தத்தெடுப்பு : சட்டம் உன் கையில்!






சென்னையில் சமீபத்தில் நடந்த சம்பவம் இது. கைக்குழந்தையுடன் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் தவிப்புடன் நின்று கொண்டிருந்த அந்தப் பெண், ஒரு ரிக்ஷாகாரரை அழைத்து, குழந்தையை சற்று நேரம் பார்த்துக் கொள்ளும்படியும், ஸ்டேஷனுக்குள் காத்திருக்கும் தன் பெற்றோரை அழைத்து வந்து விடுவதாகவும் சொல்லிச் சென்றிருக்கிறார். 2 மணி நேரமாகியும் போனவர் திரும்பவில்லை. பிறந்து சில நாள்களே ஆன அந்தப் பச்சிளம் குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார் ரிக்ஷாகாரர். குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணைப் பற்றிய எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. குழந்தையை தத்து கொடுப்பதாகவும், விருப்பமுள்ளோர் அணுகலாம் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில், குழந்தையை தத்தெடுக்க வரிசை கட்டி நின்றது ஒரு பெருங்கூட்டம். அவர்களில் ஒருவருக்கும் அந்தக் குழந்தை தத்து கொடுக்கப்படவில்லை. காரணம்... தத்து எடுப்பதற்கான அடிப்படைத் தகுதிகளோ, நடை
முறைகளோ தெரியாதவர்கள் அத்தனை பேரும்.

குழந்தையில்லாத யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தத்து எடுத்துவிட முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.

இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கசப்பான உண்மை. பெரும்பாலும் தவறான உறவு முறையின் மூலம் பிறந்து, ஆதரவற்று விடப்படுவது, ஏழ்மை நிலையினால் வளர்க்க இயலாத சூழல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் குடும்பத்தைப் பிரிய நேரிடுவது, வீட்டை விட்டு ஓடி வருவது அல்லது திருவிழா, கூட்டங்களில் தவற விடப்படும் குழந்தைகள் என்று அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது.

மீண்டும் பெற்றோரைச் சேர இயலாத பெரும்பாலான குழந்தைகள் அரசாங்கம் நடத்தும் ஜுவனைல் ஹோம்ஸ் மற்றும் தனியார் நடத்தும் காப்பகங்கள் போன்றவற்றில் தஞ்சம் அடைகிறார்கள். அது முடியாத குழந்தைகள் பலர் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படுவதும், கடுமையான கொத்தடிமை வேலைகளான கண்ணாடி வளையல் தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்கூடம் போன்றவற்றில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதும் நடக்கிறது. பெண் குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு. குழந்தைப் பாலியல் தொழிலாளிகளாக்கப்படும் அவலமும், வீட்டு வேலைக்கு அனுப்பப்படுவதும் நடக்கிறது.

பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் உணராமல், குழந்தைப் பருவமே சாபமான அந்தக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கு சட்டம் காட்டும் வழிதான் தத்து.

நம்முடைய நாட்டில் தத்து என்பதற்கு தனிப்பட்ட ஒரு சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. மேலும், நம் நாட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் தத்து எடுக்க அவர்களின் மதக் கோட்பாடுகள் ஒரே மாதிரி அங்கீகரிப்பதில்லை. அதோடு, இந்திய அரசியல் சாசனம் தன்னுடைய 44வது ஷரத்துப்படி ‘காமன் சிவில் கோடு’ அமைக்க வலியுறுத்தியும், சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் வலியுறுத்தப்பட்டிருப்பினும் இன்றுவரை அது கானல் நீராகவே இருக்கிறது.

இந்துக்கள் தத்து எடுப்பதையும் கொடுப்பதையும் அவர்கள் மதம் காலங்காலமாக அனுமதித்திருப்பதற்கான சான்றுகள் ஏராளம். மேலும்,  1956ம் ஆண்டு இயற்றப்பட்ட ஹிந்து அடாப்ஷன்ஸ் மற்றும் மெயின்டனன்ஸ் ஆக்ட் 1956 இயற்றப்பட்டுள்ளது.

