பாக்யலட்சுமி வீடு! : கடன் நல்லது!





மத்திய, மாநில அரசுகளும், வங்கிகளும், சில தனியார் நிறுவனங்களும் பயனுள்ள பல கடன் திட்டங்களை வழங்குகின்றன. அவை என்னென்ன? எப்படிப் பெறுவது? தொடர்பு முகவரி? இப்படி எல்லா விவரமும் இப்பகுதியில்!

பாரதி சொன்னது போல பத்து பதினைந்து தென்னை மரங்கள் சுற்றியிருக்க ஏகாந்தமான வீடு இல்லாவிட்டாலும், சிங்கிள் பெட்ரூம் ஃபிளாட்டாவது சொந்தமாக இருக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் கனவு! எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் சமீபத்தில் பெண்களுக்காகவே அறிமுகப்படுத்தியிருக்கும் வீட்டுக் கடன் திட்டம் ‘பாக்யலட்சுமி’.

யாருக்கு?
*  சொத்துக்கு முழு உரிமையாளராக இருக்க விரும்பும் பெண்களுக்கு. கூட்டாக சொத்து வாங்குபவர்களாக இருந்தால் உரிமையாளர்களில் முதல் நபர் பெண்ணாக இருக்க வேண்டும்.

*  மாத ஊதியம் பெறும் பெண்கள் (மத்திய, மாநில அரசுகள், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், பொதுத்துறை / தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள்).

*  சுயதொழில் செய்யும் பெண்கள்.
*  தொழில் வல்லுநர்கள் (Professionals).
எதற்கு?
*  வீடு / மனை / ஃபிளாட் வாங்குவதற்கு.
*  புது வீடோ, ஃபிளாட்டோ கட்டுவதற்கு.
*  குடியிருக்கும் வீடு அல்லது ஃபிளாட்டை புதுப்பிக்க, விரிவுபடுத்த, பழுது பார்க்க.
*  மற்ற நிதி நிறுவனங்களில் வாங்கியி ருக்கும் வீட்டுக் கடனை அடைக்க.
எவ்வளவு?
*  1 லட்ச ரூபாய் முதல் கடன் பெறலாம். மாத வருமானத் தொகையில் 50 மடங்கு வரை கடன் கிடைக்கும். உதாரணமாக, ஒரு பெண் மாதம் 50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்றால், அவர் 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
*  20 லட்ச ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு சொத்தின் மொத்த மதிப்பில் 85% வரை கடன் பெறலாம் (பத்திரப் பதிவு, பத்திரங்கள் வாங்கும் செலவையும் சேர்த்து).
*  20 லட்ச ரூபாய்க்கு மேலான வீட்டுக் கடனுக்கு சொத்தின் மொத்த மதிப்பில் 80% வரை கடன் பெறலாம் (பத்திரப் பதிவு, பத்திரங்கள் வாங்கும் செலவையும் சேர்த்து).
காலம்?
அதிகபட்சம் 20 வருடங்களில் கடன் தொகையை சமமான மாதத் தவணைகளாகச் செலுத்த வேண்டும்.
வட்டி?
முதல் இரண்டாண்டுகளுக்கு 10 சதவிகிதம். அதற்குப் பிறகு எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் விதிக்கும் வட்டி விகிதத்துக்கேற்ப.
தள்ளுபடி?
*  மொத்த கடன் தொகையில் 0.25% தள்ளுபடி உண்டு.
கட்டணம் (Upfront fees) - கடன் தொகையில் 1% அல்லது அதற்குக் குறைவாகவோ கட்டணம் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் கிளைகளை அணுகி விண்ணப்பம் பெறலாம். இச்சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே!
முழுவிவரங்களுக்கு...
www.lichousing.com
(04424313906, 24313907, 24313908
தொகுப்பு: பாலு சத்யா