அய்ச்சுப் பாப்பா..! : என் அப்பா



ஐஸ்வர்யா அர்ஜுன்



அர்ஜுன் வீட்டு பட்டத்து இளவரசி ஐஸ்வர்யா! ‘பட்டத்து யானை’ படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருக்கும் ஐஸ்வர்யா முதல் சந்திப்பிலேயே வசீகரிக்கிறார். தோற்றத்தில் மட்டுமல்ல... மனசுக்கு நெருக்கமாகப் பழகும் விதத்திலும்... பிரபல நடிகரின் மகள் என்று சத்தியம் செய்தாலும் நம்ப முடியாத அளவுக்கு அத்தனை எளிமை. ‘ஐஸ்வர்யா என்றால் அழகானவர், எளிமையானவர்’ என்று அருஞ்சொற்பொருள் கூறலாம் போலிருக்கிறது. தன் முதல் படம் ‘பட்டத்து யானை’ ஹிட்டான சந்தோஷத்தில் இருந்த ஐஸ்வர்யாவிடம் அவரது அப்பா அர்ஜுன் பற்றிக் கேட்டதும் அவரது சந்தோஷம் இரட்டிப்பானது!

‘‘அப்பா பத்தி மட்டும் கேக்கப் போறீங்களா? வாவ்! இந்த உலகத்துலயே ‘தி பெஸ்ட் ஃபாதர்’னா அது எங்கப்பா மட்டும்தான். சினிமாவுலதான் எங்கப்பா ஆக்ஷன் கிங். நிஜத்துல அன்பும் பாசமும் சென்ட்டிமென்ட்ஸும் கலந்தவர்’’ - உற்சாகம் பொங்க பேசத்தொடங்கினார் ஐஸ்வர்யா...

‘‘அப்பா, அம்மா நிவேதிதா, நான், என் தங்கை அஞ்சனா - நாங்க நாலு பேரும் ரொம்ப க்ளோஸ். அம்மா என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். ஆனாலும், நான் அப்பா செல்லம்தான்!

பொதுவா பல வீடுகள்ல ரெண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தை மேல அக்கறை குறையும். அதனாலயே அந்தக் குழந்தைக்கு ரெண்டாவது குழந்தை மேல வெறுப்பு வரும். இன்னிக்கு நானும் அஞ்சனாவும் அவ்ளோ க்ளோஸ். எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். அவளைக் கொஞ்சு வேன். புரொடெக்ட் பண்ணுவேன். அதுக்கெல்லாம் காரணம் அப்பா.
அஞ்சனா பிறந்ததும் நான் அப்செட் ஆயிடக் கூடாதேன்னு வழக்கத்தைவிட இன்னும் அதிகமா என்கிட்ட அன்பு காட்டினார்.



நான் குழந்தையா இருந்தப்பல்லாம் அப்பா பயங்கர பிசியா பீக்ல இருந்தார். எவ்ளோ பிசியா இருந்தாலும் அவர் எங்களுக்கான கடமைகளை செய்யறதுல தவறினதே இல்லை. ‘அய்ச்சுப் பாப்பா’ன்னு அவர் கூப்பிடறப்ப, உலகத்துல உள்ள மொத்த அன்பையும் எனக்கே எனக்காக எழுதிக் கொடுத்துட்ட மாதிரி இருக்கும்.

என்னை ஸ்கூல்ல டிராப் பண்றது, எனக்கு சாப்பாடு ஊட்டி விடறது, தலைவாரி விடறதுன்னு எல்லாமே அப்பா தான் செய்வார். ஆக்ஷன் கிங்கா அவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும் வீட்டுக்குள்ள வந்துட்டா, அந்த முகமூடியைக் கழட்டி வச்சிடுவார். சினிமாவைப் பத்தின பேச்சோ, விவாதமோ வீட்டுக்குள்ளே இருந்ததே இல்லை.

அப்பா ‘முதல்வன்’ படம் பண்ணினப்ப, நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்தேன். தான் பெரிய நடிகர்னு எந்தப் பெருமையும் தெரியாமத்தான் எங்களை அப்பா வளர்த்தார். ‘முதல்வன்’ பார்த்துட்டு, ஸ்கூல்ல ஒரே பரபரப்பு... அத்தனை பேர் பார்வையும் என்மேலதான்... நடிகர் அர்ஜுனோட பொண்ணா, என்னைப் பார்க்க ஆரம்பிச்ச அந்தத் தருணம் கொஞ்சம் புதுசாகவும் பெருமையாகவும் இருந்தது.



படிப்பு விஷயத்துல அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். 99 மார்க்ஸ் வாங்கினாகூட, ‘ஏன் ஒரு மார்க் குறைஞ்சது’ன்னு கேட்பாங்க. அப்பா அப்படியே ஆப்போசிட். ‘ஃபெயில் ஆனாலும் பரவாயில்லை...

