
பக்கம்
பக்கமாக எழுதி புரிய வைக்க வேண்டிய ஒரு விஷயத்தை ஓர் ஓவியத்தால் சுலபமாகப்
புரிய வைத்துவிட முடியும்! வரலாறு நெடுகிலும் எத்தனையோ ஓவியர்கள்
புகழ்பெற்றிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஃப்ரைடா காலோ. உண்மை,
பண்பாடு, உள்மன வெளிப்பாடு மற்றும் குறியீட்டு உணர்வுகளை
வெளிப்படுத்தக்கூடிய ஓவியங்கள் இவருடையவை. உலகம் முழுவதும் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியவை!
1907 ஜூலை 6 அன்று மெக்ஸிகோவில் பிறந்தார்
ஃப்ரைடா. 2 அக்காக்கள், ஒரு தங்கை. ஃப்ரைடாவின் அப்பாவுக்கு புகைப்படங்கள்
எடுப்பதிலும் ஓவியங்கள் தீட்டுவதிலும் ஆர்வம் அதிகம். ஃப்ரைடாவுக்கும்
ஓவிய ஆர்வம் இருந்தது. 6 வயதில் போலியோ நோய் ஃப்ரைடாவை முடக்கியது. 9
மாத சிகிச்சைக்குப் பிறகு உடல் தேறினார். ஆனாலும், வலது கால் சிறுத்துப்
போனது. முதுகுத்தண்டில் பாதிப்பு தொடர்ந்தது.
இந்தப்
பாதிப்பிலிருந்து ஃப்ரைடாவை மீட்க, அவரது அப்பா அதிக சிரத்தை
எடுத்துக்கொண்டார். தொடர்ந்து கால்களுக்குப் பயிற்சி அளித்தார். நீச்சல்
கற்றுக்கொடுத்தார்; குத்துச்சண்டை கற்றுக்கொடுத்தார். அந்தக் காலத்தில்
பெண்களுக்கு வழங்கப்படாத பல விஷயங்களை ஊக்கத்துடன் செய்ய வைத்தார். இதனால்
ஃப்ரைடாவின் தன்னம்பிக்கை வளர்ந்தது. கால் பாதிப்பு இருந்தாலும் அவரால்
ஓரளவு நடக்க முடிந்தது. கால் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக நீண்ட
பாவாடைகளை அணிந்துகொண்டார்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன்
பள்ளியில் சேர்ந்தார் ஃப்ரைடா. பள்ளியில் மொத்தம் 35 பெண்கள்தான். அதில்
தனித்துவம் மிகுந்தப் பெண்ணாகத் திகழ்ந்தார் ஃப்ரைடா. மெக்ஸிகோ சுவர்
ஓவியங்கள் எங்கும் பரவிக்கொண்டிருந்த காலக்கட்டம். ஃப்ரைடாவின் பள்ளியில்
சுவர் ஓவியங்கள் தீட்டுவதற்கு வந்திருந்தார் புகழ்பெற்ற ஓவியர் டியகோ
ரிவேரா. அவர் வரைவதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் ஃப்ரைடா. ரிவேரா
அவர் மனதில் மிகவும் உயர்ந்து போனார்.
மெக்ஸிகோ புரட்சியைத்
தொடர்ந்து பொதுவுடைமை இயக்கங்கள் உருவாகின. பள்ளியில் இருந்த இயக்கத்துக்கு
அல்ஜெண்ட்ரோ கோமேஸ் அரியாஸ் தலைவராக இருந்தார். இந்த இயக்கத்தில்
ஃப்ரைடாவும் இணைந்து செயல்பட்டார். விரைவில் அல்ஜெண்ட்ரோவும் ஃப்ரைடாவும்
நண்பர்களானார்கள்... காதலர்களானார்கள்.
16 வயதில் ஃப்ரைடா தன்
அப்பாவுக்கு உதவி செய்வதற்காக ஸ்டூடியோ செல்ல ஆரம்பித்தார். அங்கு கேமராவை
எப்படிக் கையாள்வது, பிரின்ட் போடுவது எப்படி என புகைப்படக்கலையின் சகல
விஷயங்களையும் கற்றுக்கொண்டார்.
1925... ஃப்ரைடாவின் வாழ்க்கையில்
இன்னொரு துயரம். அல்ஜெண்ட்ரோவும் ஃப்ரைடாவும் பள்ளியில் இருந்து பேருந்தில்
திரும்பிக்கொண்டிருந்தார்கள். குறுக்கே வந்த ட்ராம் வண்டி பேருந்தின் மீது
மோதியது. பெரிய விபத்து. அல்ஜெண்ட்ரோவுக்குச் சிறு காயங்கள். ஆனால்...
