இன்னொரு வட மாநிலம்...
இன்னொரு இளம் பெண்...
இன்னொரு ஆண்கள் கூட்டம்...
இன்னுமொரு கற்பழிப்பு...
டெல்லி நிர்பயா மரணம் குறித்த அனுதாப அலைகளே முற்றிலும் ஓய்ந்த பாடாக இல்லை. அதற்குள் கிட்டத்தட்ட அதே காட்சியை நினைவூட்டும் வகையில், மற்றுமொரு பாலியல் வன்கொடுமை அரங்கேறியிருக்கிறது. மும்பையை சேர்ந்த 22 வயது பெண்... புகைப்படப் பத்திரிகையாளரான அவர், தனது ஆண் நண்பருடன், மகாலட்சுமி ஏரியா அருகில் ரயில்வே டிராக்கை ஒட்டிய சக்தி மில்லின் உள்ளே ஒரு செய்தி சேகரிப்புக்காக சென்றிருக்கிறார். அங்கிருந்த 5 ஆண்கள், அந்தப் பெண்ணையும் அவரது நண்பரையும் சுற்றி வளைத்து, ரயில்வேக்கு சொந்தமான அந்த இடத்தில் அவர்கள் அத்துமீறி நுழைந்து விட்டதாக தகராறு செய்ததுடன், அதற்காக சீனியர் ஆபீசரை சந்திக்க வேண்டும் என அழைத்திருக்கிறார்கள். அதற்குள் அந்த ஐவரில் இருவர், அந்தப் பெண்ணின் நண்பரைத் தாக்க, மற்ற மூவரும், அந்தப் பெண்ணை ஒரு மூலைக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். பிறகு இருவரையும் அதே நிலையில் அங்கேயே விட்டுவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். ஆள் அரவமற்ற அந்த மில்லில் இருந்து வெளியேறிய இருவரும், குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தகவல் சொல்லிய பிறகு, காவல் துறையில் புகாரும் கொடுத்திருக்கின்றனர்.
‘‘குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்... சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். சீக்கிரமே உண்மையான குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்...’’ - வார்த்தை பிசகாமல் ஒரே மாதிரியான வசனம் பேசியிருக்கிறார்கள் காவல் துறையினர். மீடியா படையெடுப்புக்குப் பிறகு, குற்றவாளிகளின் உருவங்கள் வெளியிடப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரமாக்கப்பட்டிருக்கிறது.
சமூக அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிற பொறுப்பில் இருக்கும் பத்திரிகையாளருக்கே இதே கதி என்றால், மற்ற பெண்களின் கதி?
‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம்’ என்ற விந்தை மனிதரின் வாக்குதான் தீர்வா?
‘‘குரூர புத்தி படைத்த ஆண்களின் பார்வையில் பெண் என்பவள் தம் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான கருவி. அவள் படித்தவளா- படிக்காதவளா, போலீஸா-மந்திரியா-பஞ்சாயத்துத் தலைவியா, ஏழையா-வசதியானவளா, மன வளர்ச்சிக் குன்றியவளா-குழந்தையா-வயதானவளா... இப்படி எந்த பேதமும் அவர்களுக்கு இல்லை. ஊடகங்களில் வேலை பார்க்கிற பெண்கள், சமுதாயப் பிரச்னைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறவர்கள். அந்தப் பெண்களுக்கே இந்த நிலை என்றால், இந்த உலகத்தில் பெண்களுக்கு எதுதான் பாதுகாப்பான இடம்?
பயமாக இருக்கிறது...’’ - ஆற்றாமையும் ஆத்திரமும் பொங்கப் பேசுகிறார் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான க்ருஷாங்கினி.

‘‘பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் ஆண்களின் உலகம் இது. அவர்களுக்கு இச்சை தலைதூக்கும் போது, உடனடியாக இயங்க வேண்டும். அதற்கான ஒரு கருவி பெண்ணின் உடல்... அவ்வளவுதான். அதைத் தாண்டி, அவர்களால் பெண்ணை வேறு எப்படியும், கண்ணிய மாகக் கற்பனை செய்ய முடியாது.
வீட்டை விட்டு வெளியே வராமல் பெண்களை முடக்கும் ஆணாதிக்க முயற்சியின் தொடர்ச்சிதான் இது. வீட்டை விட்டு வெளியே வருகிற பெண், எதற்கும் தயாராக இருந்தாக வேண்டும் என்கிற குரூர புத்தியின் வெளிப்பாடு.
இதுபோன்ற அத்துமீறல்களை அரங்கேற்றும் ஆண்களுக்கு அவற்றிலிருந்து தப்பிப்பது ஒன்றும் முடியாத காரியமில்லை. அவன் அரசியல்வாதியோ, பெரிய இடத்து வாரிசோ, தொழிலாளியோ... அவனவன் பின்னணியில் ஒரு அரசியல் செல்வாக்கும் ஆள்பலமும் இருக்கவே செய்கிறது. பெண்களைக் காப்பாற்றத்தான் இங்கே யாருமில்லை.
குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் வேகம் வேண்டும். கண்டுபிடித்த பிறகு, அவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாத சூழலை உருவாக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். நிதானமாக கண்டுபிடித்து விசாரிப்பதோ, தண்டிப்பதோ, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ, அவளைப் போன்ற மற்ற பெண்களுக்கோ எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை. தன் ரத்த உறவுகளைத் தவிர மற்ற எல்லா பெண்களையும் பொதுமகளிராகப் பார்க்கும் ஆண்களை அத்தகைய கடுமையான தண்டனைகளால் மட்டுமே அடக்க முடியும்...’’ - கடுமையாகச் சொல்கிறார் க்ருஷாங்கினி.
- ஆர்.வைதேகி