பட்டாம்பூச்சி குழந்தைகளின் பெற்றோருக்கு...

‘எப்போ பார்த்தாலும் அவனோட அந்த ஃபேவரைட் ஹீரோ நினைப்புதான்... அந்த ஹீரோ மாதிரியே டிரெஸ் பண்றது, ஹேர் ஸ்டைல் வச்சுக்கிறது, டயலாக் பேசறதுன்னு சதா சர்வகாலமும் அதே சிந்தனை...’ என மகனைப் பெற்றவர்களும், ‘அவளோட ஆஸ்தான ஹீரோயின் மாதிரியே தன்னையும் கற்பனை பண்ணிக்கிட்டுத் திரியறா... அவ ரூம் முழுக்க அந்த நடிகையோட போஸ்டர்.... சகிக்கலை. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ...’ என பெண்களைப் பெற்றவர்களும் புலம்புவது எல்லா வீடுகளிலும் சகஜமான நிகழ்வு. இப்படிப் புலம்புகிற பெற்றோருமே, தனது விடலைப் பருவத்தில், தம் காலத்து ஹீரோ, ஹீரோயினின் மயக்கத்தில் இருந்திருக்கக் கூடும்!
செய்தித்தாள், டி.வி சேனல், வானொலி, சினிமா... எங்கும் எதிலும் பிரபல முகங்கள்... பிரபலங்கள் இல்லாமல் பொழுது விடிவதே இல்லை. அவர்கள் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை. டீன் ஏஜ் பிள்ளைகளுக்கோ, பிரபலங்கள்தான் வழிகாட்டி. நடை, உடை, பாவனை என சகலத்தையும் பிரபலங்களைப் பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள் விடலைப் பருவத்தினர்.
தான் யார் என்பதையும் மீறி, பிரபலமாக வேண்டும் என்கிற ஆவல் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது எட்டிப் பார்ப்பதுண்டு. திரைப்படங்களைப் பார்த்ததும் சிலருக்கு தாமும் நட்சத்திரங்களாக வேண்டும் எனத் தோன்றும். திரையில் பார்க்கிற நட்சத்திரங்கள் செய்கிற அத்தனை விஷயங்களையும் செய்தால், தாமும் அப்படி யாகி விடலாம் என நினைப்பார்கள். இன்னும் இப்படிப் பிரபலங்களைப் பார்த்து, அவர்களைப் போலவே இசைக் கலைஞர்களாக, விளையாட்டு வீரர்களாகவெல்லாம் ஆசைப்படுகின்றனர் டீன் ஏஜ் பிள்ளைகள் பலர்.
உங்கள் டீன் ஏஜ் பிள்ளையும் அப்படி சினிமா அல்லது ஸ்போர்ட்ஸ் துறை சார்ந்த ஏதோ ஒரு பிரபலத்தின் மீது அபிமானம் கொண்டிருக்கலாம். ஒரு வகையில் இந்த அபிமானம் நல்லதுதான். பெற்றோர் ரோல் மாடல்களாக இல்லாமல் போகும் போது, அந்தப் பிள்ளைகள், இப்படியொரு ரோல்மாடலை ஆதர்ஷிப்பது நல்லதுதான். அதே நேரம், அப்படி உங்கள் பிள்ளை கொண்டாடும் அந்தப் பிரபலம் சரியான ஆளுமையும் நடத்தையும் இல்லாதவராக இருந்தால் அது தவறான தாக்கத்தையே பிள்ளைக்குள் உண்டு பண்ணும்.
உதாரணத்துக்கு உங்கள் குழந்தை விரும்பும் அந்தப் பிரபலம் சமுதாயத்துக்கு நல்லது செய்கிறவராக, நாகரீகமாக உடை அணிகிறவராக, குடித்துவிட்டுப் பொது இடத்தில் கலாட்டா செய்யாதவராக, தான் செய்கிற நல்ல விஷயங்களுக்காக எப்போதும் செய்திகளில் அடிபடுகிறவராக இருந்தால், அவரது நடவடிக்கைகள், குழந்தைக்குள் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நபரின் மீதான தாக்கத்தால், உங்கள் பிள்ளைகளும் சமுதாயத்துக்கு நல்லது செய்யவும், நன்கு படிக்கவும், பிரச்னைகளில் இருந்து ஒதுங்கியிருக்கவும் கற்றுக் கொள்வர்.
