இந்தியாவின் முந்தைய தலைநகரம் கொல்கத்தா. கங்கை முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் இந்நகரம் கலை, பண்பாடு, அரசியல் என கலவையான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. கங்கையின் துணையாறு ஹூக்ளி, கொல்கத்தாவையும் ஹவுராவையும் பிரிக்கிறது. ஆற்றின் கரையில் இருந்து இவ்விரு நகரங்களையும் காண்பதும், ஹூக்ளி ஆற்றில் படகுச் சவாரி செய்வதும் அற்புத அனுபவம்! படகுப் பயணத்தில் பிரமாண்டமான ஹவுரா பாலங்களை ரசிக்கலாம். கிழக்கிந்திய கம்பெனியின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டு நிற்கும் விக்டோரியா மெமோரியல் மற்றும் அதன் பூங்கா, எதிரிலேயே இருக்கும் இசை நீரூற்று பூங்கா, அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா, புகழ்பெற்ற காளி கோயில், தக்னேஸ்வர் கோயில், பிர்லா மந்திர், ராமகிருஷ்ணா மடம், பிர்லா கோளரங்கம், சயின்ஸ் சிட்டி, வாட்டர் பார்க், கதீட்ரல், ஃபோர்ட் வில்லியம், மியூசியம், மார்பிள் பேலஸ், நேஷனல் லைப்ரரி, ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம், ரபீந்திர சரோவர், ஹார்டிகல்சுரல் கார்டன், பொட்டானிகல் கார்டன் உள்பட ஏராளமான இடங்கள் நிறைந்திருக்கின்றன. இந்தியாவின் பல நகரங்களை விடவும் கொல்கத்தாவில் டாக்சி கட்டணம் மிகக்குறைவு. மெட்ரோ, டிராம் பயணங்கள் பலருக்கு புதிய வாய்ப்பாக அமையும்!

எப்படிச் செல்வது?விமானம், ரயில்.
எப்பொழுது செல்வது?
ஆண்டு முழுவதும் செல்லலாம். அக்டோபர் - மார்ச் நல்ல சீஸன்.
எங்கே தங்குவது?பட்ஜெட் முதல் ஸ்டார் வரை பல ஹோட்டல்கள் இருக்கின்றன.
உணவு?* இட்லி, தோசை முதல் வட இந்திய,
கான்டினென்டல் வரை எல்லா உணவுகளும் கிடைக்கின்றன.
* பானி பூரி உள்ளிட்ட சாட் வகைகள், ரசகுல்லா (ஸ்ட்ராபெர்ரி / ஆரஞ்சு / பைன் ஆப்பிள் / மேங்கோ), ரசமலாய், சந்தேஷ் (சர்க்கரை / வெல்லம் / சாக்லெட் / சுகர்ஃப்ரீ) உள்பட மில்க் ஸ்வீட்கள், கெட்டியிலும் கெட்டியான தயிர், லஸ்ஸி கேசரியா ஆகியவை தவிர்க்கக்கூடாதவை!
அருகில் உள்ள இடங்கள்?சாந்திநிகேதன், வங்கப் புலிகள் வசிக்கும் சுந்தரவனக் காடுகள், விஷ்ணுபூர், டார்ஜிலிங், பூடான், பங்களாதேஷ்...
என்ன வாங்கலாம்?கரியாஹட் மார்க்கெட்டில் பெங்கால் காட்டன் சேலைகள், குர்தா டாப் வகைகள், மற்ற துணி வகைகள், ஃபேன்சி பொருள்கள் மலிவாக வாங்கலாம். சைனா டவுனில் ஏராளமான சீன, இந்திய உணவுக் கடைகள் உள்ளன... ஷூக்கள், காலணிகள், தோல் பொருட்களும் வாங்கலாம். இவை தவிர, மைதான் மார்க்கெட்டில் ஸ்போர்ட்ஸ் பொருட்களும், நியூ மார்க்கெட்டில் உடைகள், பொம்மைகளும், சாந்தினி மார்க்கெட்டில் எலெக்ட்ரானிக் பொருட்களும் கிடைக்கும்.