என் ஜன்னல் : எண்ணமும் வண்ணமும்



இணையம் : ரசவாதி



மனதுக்கு நெருக்கமானது எதுவென்றாலும் அதன் அருகாமையை நீங்கள் தினமும் தேடி கண்டடைந்து கொள்வீர்கள். போலவே எனக்கு எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணையதளம். நம் காலத்தின் அற்புத கதை சொல்லி.
Feel Good என்பதற்கான அர்த்தத்தை இந்தத் தளத்தில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
அதீத  வார்த்தை ஜாலங்களோ, வாசகனை சுழற்றி அடிக்கும் தெளிவின்மையோ சிறிதும் இன்றி, நம் எதிரே அமர்ந்து கைப்பிடித்து சாதாரண நிகழ்வொன்றை துல்லியமாக எடுத்துரைக்கும் கதை சொல்லியின் இனிமை முத்துலிங்கத்தின் இணைய பதிவுகளை வாசிக்கையில். உலக நாடுகள் பலவற்றில் பணி செய்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், ஈழத்தில் தான் கழித்த நாட்கள் என எல்லா நிகழ்வுகளையும் தனக்கே உரிதான பகடி சேர்த்து பகிர்ந்து வருகிறார்.

முத்துலிங்கத்தின் கதை மாந்தர்களை நீங்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. அவர்களுக்காக அவர் தேர்ந்தெடுக்கும் உவமைகள் அப்படி. கட்டுரைகள் வாயிலாகவும் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அவர்  அறிமுகம் செய்து வரும் நபர்களின் பட்டியல் பெரிது. தொடர்ச்சியான தேடல் மட்டுமே இவரது எழுத்துக்குப் பின்புலப்படுவது. சோர்வுற்று இருக்கும் பொழுதுகளில் தஞ்சமடைய சிறந்ததொரு இணையம்.   ஷ்ஷ்ஷ்.ணீனீuttu.ஸீமீt

இடம் : பேடையன்னம் போலவே...

‘கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் திரிகூடக்கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்பெண்ணுக்குப் பெண்மயங்கவே வசந்தவல்லிபேடையன்னம் போலவே வந்தாள்’
-இந்தக் குற்றால குறவஞ்சி பாடல், ‘பாட்டுடைத் தலைவி சூடி முடித்து, பெண்களே வியக்கும் வண்ணம் வீதியில் அன்ன நடை பயின்று வந்தாள் என்கிறது. தலைவியின் பேரெழிலைப் போலவே குற்றால அருவிகளின் மயக்குறு அழகும்!

பிறந்து வளர்ந்த மதுரைக்கு அடுத்தபடியாக மனதுக்கு நெருக்கமான ஊர் குற்றாலம். பள்ளி, கல்லூரி நாட்களில் குற்றாலம் சென்று வருவது வருடாந்திரக் கடமை போல செய்யப்படும் எங்கள் வீட்டில். வாசுதேவநல்லூரை கடந்ததும் தொடங்கும் குற்றால ஆர்ப்பரிப்பு. பிரமாண்ட காற்றாலைகள், பழமை மாறாத கிராமங்கள், நெல்லைத் தமிழ் என முற்றிலுமாக உள்ளிழுத்துக் கொள்ளும் பயணங்கள் அவை.

