சாவிக்கொத்து பாதுகாப்பு தரும் பரிசு!





சைக்கிள் பூட்டுக்கு...
அலமாரிக் கதவுகளுக்கு...

பீரோவுக்கு...
டூ வீலர், கார் மாதிரியான வாகனங்களுக்கு...
எல்லாவற்றையும் விடப் பிரதானமாக வீட்டுப் பூட்டுக்கு...
இப்படி வீட்டிலுள்ள எல்லோருக்கும் சாவிக்கொத்தின் தேவை அவசியம்.

வெறும் வளையத்தில் சாவிகளை மாட்டி வைத்தால் அது தொலைந்து போக வாய்ப்புகள் அதிகம். அதுவே கைக்கு அடக்கமான ஒரு சாவிக்கொத்தில் மாட்டி வைத்துக் கொண்டால் பாதுகாப்புக்கும் உத்தரவாதம். பார்வைக்கும் அழகு.

அழகழகான, அலங்கார சாவிக்கொத்துகளைத் தயாரிப்பதைக் கூட ஒரு பிசினஸாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரா.

பத்தாவது மட்டுமே படித்திருக்கிற சித்ராவை இன்று ஒரு சுய
தொழிலதிபராக அடையாளம் காட்டியிருப்பதும் அந்தத் தொழில்தான். 

‘‘கைவினைக் கலைகள்ல ஈடுபாடு உண்டு. அந்த வகையில நானாகவேதான் சாவிக்கொத்து செய்யக் கத்துக்கிட்டேன். பொழுது போகாத நேரத்துல வீட்ல உள்ள பொருள்களை வச்சுப் பண்ணிட்டிருந்தேன். வீட்டுக்கு வர்ற குழந்தைங்களுக்கு அன்பளிப்பா கொடுத்திட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு, வேற வேற மாடல்ல நிறைய வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க. குழந்தைங்களுக்கு, டீன் ஏஜ் பிள்ளைங்களுக்கு, பெரியவங்களுக்குன்னு வயசுக்கேத்த மாதிரி பண்ண ஆரம்பிச்சேன். ஸ்கூல் பிள்ளைங்கக்கிட்ட என்னோட சாவிக்கொத்துகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சது. சொந்த உபயோகத்துக்கும், நண்பர்களுக்கு அன்பளிப்பா கொடுக்கவும் நிறைய வாங்கறாங்க. தவிர பக்கத்துல உள்ள கடைகளுக்கும் சப்ளை பண்றேன். பிறந்த நாள் பார்ட்டி, சின்னச் சின்ன பார்ட்டிகளுக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டா கொடுக்க மொத்தமா ஆர்டர் வருது....” என்கிற சித்ரா, பத்துக்கும் மேற்பட்ட மாடல்களில் சாவிக்கொத்துகள் செய்கிறார். கலர் கலர் மணிகள், கிரிஸ்டல், முத்து, பொம்மைகளில் உருவாகிற சாவிக்கொத்துகள் கண்களைக் கவர்கின்றன. 750 ரூபாய்

முதலீட்டில் இந்த பிசினஸை
தொடங்க முடியுமாம். ரூ.10 முதல் 50 வரையிலான விலைகளில் சாவிக்கொத்துகளை விற்று 50 சதவிகித லாபம் பார்க்கலாம். 2 நாள்களில் 10 மாடல்கள் கற்றுக்கொள்ள கட்டணம் ரூ.500.
(ணூ9840878989)

பிளீச்சிங் பவுடர் சோப் பவுடர் பாத்திரம் துலக்கும் பவுடர்... சுத்தம் பணம் போடும்!

எவ்வளவு வசதியான வீடாக இருந்தாலும், அடிப்படை சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு எளிமையான சில பொருள்கள் அவசியம் தேவை. பாத்திரங்களைத் துலக்க கிளீனிங் பவுடர், குளியலறை மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடர், துணி துவைக்க வாஷிங் பவுடர்... என இவை இல்லாமல் அன்றாட வேலைகள் சாத்தியமே இல்லை. கவர்ச்சியான விளம்பரம், கலர்ஃபுல் பேக்கிங் என மார்க்கெட்டில் தினம் ஒன்றாக அறிமுகமாகும் இந்தப் பொருள்களில் எது சிறந்தது எனத் தீர்மானிப்பது அத்தனை சுலபமல்ல. பணம் விரயமாவதுதான் மிஞ்சும்.