சில குழந்தைகள் தம் பெற்றோர் பேச்சைக் கூட மதிக்க மாட்டார்கள். அதுவே தனது அபிமான பிரபல முகம் சொல்கிற வார்த்தைகளை வேத வாக்காகப் பிடித்துக் கொள்வார்கள்.
சில பிரபலங்களின் பார்ட்டி கலாசாரம், குறுகிய கால உறவுகள், போதை மருந்து, மதுப்பழக்கம் போன்றவையும் உடைந்து போன அவர்களது குடும்பம் முறிந்து போன திருமண உறவு, திருமணம் தாண்டிய தகாத உறவு போன்றவையும் அவர்களது வாழ்க்கை முறையும் சரியானதல்ல என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், அவர்களது ரசிகர்களாகிய உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அதுதான் சராசரி வாழ்க்கை எனத் தோணலாம்.
இந்தப் பிரபலங்கள் நம் வீட்டுப் பிள்ளைகளின் மேல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்?
* பதின்ம வயதுப் பிள்ளைகள் அன்பையும் அங்கீகாரத்தையும் புகழாக்கத்தையும் தேடி எல்லோராலும் பேசப்படும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
* பெற்றோரை, சக வயதினரை, சமுதாயத்தை சந்தோஷப்படுத்தி, அந்த சுயமதிப்பீட்டை அடைய நினைப்பார்கள். தான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கிற தேடல், இந்த வயதில்தான் அவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும். அந்தத் தேடலின் விளைவாக, அவர்கள் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளவும் புதுமைகளைப் பின்பற்றவும் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கவும் செய்வார்கள்.
* வாழ்க்கையைப் பற்றிய அவர்களது ஐடியாக்கள், யதார்த்தத்தை மீறியவையாக இருக்கும். அவர்களது சிந்தனை, கனவு, திட்டமிடல் என எல்லாமே சில வருடங்கள் முன்னணியில் இருக்கும்.
பல பிரபலங்கள், தமக்கிருக்கும் குடி, போதைப் பழக்கம், ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் உறவுகளைப் பற்றியெல்லாம் ரகசியம் காப்பதில்லை. அவர்களைக் கொண்டாடும் டீன் ஏஜ் பிள்ளைகளும் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அபிமான பிரபலம் சொல்கிற, செய்கிற இத்தகைய விஷயங்களைப் பார்த்துப் பார்த்துப் பழகியதன் விளைவாக ஒரு கட்டத்தில், அவற்றை சகஜமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
இன்னொரு பக்கம் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு, தான் யார், என்னவாகப் போகிறோம் என்பதில் பெரும் குழப்பம். அந்தத் தேடலில் அவர்களுக்கு முன் நிற்பவர்கள் பிரபலங்கள். தம்மைக் கவரும் அந்தப் பிரபலத்தைப் போற்றவும், அவர்களைப் பின்பற்றவும், அவர்களைப் போலவே வளரவும் விரும்புகிறார்கள். ‘கூல்’ என்று கூறிக்கொள்வதில் அவர்களுக்கு அலாதி பெருமை. அந்த இலக்கை அடைய தான் சரியான நபராக இருக்க வேண்டும் என்பதை மீறி, எந்த எல்லைக்கும் சென்று அடையத் தயங்குவதில்லை. அதனால் அவர்கள் பிரபலங்கள் உபயோகிக்கும், விளம்பரப்படுத்தும் சாதனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவற்றால் தம் இமேஜை உயர்த்தி, தற்பெருமையைத் தேடிக்கொள்ள முயல்வார்கள். உடை, செல்போன், பர்ஸ் வரை எல்லாமே ‘பிராண்டட்’ ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் அதில் ஒரு பகுதி. அப்படி மிகக்சிறந்த பிராண்டுகளை உபயோகிப்பதும், லேட்டஸ்ட் டிரெண்டுகளுக்கேற்ப மாற்றுவதும், அவர்களது சுயமதிப்பீட்டை அதிகரிப்பதாக, அடையாளத்தைக் காப்பதாக நினைக்கிறார்கள்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு உடல் பற்றிய அக்கறையும் கூடியிருக்கிறது. பெண் பிள்ளைகளுக்கு தனது எடை மற்றும் மார்பக அளவு பற்றியும் ஆண் பிள்ளைகளுக்கு கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் உயரத்திலும் அக்கறை கூடியிருக்கிறது. ஒல்லியான உடல்வாகுள்ள, மிகமிக ஸ்டைலாக உடையணிகிற, தன்னைக் கவர்ச்சியாகக் காட்டிக் கொள்கிற ஒரு பிரபலம் நிச்சயம் உங்கள் டீன் ஏஜ் மகன் அல்லது மகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவர்களைப் பார்த்து அதே உடல்வாகைப் பெறுகிற முயற்சியில் குறைவாக சாப்பிட்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளலாம். அவர்களது தன்னம்பிக்கை சிதையலாம்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று என்ன சொல்கிறது தெரியுமா? பிரபலங்களின் தாக்கம், டீன் ஏஜ் பெண்களை அதிகமாக பாதிப்பதாக 77 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தோற்றம் மற்றும் மனப்போக்கைப் பெரிதும் பாதிக்கிறதாம். திரைப் பிரபலங்களைப் பார்த்து, டீன் ஏஜில் இருப்போர் முறை தவறிய பேச்சு மற்றும் நடத்தையை கற்றுக் கொள்கிறார்கள்.
நடிகைகளைப் பார்த்து, தாமும் அப்படியே மாற நினைக்கிற டீன் ஏஜ் பெண்கள், ஒரு கட்டத்தில் அது முடியாமல் தன் தோற்றம் குறித்து தன்னம்பிக்கை குறைந்து, அதிக கோபத்தையும் அதிருப்தியையும் வளர்த்துக் கொள்கிறார்கள். 9 - 10 வயதி லிருக்கும் 40% பேர், எடையைக் குறைப்பதிலும், 13 வயதில் 53% பேர் தம் தோற்றம் பிடிக்காதவர்களாகவும் இருக்கிறார்களாம். எல்லாவற்றுக்கும் காரணம் பிரபலங்கள்!
டி.வியிலும் சினிமாவிலும் சித்தரிக்கப்படுகிற விஷயங்கள் பெரும்பாலும் தவறானவையாகவே இருப்பதாக 34 சதவிகித பெற்றோர் நம்புகிறார்கள். சின்னத்திரையிலும் சினிமாவிலும் காட்டப்படுகிற செக்ஸ் தொடர்புடைய விஷயங்கள், வன்முறை, ஆபாச மொழி போன்றவற்றால், பிள்ளைகள் மிகச்சுலபமாக ஈர்க்கப்படுகிறார்கள். பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால், பிள்ளைகள் வீட்டில் தனித்து விடப் படுகிறார்கள். இதனால் சினிமா, டி.வி, இன்டர்நெட் போன்றவற்றைப் பார்த்து இத்தகைய விஷயங்களை எளிதில் பிடித்துக் கொள்ளவும், பெற்றோரிடமிருந்து மறைக்கவும் அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் அதிகம்.
இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா? பிரபலங்கள் மனது வைத்தால் முடியும். தனது நடை, உடை, பாவனைகளும் நடவடிக்கைகளும் இளைய சமுதாயத்தினரிடம் உண்டாக்குகிற நெகட்டிவ் தாக்கம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அறிந்து, தம்மை மாற்றிக் கொண்டார்களேயானால், டீன் ஏஜ் பிள்ளைகளும் மாறுவார்கள். இது நடக்கிற காரியமா?