இந்து மதத்தைப் பொறுத்த வரை தத்து கொடுப்பதையும் எடுப்பதையும் அங்கீகரிக்க முக்கிய காரணம், ஒரு இந்துவுக்கு மரணம் சம்பவிக்கும் போது, ஈமக் காரியங்கள் செய்வதற்கு ஆண் வாரிசு அவசியமாகக் கருதப்பட்டது. அதனால் குழந்தைப் பேறு இல்லாத இந்துக்களும், ஆண் வாரிசு இல்லாத இந்துக்களும் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுப்பது என்பது நடைமுறையில் இந்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம். மேற்சொன்ன சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் ஒரு இந்து ஆண் குழந்தையை மட்டுமே தத்து எடுப்பது அங்கீகரிக்கப்பட்டது. மேலும் தத்து எடுப்பது, கொடுப்பது ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு உரிமையாக இருந்தது.

இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்களின் தத்து முறையில் பெரிய மாற்றம் உண்டானது. இந்துக்கள் என்ற சொல், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின் இனத்தவர் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக சட்டம் சொல்கிறது.



யார் தத்தெடுக்கலாம்?
*  18 வயது பூர்த்தியான இந்து ஆண், பெண்.
*  தன்னிச்சையாக எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கக்கூடிய மனநிலையில் உள்ளவராக இருக்க வேண்டும்.
*  இந்து மதத்திலிருந்து வேறு ஒரு மதத்துக்கு மாறியிருக்கக் கூடாது. ஏனென்றால் ஒரு இந்து, இந்து மதத்தைச் சார்ந்தவரையே தத்து கொடுக்கவும் எடுக்கவும் முடியும்.
*  திருமணமான ஆண், தன் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் தத்தெடுக்க இயலாது. ஒருவேளை மனைவி உலக வாழ்க்கையைத் துறந்திருந்தாலோ, மனநிலை பாதிக்கப்
பட்டவராக இருந்தாலோ ஒப்புதல் பெற அவசியமில்லை.

*  திருமணம் முடித்த இந்து பெண் தன்னிச்சையாக தத்து கொடுப்பதும் எடுப்பதும் சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவதில்லை.  அந்தத் திருமணம் கணவரின் மரணத்தாலோ, கணவர் மதம் மாறியதாலோ,  உலக வாழ்வை முற்றிலும் துறந்ததனாலோ, நீதிமன்றத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலோ தவிர, அந்தப் பெண்ணுக்கு உரிமை இல்லை. அப்படி அந்தப் பெண் விரும்பும் பட்சத்தில் கணவர் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

*  திருமணமாகாத பெண் தத்து எடுத்துக் கொள்ள தடை ஏதுமில்லை.

யாருக்கு தத்து கொடுக்கும் உரிமை உள்ளது?
*  பெற்றோர் அல்லது காப்பாளர்...

*  ஒரு வேளை தத்துக் கொடுக்கப்படும் குழந்தை ஆதரவில்லாத குழந்தையாக இருந்தால் அல்லது பெற்றோர் இருந்து அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பின் அல்லது உலக வாழ்க்கையை துறந்தவராக இருப்பின், காப்பாளராக இருப்பவர் தத்து கொடுக்கலாம். எனினும் நீதிமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.

*  ஒரு இந்து ஆண், பெண் தத்து எடுப்பதற்கான அதே விதிமுறைகள்,  தத்துக் கொடுப்பவருக்கும் பொருந்தும்.

யாரை வேண்டுமானாலும் தத்து கொடுக்க, எடுக்க முடியுமா?
*  ஒரு இந்து, தன் மதத்தைச் சார்ந்த குழந்தையை மட்டுமே தத்துக் கொடுக்க, எடுக்க இயலும். இப்போது 1956 சட்டத்தின் பின் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையை சமமாக தத்து கொடுக்க, எடுக்க இயலும். 15 வயதுக்கு உட்பட்ட குழந்தையை மட்டுமே தத்து எடுக்க முடியும். ஒருவேளை அந்தச் சமூகம் அந்த வயதைத் தாண்டி தத்தை அனுமதிக்குமானால், சட்டமும் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும். அது போல திருமணமான நபர், தத்துக்கு ஏற்றவர் அல்லர். சமூக வழக்கம் இருந்தால், சட்டம் அனுமதிக்கும்.