குற்றாலத்துக்கே உரிய சாரல், குளிர் காற்று, ஈரம் ஒட்டிய நீண்ட சாலைகள், முன்பின் அறிமுகம் இல்லாத போதும் அருவியின் பொருட்டு நட்பாகச் சிரிக்கும் பெண்கள், இரவொளியில் வெள்ளிக் கம்பி என தூரத்தில் தெரியும் மெயின் அருவி, சாரலோடு கூடிய பயணத்தில் கேட்ட ராஜாவின் பாடல்கள் என நினைத்து நினைத்து மகிழ எனக்கான காட்சிகளை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வேன். பகலும் இரவும் அங்கு ஒன்றுதான். குற்றால இரவுகள் இன்னும் அழகு. ஜன நடமாட்டமும் உணவு விடுதிகளின் ஆர்ப்பாட்டமும் திருவிழா பொழுதுகளை நினைவூட்டுபவை.
தலை தட்டும் மேகங்கள் உங்களுக்குப் பிடிக்குமா? பெருமழைக்கு முன் திரண்டு இருக்கும் மேகங்கள் அச்சத்தை மீறிய சிலிர்ப்பை தரக்கூடியவை. குற்றாலத்தில் மேகக் கூட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. நிற்பதாக, நடனமிடுவதாக, அசைந்து நடப்பதாக உருவம் தரித்து மலைகளை வளம் வருபவை. அருவிகளின் இரைச்சலும் மனதை வருடும் சாரலும் குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும் தீராத மர்மங்கள் பொதிந்த மலைகளும் என ஒருவித சௌந்தர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர் குற்றாலம்... வேறென்ன சொல்ல!

நூல் : சொல்லப்படாத சோகம்

பெருமாள் முருகனின் ‘கூள  மாதாரி’, பாமாவின் ‘கருக்கு’, சோ.தர்மனின் ‘கூகை’, அழகிய பெரியவனின் ‘தகப்பன் கொடி’ என தமிழில் வெளிவந்துள்ள தலித் நாவல்கள் வரிசையில் இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ மிக முக்கியமான படைப்பு. இது தலைமுறை தலைமுறையாய் ஒடுக்கப்பட்டு வருகின்ற தலித் மக்களின் ஒரு பகுதியினரின் வாழ்க்கையை பட்டவர்த்தனமாய் பகிர்கிறது. ஓர் இனமானது எல்லா விதங்களிலும் ஒடுக்கப்படுவதை உரத்துச் சொல்லும் இந்நாவல், அதன் நிதர்சன பதிவுக்காக வெளிவந்த வேளையில் அதிகம் விவாதத்துக்குள்ளானது. மிக எளிமையான நடையில் சாதிய கட்டமைப்புகளின் மோசமான அடையாளங்களை துணிச்சலாக முன்வைக்கிறார் இமையம்.

வண்ணார்களான ஆரோக்கியம்-சவுரி தம்பதியின் வாழ்க்கை குறிப்பே கோவேறு கழுதைகள். வலிந்து திணிக்கப்பட்ட பகுதிகள் என எதையும் அடையாளம் காட்ட முடியாமல், ஆரோக்கியத்தின் பார்வையில் நேர்த்தியாக கதை சொல்லப்படுகிறது. காலையும் மாலையும் மூட்டை மூட்டையாக துணிகளை வெளுப்பதோடு இவர்கள் பணி முடிவதில்லை. ஊரில் நடைபெறும் திருமணம், சடங்கு, இழவு என எல்லா நிகழ்ச்சிகளிலும் ஓயாது வேலை, எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி. இரவானால் வீடு வீடாகச் சென்று ராச்சோறு வாங்கிடும் அவலம். நாலு வரியில் அடக்கிட முடியாத பெருஞ்சோகம்.

காலைச் சுற்றிய பாம்பாக விஷத்தை கக்கியபடி தொடர்ந்து வரும் சாதிய ஒடுக்குமுறையை ஆரோக்கியம்-சவுரி தம்பதி ஏற்றுக் கொண்டது போல அவர்களின் குழந்தைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறி வரும் சமூக சூழ்நிலையில் இன்றைய தலைமுறையினர் படித்து முன்னேறவோ, சுயமாக தொழில் செய்து பிழைக்கவோ ஆர்வம் கொண்டிருப்பதை ஆரோக்கியத்தின் மகன் பீட்டரின் வாயிலாக சொல்லப்படுகிறது. ஆரோக்கியத்தின் உலகத்தில் இருந்து விலகி நிற்க, முயன்று வெல்கிறான் அவன். சாதிய ஒடுக்குமுறைக்குப் பழகிய ஆரோக்கியத்தால் அம்மாற்றங்களை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. கோவேறு கழுதையாகவே தன் வாழ்வை வாழ்ந்து தீர்க்கிறான்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வேறுபாடு இன்றி அவ்வினத்தினர் அனுபவித்த சித்ரவதைகள், வாசிப்போரை சில நிமிடம் வெற்றிடம் நோக்கச் செய்யும். நாவலில் வருவது சிறுபகுதியே... சொல்லப்படாத சோகம் இதனினும் வலி மிகுந்ததாகவே இருந்திருக்கக் கூடும். எத்தனையோ புத்தகங்கள் வாசித்திருந்தாலும், மனதில் தீராத ரணம் ஏற்படுத்திய படைப்பு இது. அடுத்த தலைமுறைக்கு தீண்டாமை கொடுமைகளை எடுத்துச் சொல்ல இவ்வகை நாவல்கள் தரும் பாதிப்பு மிக அவசியம்.
வெளியீடு: க்ரியா ரூ.180