ஸ்ட்ரெஸ் இல்லாமப் படி’ன்னு சொல்வார். தன்னோட விருப்பத்தை என் மேல திணிச்சதே இல்லை. ‘உனக்கு என்ன விருப்பமோ செய்... ஆனா, அதை பெஸ்ட்டா பண்ணு’ன்னு சொல்வார். பி.காம் படிச்சேன். அதை முடிச்சதும், பிசினஸ் பண்ணலாமான்னு சின்னதா ஒரு ஐடியா வந்தது. அப்புறம் அதுவும் மாறி, ஃபேஷன் டிசைனிங் பண்ணினேன். எதுக்குமே அப்பா கேள்வி கேட்டதோ, ‘நோ’ சொன்னதோ இல்லை.

ஒரு முறை, ‘உனக்கு நடிப்புல இன்ட்ரஸ்ட் இருந்தாலும் சொல்லு... நானே படம் புரொடியூஸ் பண்றேன்’னு கேட்டார். ஆனா, அப்போ எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை. ‘வேண்டாம்’னு சொல்லிட்டேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, நடிக்கலாமாங்கிற ஐடியா எனக்குள்ளே எட்டிப் பார்த்தது. நான் ஓ.கே. சொன்னா உடனே படம் புரொடியூஸ் பண்ண அப்பா ரெடி. ஆனா புரொடக்ஷன்றது அத்தனை ஈஸியான விஷயமில்லை. இது சரியா வருமா, வராதாங்கிற குழப்பத்துலயே காலம் ஓடிக்கிட்டிருந்தது. அப்பதான் ‘பட்டத்து யானை’ பட வாய்ப்புத் தேடி வந்தது. கதை கேட்டேன். பிடிச்சது. ஹீரோ விஷால்னு சொன்னாங்க. விஷாலும் நானும் ரொம்ப சின்ன வயசுலேருந்தே ஃப்ரெண்ட்ஸ். அவங்கப்பாவும் எங்கப்பாவும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். நடிகையாகறதுன்னு முடிவு பண்ணி, அப்பாகிட்ட ஓ.கே. சொன்னேன்.

அடிப்படையில நான் ரொம்ப சென்சிட்டிவ். அதனால அப்பா எனக்கு ஒரே ஒரு அட்வைஸ்தான் பண்ணினார். ‘யு ஹேவ் டு பி வெரி ஸ்ட்ராங்க்... ஹார்டு ஒர்க் பண்ணு. உண்மையா இரு’ன்னு சொன்னார். ‘பலவகையான விமர்சனங்களை சந்திக்க வேண்டி வரும். நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும். அதுக்குத் தயாரா இரு’ன்னு சொன்னார். அப்பா சொன்ன விஷயங்களை வேதவாக்கா எடுத்துக்கிட்டுத்தான் சினிமாவுக்குள்ள காலெடுத்து வச்சேன். நடிகையாகறதுன்னு முடிவு பண்ணினதும் அப்பாவோட படங்களைப் போட்டுப் பார்த்துதான் நடிப்பு கத்துக்கிட்டேன். நடிக்க வர்றதுக்கு முன்னாடி, ‘நன்றி’ மாதிரியான சில படங்கள்ல அப்பாவோட நடிப்பைப் பார்த்துட்டு, அவரை செமத்தியா கலாய்ப்பேன். நடிகையான பிறகுதான் நடிப்புங்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம்னு தெரிஞ்சது. ‘முதல்வன்’, ‘ரிதம்’, ‘பிரசாத்’னு அப்பா நடிப்புல எனக்குப் பிடிச்ச படங்களைப் பல முறை பார்த்து, சின்னச் சின்ன நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன்.

‘பட்டத்து யானை’ படத்துல என்னோட கேரக்டர், நிஜத்துல என் கேரக்டருக்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாதது. படத்துல நான் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி. ரொம்ப சிம்பிள். கேள்வியே கேட்க மாட்டேன். நிஜத்துல நான் நிறைய கேள்விகள் கேட்பேன். நிறைய நிறைய யோசிப்பேன். ரொம்ப டாமினேட்டிங் கேரக்டர். என் நடைகூட ரொம்ப மாடர்னா இருக்குன்னு சொல்லி, படத்துக்காக கொஞ்சம் மாத்தச் சொன்னாங்க. நிறைய ஹோம்ஒர்க் பண்ணி நடிச்சேன். படம் பார்த்த அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். ‘முதல் படம் மாதிரியில்லை... நல்லா பண்ணியிருக்கே’ன்னு பாராட்டினார்.
அப்பாவுக்கு எப்போதுமே என் பர்த்டே ரொம்ப ஸ்பெஷல். எவ்ளோ பிசியான ஷூட்டிங்ல இருந்தாலும் என் பர்த்டே அன்னிக்கு லீவு எடுத்துட்டு வந்துடு வார். இப்ப என்னோட 18வது பர்த் டே வந்தது. பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ல பார்ட்டி... நிறைய நடிகர், நடிகைகள் வந்தாங்க. அப்பா எனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தார். பிரிச்சுப் பார்த்தப்ப, ‘டு மை லிட்டில் ப்ரின்சஸ்’னு எழுதியிருந்தது. நான் பிறந்ததுலேருந்து, என்னோட 18 வயசு வரைக்குமான பெஸ்ட் மொமென்ட்ஸை வீடியோவா எடுத்திருந்தார். அம்மா, அப்பா, என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாரும் அதுல பேசியிருந்தாங்க. பார்த்ததும் எனக்குக் கண்கள் கலங்கிருச்சு. லைஃப்ல மறக்க முடியாத கிஃப்ட் அது!