*  ஏற்கனவே தத்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் தத்துக் கொடுக்கப்படுவதை சட்டம் அனுமதிப்பதில்லை. இந்த சட்ட விதி, குழந்தையின் நலன் கருதியே சேர்க்கப்பட்டுள்ளது.

*  ஒரு ஆண், பெண் குழந்தையை தத்தெடுத்தால் 21 வயது மூத்தவராக இருக்க வேண்டும்.

*  ஒரு ஆண் குழந்தையை ஒரு பெண் தத்தெடுக்கும் போது, 21 வயது மூத்தவராக இருக்க வேண்டியது அவசியம்.

*  இந்து முறைப்படி தத்த ஹோமம் மூலம் தத்து நடைபெறும்.

*  தற்காலத்தில் அந்த முறை தவிர, சட்டப்படி தத்து ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்தும், நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு பெற்றும் தத்து நடைபெறுகிறது.

யாரின் நலன் முக்கியம்?
* தத்து எடுக்கப்படும் குழந்தை உடல் நலம், மனநலம், எதிர்காலம் ஆகியவற்றை முக்கியமாகக் கருதியே தத்து நடைபெறும். அப்படியில்லாத தத்து சட்டத்துக்குப் புறம்பான ஒன்று.

*  இஸ்லாமியரை பொறுத்த வரை அவர்கள் மதமோ, அவர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டமோ தத்து என்ற கோட்பாட்டினை ஏற்றுக் கொள்வதில்லை.

*  கிறிஸ்தவர்களை பொறுத்த வரை அவர்கள் மதக்கோட்பாடு தத்து என்ற விஷயத்தைத் தடை என வெளிப்படையாக ஏதும் செய்யவில்லை. எனினும் அவர்களுக்குத் தனியே தத்துச் சட்டம் எதுவும் இல்லாத காரணத்தால் இந்திய கிறிஸ்தவர்கள் பெரும் பாலும் கார்டியன்ஸ் அண்ட் வார்ட்ஸ் ஆக்ட் 1890ஐ பின்பற்றுகிறார்கள்.

*  இந்தச் சட்டத்தின் பிரிவு 7ன் படி, நீதிமன்றம் குழந்தைக்கும், அதன் சொத்துக்கும், அதன் நலன் கருதி, தகுதி உடைய ஒருவரைக் காப்பாளராக நியமிக்க வழி வகை செய்துள்ளது. மேலும், உயில் அல்லது வேறு ஒப்பந்தம் மூலம் அமர்த்தப்பட்ட காப்பாளரை மாற்றவும் நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு.

இந்தச் சட்டத்தின் படி ஒரு குழந்தையின் முழு உரிமையும் தத்தில் நடைபெறுவது போல காப்பாளருக்குச் செல்லாது. தத்து என்று எடுத்துக் கொண்டால் ஒரு குழந்தையைப் போல அனைத்து உரிமைகளையும் பெறுகிறது. ஒரு சொந்தக் குழந்தையின் கடமையும் இந்தக் குழந்தைக்கு உண்டு. ஆனால், காப்பாளர் என்பவர் குழந்தையின் உடல் மற்றும் மனத்தின் நலன் குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றினை மனத்தில் இருத்தி ஒரு பாதுகாவலராக இருப்பவரே. குழந்தை அவரிடம் இதனைத் தாண்டி எந்த உரிமையையும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எப்போதுமே நீதிமன்றம் காப்பாளராக ஒருவரை நியமிக்கும்போது, குழந்தையின் நலனே முக்கியமாகக் கருதப் படுகிறது.

விதிமுறைகள்

*  தத்தெடுக்கும் பெற்றோர் பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு இயன்றவராக இருத்தல் வேண்டும்.

*  குழந்தை வளர்ப்பில் இடையூறு தரக்கூடிய உடல் உபாதைகள், நோய்கள் இருக்கக் கூடாது.

