ஆண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தில் நிச்சயம் குறை இருக்கும். ‘பெண் குழந்தையாக இருந்தால், பார்த்துப் பார்த்து விதம் விதமான நகையும் உடையும் போட்டு அழகுப் பார்க்கலாமே...’ என ஆதங்கப்படுவார்கள். பார்பி பொம்மைக்கு அழகழகான மாடல்களில் நகையும் உடையும் மாட்டி விளையாடுவது, பெண் குழந்தைகளுக்குமே விருப்பமான விளையாட்டு. பெண்ணுக்கும் நகைக்குமான அந்த பந்தம், பிறந்ததிலிருந்தே தொடங்குகிறது. தங்கம், வெள்ளி, வைரத்தை விரும்பிய பெண்களின் கவனம், சமீப காலமாக ஃபேஷன் ஜுவல்லரி பக்கம் திரும்பியிருக்கிறது. கையைக் கடிக்காத பட்ஜெட்டில், உடைக்கு ஒன்றாக, ஒவ்வொரு முறையும் புதுசு புதுசாக அணிய ஃபேஷன் நகைகள்தான் பெஸ்ட் சாய்ஸ்!
‘அந்தக் குடை ஜிமிக்கி உனக்கு நல்லா இருக்கு. நான் போட்டா சகிக்கலை...’ என்றோ, ‘கழுத்தை ஒட்டின மாதிரி ஒரு சோக்கர் செட் வாங்கணும்னு ஆசை... ஆனா, வாங்கின பிறகு நல்லா இல்லைன்னா என்ன செய்யறது?’ என்றோ, ‘என் கலர்தான் எனக்கு மைனஸ்... கோல்டு தவிர வேற என்ன போட்டாலும் எடுப்பா இருக்கறதே இல்லை’ என்றோ ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஆதங்கம்...
அத்தனையையும் தீர்க்கவே இந்தப் பகுதி. உங்கள் வீட்டுக் குட்டிப் பாப்பா முதல் பாட்டி வரை அத்தனை பேருக்கும் என்ன மாதிரி நகைகள் பொருந்தும்? எந்த உடைக்கு எதை அணியலாம்? என்ன கலர் காம்பினேஷன் அழகு? இப்படி அத்தனை தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறார் நகை வடிவமைப்பாளர் சாந்தி ஸ்ரீனிவாசன். பிரபலங்களுக்கு நகை வடிவமைத்துக் கொடுப்பதிலும் அன்பளிப்பு நகைகள் டிசைன் செய்து கொடுப்பதிலும் எக்ஸ்பர்ட் இவர் என்பது கூடுதல் தகவல்!
இந்த இதழில் குட்டிப்பாப்பாக்களுக்கான நகைகள்...
எந்த உடைக்கு என்ன நகை?பட்டுப் பாவாடை, சட்டைக்கு... தங்க நிற நகைகளே பொருத்தம். அதிலும் பாவாடை ஜரிகையில் உள்ள டிசைனுக்கு மேட்ச்சாக குட்டிக் குட்டி ஜிமிக்கி, அதே டிசைனில் கழுத்துக்கு நெக்லஸ், ஒரு கைக்கு பிரேஸ்லெட், மோதிரம், நெத்திச்சுட்டி, காலுக்கு கொலுசு எல்லாம் போடும்போது, குட்டி தேவதைகளாகவே மாறிவிடுவார்கள்!
காக்ரா உடைக்கு... இவை பெரும்பாலும், கழுத்துப் பகுதியில் வேலைப்பாடுகள் கொண்டதாக வருவதால், கழுத்துக்கென தனியே நகை தேவைப்படாது. உடையின் நிறத்தைப் பொறுத்து, காதணியும் பிரேஸ்லெட்டும் அணிவித்தாலே போதுமானது.