நான் பார்க்கிறதுக்கு அம்மா மாதிரி. கேரக்டர்லயோ அப்படியே அப்பா. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட். எங்க ரெண்டு பேருக்கு இடையிலயும் பயங்கரமான ஒரு டெலிபதி உண்டு. எனக்கு என்ன மாதிரியான டிரெஸ் பிடிக்கும், என்ன கலர் பொருத்தமா இருக்கும்னு என்னைவிட அப்பாவுக்கு நல்லாத் தெரியும். அப்பாவைப் பத்தி நினைச்சிட்டிருப்பேன். அப்பாவே போன் பண்ணுவார். ‘நம்மகிட்ட பிளாக் கலர்ல டாப் இல்லையே’ன்னு யோசிச்சிட்டே இருப்பேன். அப்பா அதே பிளாக் கலர் டாப்போட வந்து நிப்பார். அதுதான் அப்பா!

சமீபத்துல அப்பா ‘ஜெய்ஹிந்த்’ படம் சம்பந்தமான ஒரு புரோகிராமுக்கு சூட் போட்டுக்கிட்டுப் போயிருந்தார். வேற ஒரு பார்ட்டிக்கு நானும் அதே மாதிரி சூட் போட்டுக்கிட்டுப் போயிருந்தேன். ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்ததும், சோஃபா மேலே ஒரே மாதிரி அந்த சூட்டை கழட்டிப் போட்டிருந்தோம். எங்களோட மன ஒற்றுமைக்கு இது ஒரு சின்ன உதாரணம். இன்னும் எக்கச்சக்கமா இருக்கு...

அப்பாகிட்டருந்து எனக்கு வரவே வராத விஷயம், அவரோட சுறுசுறுப்பு. நான் பயங்கர சோம்பேறி. நாளெல்லாம் எந்த வேலையும் செய்யாம அப்படியே உட்கார்ந்திருக்கச் சொன்னாலும் இருப்பேன். ஜிம் போறது, ஒர்க் அவுட் பண்றதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது. அப்பா பயங்கர ஹெல்த் கான்ஷியஸ். இப்பவும் டெய்லி ஒர்க் அவுட் பண்ணுவார். எனக்கு இயல்பிலேயே ஒல்லியான உடல்வாகுங்கிறதால, ஒர்க் அவுட் பண்ண வேண்டிய தேவை வந்ததில்லை. நடிகையான பிறகு பண்ணியாக வேண்டிய கட்டாயம். யோகாவும் ஸும்பா டான்ஸும் பண்ணுவேன். என்னை விட என் ஹெல்த் பத்தி அப்பாவுக்குத்தான் அதிக அக்கறை. அம்மா ஊர்ல இல்லாதப்ப அவர்தான் எனக்கு காஃபி போட்டுக் கொடுப்பார். அப்பா பண்ணிக் கொடுக்கிற புரோட்டீன் ஷேக் அவ்ளோ பிரமாதமா இருக்கும்.

அப்பாவோட இத்தனை வருஷ சினிமா அனுபவத்துல எத்தனையோ வெற்றி, தோல்விகளைப் பார்த்திருக்கார். சில படங்கள் ஃபிளாப் ஆகும் போது, அந்த வருத்தமும் டென்ஷனும் அப்பாவுக்குள்ள இருக்கும். என்னிக்குமே அதை வெளியே காட்டிக்கவே மாட்டார். அப்பாவோட அந்த பாலிசியைதான் ஒரு நடிகையா எனக்கான பாடமாவும் நான் எடுத்துக்கிட்டேன்.

எல்லாரும் அர்ஜுன் சாரோட பொண்ணா என்னைப் பார்க்கறாங்க. ஹார்டு ஒர்க் பண்ணினா, நிச்சயம் ஒரு நாள் ஜெயிக்கலாம். உழைப்பு சரியில்லாட்டா, அதுக்கான பலன்தான் கிடைக்கும்னு நம்பறேன்.
அப்பாகூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தா நான் ரெடி. ஒரே ஒரு கண்டிஷன். மகளா நடிக்க மாட்டேன். ஃப்ரெண்டா நடிக்கச் சொன்னா டபுள் ஓ.கே!’’
அட... இது கூட நல்லாருக்கே!
- ஆர்.வைதேகி
படங்கள்: பரணி