பிள்ளைகளை முறையாகக் கண்காணிக்கிற பெற்றோர், உறுதியான ஆசிரியர்கள் மற்றும் நல்ல நண்பர்கள் மூலம்தான் இதை சரி செய்ய முடியும். பெற்றோராகிய நீங்கள், உங்கள் பிள்ளையின் மேலுள்ள சுமையை முதலில் உணர வேண்டும். படிப்பில் சிறப்பதுடன், நல்ல நபர் என்கிற அடையாளத்தையும் பிள்ளைகள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர வேண்டும். அதையும் மீறி, அவர்களுக்குள் தாம் பிரபலமாக வேண்டும், தான் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆவல் இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தனது ஆதர்ச பிரபலம் என்ன உபயோகிக்கிறார், என்ன உடுத்துகிறார் என்பதை அறிவதில் பிள்ளைகள் நேரம் கடத்துவதை அறிந்து கொள்ள வேண்டும். அதெல்லாம் தேவையில்லை என்று பிள்ளைகளுக்கு போதனை செய்வதை விடுத்து பிள்ளைகளின் தேவையை மாற்றுப் பாதையால் எப்படித் திருப்ப முடியும் என்பதைப் பற்றி அவர்களுடன் உரையாட வேண்டும்.
ஒரு பெற்றோராக உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ அவர்கள் விரும்பும் பிரபலங்களை வைத்து நல்ல உதாரணத்தை அறிமுகப்படுத்தலாம். ஒரு நடிகர் அல்லது நடிகையின் படங்களைப் பார்க்கட்டும்... தவறில்லை. அந்த நடிகையோ, நடிகரோ திரைக்கு வெளியே மோசமான நடத்தையும் குணாதிசயங்களும் கொண்டவராக இருந்தாலும் அவர் நடிக்கும் பாத்திரத்தின் நல்ல குணாதிசயங்களை சுட்டிக்காட்டுங்கள். பின்னர் அந்த பிரபலத்தின் தவறான வெளியுலக வாழ்க்கையின் விளைவுகளைப் பற்றி விவாதியுங்கள்.
அவருக்கு ஏற்படுகிற உடல் உபாதையாகட்டும், போலீஸ் வழக்கு, நிதிப் பிரச்னையாகட்டும்...
எல்லாவற்றிலிருந்தும் தமது பணம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி, பிரபலங்களால் சுலபமாக மீண்டு வெளியே வந்து விட முடியும். இதை அழுத்திச் சொல்லுங்கள்.
நான்கு பேருக்கு நல்லது செய்கிற... தனது செல்வாக்கை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துகிற, (உதாரணத்துக்கு ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுபவர்) நபர்களின் படங்களையும் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பார்க்க ஊக்கப்படுத்துங்கள்.
பெற்றோராகிய நீங்கள், அடிக்கடி உங்கள் பிள்ளைகளிடம் இதைப் பற்றிப் பேசுவதும், அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் வேண்டும். ஏற்கனவே உங்கள் பிள்ளை, ஒரு தவறான பிரபலத்தின் தாக்கத்துக்கு ஆட்பட்டிருப்பது தெரிய வந்தால், அவன(ள)து நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஆலோசகர் உதவியுடன், அதிலிருந்து மீளவும், முற்றுப்புள்ளி வைக்கவும் செய்ய உதவி கேளுங்கள். அதுவும் பலன் தரவில்லையா? மனநல ஆலோகரின் உதவியை நாடுங்கள்.
ஹாஸ்டலில்... வெளியூர்களில்... பெற்றோரைப் பிரிந்து படிக்கிற பிள்ளைகள்... பிரச்னைகள்...
அது அடுத்த இதழில்!
தொகுப்பு: சாஹா