ஃப்ரைடாவுக்கு முதுகெலும்பு, இடுப்பெலும்பு எல்லாம் நொறுங்கிப் போயிருந்தன.
‘உயிர் பிழைக்கச் சாத்தியமே இல்லை’ என்றார்கள் மருத்துவர்கள்.
ஃப்ரைடாவின் மன உறுதியும், அப்பாவின் அரவணைப்பும் அந்த உயிரைக் கொஞ்சம்
கொஞ்சமாக மீட்டுக்கொண்டு வந்தது.
பல மாதங்கள் மருத்துவமனை
படுக்கையிலேயே கிடந்தார். அப்போதுதான் ஓவியத்தின் மீது அவர் கவனம்
திரும்பியது. வண்ணங்களையும் பிரஷ்களையும் வாங்கினார். நண்பர்கள்,
குடும்பம் என்று வரைய ஆரம்பித்தார். ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம்
மேற்கொண்டிருந்த காதலருக்காக, சுய ஓவியங்கள் வரைந்து வைத்தார். சில
மாதங்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஆனாலும், படுக்கை
வாசம்தான். தொடர்ந்து தன்னுடைய எண்ணங்கள், துயரங்கள், ஆசைகளை ஓவியங்களாக
வரைந்து தள்ளினார். ‘கற்பனையான ஒரு விஷயத்தை என்னால் ஓவியத்தில் கொண்டு வர
இயலாது. நான் என்பது நிஜம். என் வலி நிஜம். என் எண்ணங்கள் நிஜம். எனவே,
என்னையே ஓவியங்களாகப் படைக்கிறேன்’ என்றார் ஃப்ரைடா.
ஒன்றரை
ஆண்டுகளுக்குப் பிறகு ஓரளவு தேறிய ஃப்ரைடா, கம்யூனிஸ்ட் இயக்கங்களில்
பங்கேற்றார். அப்போது மீண்டும் டியகோ ரிவேராவின் அறிமுகம் கிடைத்தது.
தன்னுடைய ஓவியங்களை அவரிடம் காட்டி, கருத்துக் கேட்டார் ஃப்ரைடா. பிரமாதமான
திறமை உன்னிடம் இருக்கிறது என்று ரிவேரா சொல்ல, ஃப்ரைடாவின் மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை.
அல்ஜெண்ட்ரோவுடனான காதல் முறிந்து போனது. ரிவேராவின்
திறமையும் அன்பும் ஃப்ரைடாவை ஈர்த்தன. கம்யூனிஸ்ட் கொடி பறக்க, சிவப்புச்
சட்டை அணிந்த ஃப்ரைடா ஆயுதங்களை சக தோழர்களுக்கு வழங்குவது போல ஓவியம்
தீட்டினார் ரிவேரா. இருவரும் காதலர்களானார்கள்.
20 வயது மூத்தவரான
ரிவேராவை 22 வயது ஃப்ரைடா திருமணம் செய்துகொள்ள அம்மா சம்மதிக்கவில்லை.
ஆனால், அப்பாவுக்கு ரிவேரா மீது மரியாதை இருந்தது. பிரபல ஓவியர் என்பதால்
ஃப்ரைடாவின் மருத்துவச் செலவுகளையும் அவரால் சமாளிக்க முடியும் என்று
நம்பினார். திருமணம் நடந்தது. குழந்தை பெற்றுக்கொள்ள மிகவும் ஆசைப்பட்டார்.
ஃப்ரைடாவின் மோசமான உடல்நிலையால் 3 மாதங்களில் கருக்கலைப்பு ஏற்பட்டது.
மிகவும் அதிர்ச்சியடைந்தார். மீண்டும் தன்னை ஓவியமாக வரைந்தார். காலம்
கடந்து செல்வதை விளக்கும் அந்த ஓவியத்தில் இறுகிய முகத்துடன் இருப்பார்
ஃப்ரைடா. (2000 ஆண்டில் அந்த ஓவியம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு
ஏலம் எடுக்கப்பட்டது. தென் அமெரிக்க ஓவியர்களில் அதிக விலை போனது
ஃப்ரைடாவின் ஓவியமே!)
ரிவேராவுக்கு அரசாங்க வேலை வந்தது. இருவரும்
கம்யூனிஸ்ட் இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். ரிவேராவுக்கு குழந்தை
பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. ஃப்ரைடாவோ குழந்தைக்காக ஏங்கினார். மீண்டும்
இருமுறை கருக்கலைப்பு ஏற்பட்டது. விபத்தின் பாதிப்பால் அவரால் குழந்தை
பெற்றுக்கொள்ள இயலாது என்று தெரிந்தது.
