம், மதுயஷ்டி தைலம், நிம்பபீஜாதி தைலம் ஆகியவை நாவன, மர்ஷ, பிரதிமர்ஷ நஸ்ய முறைகள் படி பயன்படுத்தி வர நல்ல பலன் தரும்.
தலை பற்று (ஷிரோ லேபம்)
இரும்புபொடி (ஆயுர்வேத முறைப்படி சுத்திகரித்தது), கரிசலாங்கண்ணி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவை சமமாக எடுத்து பொடி செய்து முதிர்ந்த தேங்காயில் ஒரு மாதம் வைத்து பின் முடியின் மேல் தடவ நல்ல பலன் தரும்.
கடுக்காய், நல்லெண்ணை, அரிசி கஞ்சி, இரும்புபொடி (ஆயுர்வேத முறைப்படி சுத்திகரித்தது) ஆகியவை கலந்து தலையில் இடலாம்.
தலைக்கு தேய்க்கும் எண்ணெய்கள்
மாலத்யாதி கேரம், பிரபௌண்டரீகாதி எண்ணெய், நீலிபிருங்காதி தைலம் ஆகியவை தலைக்கு தினமும் தேய்த்து வர நல்ல பலன் தரும்.
பத்திய முறைகள்
உணவில் பயத்தம் பருப்பு, பால், நெய், மாதுளை, எள்ளு, மாம்பருப்பு, செம்பருத்தி, அவுரி, தேங்காய், வெண்பூசணி, மணத்தக்காளி, திராட்சை, கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி ஆகியவை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். முறையான கூந்தல் பராமரிப்பு, முறையாக தலைக்கு எண்ணெய் தேய்த்தல், நஸ்யம் செய்தல், ஆரோக்யமான அறுசுவையுடன் கூடிய உணவு, சரியான நேரத்தில் தூங்குதல் ஆகியவை எப்போதும் நமது ஆரோக்கியத்தை காத்து நம் சிகையை பாதுகாக்கும்.
தவிர்க்க வேண்டியவை
பித்தத்தை அதிகரிக்கக்கூடிய உணவு
களான அதிக சூடான மற்றும் அதிக உப்பு, புளிப்பு மற்றும் கார சுவைகளை கொண்ட உணவுகள், பூண்டு, உளுந்து, கொள்ளு, அடிக்கடி டீ, காபி மற்றும் வறட்சியான உணவுகளை தவிர்த்தல் அவசியம். மேலும் அதிகமான உடற்பயிற்சி, அதிக நேரம் வெயில் மற்றும் தூசியில் இருப்பது, மது மற்றும் புகைத்தல், இயற்கை உந்துதல்களை அடக்குவது, துக்கம், கோவம், பதற்றம், மனச்சோர்வு மற்றும் முறையற்ற தூக்க பழக்கம், ராத்திரியில் அதிக நேரம் கண் விழிப்பது ஆகியவை அவசியம் தவிர்த்தல் வேண்டும்.ஆக, இளநரையை தவிர்ப்பதும் குணப்படுத்துவதும் மிகவும் கடினமான செயலே அல்ல என்பதை நீங்கள் இப்போது நன்கு உணர்ந்திருப்பீர்கள்.
உஷா நாராயணன்
|