தன்னம்பிக்கை டானிக் : ஏஞ்சல்!





உலகின் மிக மிகப் பிரபல பெண்களில் ஒருவர் ஏஞ்சலினா ஜோலி. அவர் சமீபத்தில் எடுத்த ஒரு முடிவு அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள் தள்ளியது.
ஏஞ்சலினா பிறந்த அடுத்த ஆண்டே பெற்றோர் பிரிந்து விட்டனர். அம்மாவின் சொற்ப வருமானத்தில் ஏஞ்சலினாவும் அவரது சகோதரரும் வளர்க்கப்பட்டனர். ஏஞ்சலினாவுக்கு 14 வயதானபோது, நடிப்புப் பள்ளியில் சேர்ந்தார். வசதி குறைவால் அவர் அணிந்த உடைகள், பயன்படுத்திய பொருள்களைக் கண்டு சக மாணவர்களின் ஏளனத்துக்கு ஆளானார் ஏஞ்சலினா. படிப்பு முடித்தவுடன் குறும்
படங்கள், விளம்பரப் படங்களில் நடித்தார். சொல்லிக் கொள்வது போல எதுவும் இல்லை. 1995ல் கிடைத்த ஹாலிவுட் வாய்ப்பு, அவருக்கு ஓரளவு பெயரையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து நடித்தார். பல படங்கள் தோல்வியைச் சந்தித்தாலும், ஏஞ்சலினாவின் உழைப்பு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. கோல்டன் க்ளோப், ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட், ஆஸ்கர் உள்பட பல விருதுகள் அவரைத் தேடி வந்தன.

கம்போடியாவில் ஒரு படப்பிடிப்பு நடந்தபோதுதான் மனிதாபிமான பிரச்னைகள் குறித்த அவரது அக்கறை ஆர்வமானது. பல்வேறு நாடுகளில் உள்ள அகதி முகாம்களுக்கு நேரடியாகச் சென்றார். அவர் கண்ட காட்சிகளும் சேகரித்த தகவல்களும் பேரதிர்ச்சி தந்தன. ‘அகதிகளுக்கு உதவுங்கள்’ என்ற ஐ.நா. வேண்டுகோளை ஏற்ற ஏஞ்சலினா, 5 கோடி 50 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார். அதோடு, ஐ.நா.வின் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றத் தொடங்கினார். விழிப்புணர்வு பிரசாரத்துக்கான போக்குவரத்துச் செலவுகளைத் தானே ஏற்றுக்கொண்டார். 2001ல் ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராக ஏஞ்சலினா அறிவிக்கப்பட்டார். 30க்கும் அதிக நாடுகளுக்குப் பயணம் செய்து, அகதிகள், புற்றுநோயாளிகள், இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உதவிகள் செய்தார் ஏஞ்சலினா.

இரு திருமணங்கள் முறிந்த நிலையில், 2005ல் தன்னுடன் நடித்த பிராட் பிட்டைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் உலகின் மிக முக்கியமான ஜோடியாக வலம் வந்தனர். இணைந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தனர். அறக்கட்டளை ஆரம்பித்து அகதிகள், போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். கம்போடியா, எத்தியோப்பியா, வியட்நாம் நாடுகளில் இருந்த ஆதரவு அற்ற 3 குழந்தைகளைத் தத்தெடுத்திருக்கின்றனர். ஏஞ்சலினாவுக்கும் பிராட்பிட்டுக்கும் பிறந்த 3 குழந்தைகளும் இவர்களோடு வளர்ந்து வருகின்றனர். குழந்தைகள் பிறந்தபோது எடுத்த புகைப்படங்களை ஏலம் விட்டு, அதில் கிடைத்த நிதியை பல்வேறு குழந்தைகள் அறக்கட்டளைகளுக்கு வழங்கினர்.

உலகின் மிகவும் பிரபலமானவர், ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்குபவர், சக மனிதர்களுக்காகப் போராடுபவர் என்று பல்வேறு அடையாளங்களைக் கொண்டுள்ள ஏஞ்சலினா, இப்போது இன்னும் ஒரு சிறப்பையும் பெற்றிருக்கிறார். அவர் அம்மா மார்பகப் புற்றுநோயால் மரணமடைந்தவர். மருத்துவப் பரிசோதனையில் ஏஞ்சலினாவுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 87 சதவிகிதம் இருப்பது தெரியவந்தது. அதனால், உடனடியாக மார்பகங்களை மாசெக்டோமி அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் முடிவுக்கு வந்தார் ஏஞ்சலினா. அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேட்டியளித்த ஏஞ்சலினா, “இந்த முடிவு அத்தனை சுலபமானதல்ல. ஆனாலும், உயிர் அதைவிட முக்கியமானது. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவே இதை வெளிப்படுத்துகிறேன். நான் எந்த வகையிலும் மற்ற பெண்களைவிடக் குறைந்து போனவளாக நினைக்கவில்லை’’ என்கிறார் இந்தப் பேரழகி!
- விஜயானந்த்