சான்ஃப்ரான்சிஸ்கோவில்
இருவரும் குடியேறினர். ரிவேரா சுவர் ஓவியங்கள் தீட்ட, ஃப்ரைடா சுய
ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார். ஃப்ரைடாவின் ஓவியங்களைத் திரட்டி, ஒரு
கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார் ரிவேரா. நல்ல வரவேற்பு இருந்தது.
இருவரும்
மெக்ஸிகோ திரும்பினர். கருக்கலைப்புகள், அம்மாவின் மரணம், கால் வலி என்று
துயரம் மீது துயரமாக அழுத்திக்கொண்டிருந்த ஃப்ரைடாவுக்கு இன்னோர்
அதிர்ச்சி... தங்கையுடன் ரிவேராவுக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
வெறுப்பில் ரிவேராவைப் பழிவாங்கும் விதத்தில் ஃப்ரைடாவும் வேறு காதல்
கொண்டார். இருவரும் 1939ல் விவாகரத்து செய்துகொண்டார்கள். ஆனாலும்,
ஃப்ரைடாவுக்கு ரிவேரா மீதான அன்பும் காதலும் ஆழமாக இருந்ததால், பிரிவை ஏற்க
முடியவில்லை. அடுத்த ஆண்டே இருவரும் இணைந்தனர்.
நிறைய கண்காட்சிகளை
நடத்தினர். பல இடங்களில் உரை நிகழ்த்தினர். ஃப்ரைடா மாணவர்களுக்கு ஓவிய
வகுப்புகள் நடத்தினார். விருதுகள் கிடைத்தன. இப்படிப் பரபரப்பாக இருந்த
போது ஃப்ரைடாவின் அப்பா இறந்துபோனார். மீண்டும் மன அழுத்தத்துக்கு ஆளானார்
ஃப்ரைடா. உடல் நிலை மிகவும் மோசமானது. கடுமையான வேலைகளால் அவருடைய
முதுகெலும்பும் காலும் பலவீனமடைந்து, தீராத வலியைத் தந்துகொண்டிருந்தது.
2
மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். 7 அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டன.
ரிவேரா அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். வீடு திரும்பினாலும்
ஃப்ரைடாவால் பழைய நிலைக்கு வரமுடியவில்லை. எப்போதும் செவிலியர்
கண்காணிப்பிலேயே இருக்க வேண்டியிருந்தது.
1954 ஜூலை 13...
நிமோனியா பாதிப்பில் இருந்த ஃப்ரைடா, ரிவேராவுக்கு ஒரு பரிசு கொடுத்தார்.
இருவரின் திருமண வாழ்க்கை வெள்ளிவிழா காண இன்னும் சில நாள்களே இருந்தன.
“இன்னிக்கே எதுக்குப் பரிசு?”
“நான்
ரொம்ப நாள் இருக்க மாட்டேன். அதான் இப்பவே கொடுத்துட்டேன். என்னை ஓவியராக
உலகறியச் செய்ததற்கும், வாழ்க்கை முழுவதும் பொறுமையாகப்
பார்த்துக்கொண்டதற்கும் நன்றி... நான் இறந்து போனால் என்னைப் புதைக்க
வேண்டாம். எரித்து விடுங்கள். படுத்து படுத்து எனக்கு அலுத்துவிட்டது” என்ற
ஃப்ரைடா காலையில் உயிருடன் இல்லை.
47 வயதுக்குள் 33 அறுவை
சிகிச்சைகள் செய்து கொண்டு, வாழ்க்கை முழுவதும் வலியுடன் வாழ்ந்தாலும்
தன்னம்பிக்கை கொண்ட அற்புத ஓவிய ராகத் திகழ்ந்தார் ஃப்ரைடா. அவருடைய வலி
மிக்க சுய ஓவியங்கள் தனி பாணி கொண்டவை. 1970க்குப் பிறகு பெண்ணியச்
சிந்தனைகள் வலுவடைந்தபோது, ஃப்ரைடாவின் ஓவியங்களுக்கு உலகம் முழுவதும்
பெரும் வரவேற்பு ஏற்பட்டது.
ஃப்ரைடா மொழிகள்
* ஓவியமே என் வாழ்க்கையை முழுமையாக்கியது!
* பாதமே... நீ இறக்கையாக இருந் தால் நான் பறந்து செல்வேன்!
* நான் நோயாளி அல்ல... உடைந்து போனவள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் எப்பொழுதும் ஓவியம் தீட்ட முடியும்!