ஃபிராக்... இப்போது பெரும்பாலும் சில்வர் அல்லது காப்பர் அல்லது இரண்டும் கலந்த காம்பினேஷன்தான் குழந்தைகள் மத்தியில் ஃபேஷன். அதே கலரில் அவர்களுக்கான நகைகளை வடிவமைக்கலாம். கழுத்துப் பகுதி முழுவதும் காட்டும்படியான ஃபிராக் என்றால் ஆடம்பரமான டிசைனில் சோக்கர் செட் அணிவிக்கலாம்.
* காட்டன் ஃபிராக் என்றால், குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர் வைத்துச் செய்த தோடு, கழுத்துக்கான திரெட் செயின், பிரேஸ்லெட் பொருத்தம்.
சல்வார்... குட்டி டாலர் வைத்த செயின், அதே டாலர் டிசைனில் காதணி போதும். முத்து வைத்துச் செய்த குட்டி நெக்லஸ் மற்றும் தோடுகூட அழகாக இருக்கும்.
வெஸ்டர்ன் டிரெஸ்... ஒரே ஒரு மணி வைத்த சில்வர் கலர் செயின், காதுக்கு அதே மணி வைத்த வளையம் அல்லது கலர் மணிகள் வைத்த எலாஸ்டிக் பேன்டுகள் அல்லது வுட்டன் மணி செட்.
யாருக்கு எது?* முத்து மற்றும் கோல்டன் மணிகள் கலந்த நகைகள் எல்லாக் குழந்தைகளுக்கும் அழகு.
* வட்டவடிவ முகம் கொண்ட குழந்தைகளுக்கு பெரிய மணிகளும், ஒல்லியான, சின்ன முகம் கொண்ட குழந்தைகளுக்கு சின்ன மணிகளும் வைத்துச் செய்த நகைகள்தான் அழகு.
* நல்ல நிறம் கொண்ட குழந்தைகளுக்கு டார்க் நகைகளும், மாநிறமான குழந்தைகளுக்கு லைட் அண்ட் டார்க் காம்பினேஷனும், நிறம் கம்மியான குழந்தைகளுக்கு சில்வர் கலரில் கற்கள் பதித்தவையும் பொருந்தும்.
தேர்ந்தெடுக்கும் போது...* குழந்தைகளுக்கு அளவு என்பது மிக முக்கியம். அவர்களது கழுத்து, கை, கால் அளவுகளுக்கேற்ப சரியான நீள, அகலங்களில் நகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். கடைகளில் கிடைக்காவிட்டால், ஜுவல்லரி டிசைனர்களிடம் பிரத்தியேகமாக செய்து வாங்கலாம்.
* குழந்தைகளின் சருமத்தை உறுத்தக் கூடாது. கூர்மையான முனைகள் இருக்கக் கூடாது.
* தொலைத்து விடுவார்கள் என்றோ, வீணடித்து விடுவார்கள் என்றோ, விலை மலிவாக நடைபாதைக் கடைகளில் வாங்க வேண்டாம். தவிர்க்க முடியாமல் வாங்கும் போதும், நகையின் உலோக பாகம் சருமத்தில் படுகிற இடங்களில் டிரான்ஸ்பரன்ட் நெயில்பாலீஷ் தடவி அணிவித்தால் அலர்ஜி இருக்காது.
* தொடர்ந்து அலர்ஜி இருந்தால் சரும மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. நகையில் உள்ள கெமிக்கல் பிரச்னையா அல்லது உடலில் பிரச்னையா எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தைகளின் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு நகைகளை அணிவித்தால், சருமம் பாதிக்கப்படாமலிருக்கும்.
* குழந்தைகளுக்கு நகைகள் வாங்கும் போது, மைக்ரோ பிளேட்டட் செய்யப்பட்ட நகைகள் எனக் கேட்டு வாங்கவும். அவற்றில் அலர்ஜிக்கான அபாயமில்லை.
* சாயம் போகிற மணிகள், முத்துகள் வைத்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டாம். வாயில் வைத்தால், அதிலுள்ள கெமிக்கல் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
- ஆர்.வைதேகி
படங்கள்: பரணி