*  குழந்தை தத்தெடுக்கும் பெற்றோரின் திருமண வாழ்வு குறைந்தது 2 வருடங்கள் நல்ல முறையில் சச்சரவுகள் இன்றி இருத்தல் வேண்டும்.

*  அவர்கள் எந்த குற்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டவராக இருக்கக் கூடாது.

*  மேலும், சட்டப்படி திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதியருக்கு தத்து மறுக்கப்படுகிறது.

*  குறைந்தது தத்தெடுக்கும் எதிர்பாலின குழந்தையை விட
21 வயது மூத்தவராக இருப்பது அவசியம்.

*  நம் நாட்டில் குழந்தை தத்தெடுப்பில் ஓரளவு முன்னேற்றம் வந்தது என்றால் அதற்கு இயற்றப்பட்டு, அதன் 2006 ஆண்டின் முக்கிய சட்டத் திருத்தம் தத்தினை அனைத்து மதங்களுக்கும் சமமாக ஆக்கியது.

இந்தச் சட்டத்தின் 41/வது பிரிவின் படி, - ஒரு குழந்தையின் அரவணைப்புக்கும், வளர்ச்சிக்கும் அந்தக் குழந்தையின் குடும்பமே முழுப் பொறுப்பாளர்கள் ஆகிறார்கள்.

2006ம் ஆண்டு மேற்கூறிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததின் மூலம் ஆதரவற்ற, கைவிடப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் இந்தச் சட்டத்தின் கீழ் உரிய நபருக்கு தத்து கொடுக்க, எடுக்க வழிவகை செய்துள்ளது.

அதோடு அவ்வப்போது மத்திய, மாநில அரசாங்கம் கொண்டு வரும் வழிகாட்டுதலின் படி, குழந்தைகள் தத்து கொடுக்கப்படும். மேலும், தத்து கொடுப்பதற்கும், எடுப்பதற்கும் தேவையான விதிமுறைகளைப் பின்பற்றியதை ஊர்ஜிதம் செய்த பின்னர், நீதிமன்றம் உறுதி செய்துவிட்டுதான் தத்து நடைமுறைப்படுத்தப்படும்.

*  ஆதரவற்று விடப்படும் குழந்தை சைல்ட் வெல்பேர் கமிட்டி முன் சமர்ப்பிக்கப்பட்டு எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் புகார் சமர்ப்பித்து மேலும், நாளிதழ், ஊடகம் மூலம் விளம்பரப்படுத்தி உரியவர் வரவில்லை என்றால் தத்து ஏற்ற குழந்தை என்று சைல்ட் வெல்பேர் கமிட்டியின் 2 உறுப்பினர்கள் சான்று செய்த பின்னர் தத்து கொடுக்கலாம்.

*  பராமரிக்க இயலாமல் விடும் பெற்றோருக்கு 2 மாதங்கள் கால அவகாசம் கொடுத்து ஆலோசனை கொடுத்து மனம் மாறவில்லை என்றால் தத்துக்கு வழி செய்யலாம்.

*  நன்கு புரிந்து கொள்ளக்கூடிய மனநிலையில் இருக்கும் குழந்தைக்கு (பொதுவாக சுமார் 7 வயது) தத்து போவது பற்றி முடிவு எடுக்க உரிமை உண்டு.

*  தத்தெடுப்பவரின் திருமண நிலையினை கருத்தில் கொள்ளாமல் தகுந்த நபர் என்றால் தத்து கொடுக்கலாம் என்றாலும் பொதுவாக திருமணம் ஆகாத ஆணுக்கு பெண் குழந்தை தத்து கொடுப்பது இல்லை.
 
*  திருமணமாகாத பெண், ஆண் குழந்தையை தத்து எடுக்க
தடையில்லை.

*  தனக்கு இருக்கும் அதே பாலின குழந்தையையே தத்தெடுக்க எந்தவிதத் தடையும் இல்லை.

இந்த சட்டத்தின் கீழ் தகுதி படைத்த வெளிநாட்டவருக்கும் தத்து கொடுக்க எந்தத் தடையும் இல்லை.
எழுத்து வடிவம்: சாஹா