சினிமா : அன்பின் வழி

அன்பை புறக்கணிக்கும் இருவேறு மனிதர்களின் அகவுலக சலனங்களை நுட்பமாக அணுகி பேசுகின்ற திரைப்படம் Central Station (1998). உலகளவில் பேசப்பட்ட The Motorcycle Diaries, Midnight, Dark Water படங்களை இயக்கிய பிரேசில் இயக்குனர் வால்டர் செலஸின் இப்படம் 50க்கும் அதிக விருதுகளை வென்றது.
ரியோ நகரத்தின் பிரதான ரயில் நிலையத்தில் அமர்ந்து, வேண்டுபவர்களுக்கு கடிதம் எழுதி தரும் டோரா என்னும் ஓய்வு பெற்ற ஆசிரியையைச் சுற்றி நகரும் கதை. புன்னகை மறந்த முகமும் எரிச்சல் முற்றிய குரலும் அவள் அடையாளங்கள்.

ஒரு நாள், கணவனுக்கு கடிதம் எழுதக் கேட்டு மகனுடன் டோராவிடம் வரும் பெண், எதிர்பாராதவிதமாக ரயில் நிலையத்தின் அருகிலேயே விபத்தில் மரணிக்கிறாள். அது வரையில் தந்தையை பார்த்திராத சிறுவன் அவன். அவனை எப்படியும் தந்தையிடம் சேர்த்து விட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு, சிறுவனோடு வடக்கு பிரேசில் நோக்கி பயணிக் கிறாள் டோரா. பேருந்திலும் லாரியிலும் ட்ரக்கிலும் மாறி மாறிச் செல்லும் அவர்களின் பயணம் பிரேசிலின் வெக்கையும் புழுதியும் படிந்த நிலப்பரப்பின் அழகை காட்டியபடி தொடர்கிறது. அன்பென்பதை இதுவரை அறிந்திராத டோராவுக்கு சிறுவனின் வருகை பெரிய மாற்றத்தைத் தருகிறது. அவனிடத்தில் தொடங்கி மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொள்கிறாள்.

அவர்களின் நினைவு பொக்கிஷத்தில் நிலைத்து நிற்க போகும் இரவானது, மகிழ்ச்சியாக அவ்விருவரும் தெருவில் ஆரவாரித்தபடி கழிகிறது. நீண்ட தேடலுக்குப் பின் சிறுவனை தந்தை வீட்டில் சேர்ப்பித்து விட்டு அவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு டோரா கண்ணீர் சிந்தியபடி ரியோ  திரும்புவதாக முடிகிறது திரைப்படம்.

மனவெளியின் கதவுகள் திறக்க அதிகம் சிரமப்பட  வேண்டியதில்லை. அன்பு செய்ய கற்றுக்கொண்டால் போதுமானது என்பதை மிக எளிய கதையின் ஊடே முன்வைக்கிறார் வால்டர். இத்திரைப்படம் பார்த்து முடித்த தருவாயில், ‘திடமான பாறைகள் போல ஒவ்வொரு புறமும் சரிந்து கிடக்கிற மனமே... இப்படி ஒரு சில இடங்களில், ஒரு சில மனிதர்கள் முன் உருகி, ஆவியாகி ஓடிவிட தயாராகி விடுகிறது’ எனும் வண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வந்ததை தவிர்க்க இயலவில்லை.