‘‘விளம்பரங்கள் எல்லாம் மக்களை ஏமாத்தற விஷயங்கள். ஒவ்வொரு நிறுவனமும் தன்னோட தயாரிப்புதான் சிறந்ததுன்னு சொல்ல, ஏதோ ஒரு விளம்பர உத்தியைச் செய்யறாங்க. அதை மக்களும் நம்பறாங்க. மத்தபடி சோப் பவுடர், கிளீனிங் பவுடர், பிளீச்சிங் பவுடர்னு வீட்டு சுத்தத்துக்கான அத்தனை பொருள்களுக்கும் அடிப்படை தயாரிப்பு முறை ஒன்றுதான். அதை நாமளே நம்ம வீடுகள்ல தயாரிச்சு உபயோகிச்சா, செலவு குறையும்...’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜீவா ஆனந்தி. 12 வருடங்களுக்கும் மேலாக இந்த பிசினசில் இருக்கிற ஜீவா ஆனந்தி, தனது தயாரிப்புகளை விற்பதற்கென்றே சின்னதாக ஒரு கடையும் வைத்திருக்கிறாராம். பாத்திரம் துலக்கும் பவுடர், பிளீச்சிங் பவுடர், தவிர துணி துவைக்க சாதாரண சோப் பவுடர், வெள்ளைத் துணிகளைத் துவைக்க ஸ்பெஷல் பவுடர் மற்றும் கறைகளை நீக்கும் இன்னொரு பவுடர் என ஐந்து வகைகளைத் தயாரிக்கிறார்.



‘‘கடைகள்ல கிடைக்கிற சோப் பவுடர்கள்ல கலர் கலரா கடுகு அளவு உருண்டைகளைப் பார்க்கலாம். அதெல்லாம் உடைஞ்சு, கரைஞ்சு, துணியை வெளுக்கச் செய்யறதுல பெரியளவுல பங்கு வகிக்கிற மாதிரி விளம்பரம் பண்றதையும் பார்த்திருப்பீங்க. உண்மையைச் சொல்லணும்னா, அப்படி எதுவும் இல்லை. அதெல்லாம் வெறும் அழகுக்காக, மக்களை ஈர்க்க சேர்க்கப்படற பொருள்கள். அதனால எந்தப் பலனும் இல்லை. அதையும்கூட நாம வீட்லயே தயாரிக்க முடியும். வாஷிங் சோடா, டிடெர்ஜென்ட், டீப்பால், சாக் பவுடர், சோடா மாவுன்னு இந்தப் பொருள்கள் தயாரிக்கத் தேவையான எல்லாம் கெமிக்கல் கடைகள்ல கிடைக்கும். ஆர்டர் வர வர செய்து கொடுக்கிறது நல்லது. மொத்தமா செய்து வச்சுக்கிட்டா, அதுல சேர்க்கற வாசனை மங்க ஆரம்பிக்கும். சின்னச் சின்ன கடைகள், அக்கம் பக்கத்து வீடுகள்ல கொடுத்தாலே நல்லா பிசினஸ் ஆகும். கால் கிலோ, அரை கிலோ பாக்கெட் தவிர, 100 கிராம், 50 கிராம் பாக்கெட் போட்டு விற்பனைக்குக் கொடுத்தா, இன்னும் அதிக மக்களை உங்க பிசினஸ் ஈர்க்கும். 500 ரூபாய் முதலீடு போதும், 50 சதவிகிதம் லாபம் பார்க்கலாம்” என்கிற ஜீவா, 500 ரூபாய் கட்டணத்தில், ஒரே நாள் பயிற்சியில் 5 வகை பவுடர்களை கற்றுத் தருகிறார். (ணூ9043937241)

லாமாசா ஆர்ட்

பிறந்த நாள், கல்யாண நாள்,
கிரகப்பிரவேசம் மட்டுமின்றி, இன்று எதற்கு வேண்டுமானாலும் அன்பளிப்பு கொடுத்து, அன்பைப் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அதிலும் அந்த அன்பளிப்பு வேறு யாரும் கொடுக்காததாக இருக்க வேண்டும் எனப் பார்த்துப் பார்த்து தேடிக் கொடுக்கிற மனோபாவமும் அதிகரித்து வருகிறது. அதற்காகவே டிசைனர் அன்பளிப்புப் பொருள்கள் விற்கிற கடைகளின் எண்ணிக்கையும் பெருகி வருகின்றன.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா செய்கிற லாமாசா ஆர்ட்டில், இப்படி விருப்பமான அன்பளிப்புப் பொருள்கள் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியுமாம்.
‘‘லாமாசா என்பது ஒருவிதமான க்ளே. அதாவது, செயற்கை களிமண். அது கடைகள்ல கிடைக்காது. அதுக்கான பொருள்களை வச்சு நாமதான் வீட்லயே தயாரிக்கணும். கைகள்ல அலர்ஜி வராது. ரப்பர் வச்சு பண்ற மாதிரி ரொம்ப மென்மையா இருக்கும். அதுதான் இதோட சிறப்பம்சம். இந்த லாமாசா ஆர்ட் முறையில சாதாரண பூக்கள்ல தொடங்கி, மனித முகங்கள், கீ ஹோல்டர், பேனா, செல்போன் ஸ்டாண்ட், கடிகாரம், பென்சில் கேப், முகம் பார்க்கிற கண்ணாடி அலங்காரம்னு எதை வேணாலும் செய்யலாம். சாதாரண பிளாஸ்டிக் அல்லது  கண்ணாடி பெட்டிகளை வாங்கி, அதுக்கு மேல லாமாசா வேலைப்பாடு செய்து, அதோட தோற்றத்தையும் மதிப்பையும் மாத்தலாம். கழுத்துக்குப் போடற மாலை, கைகளுக்கு வளையல், பிரேஸ்லெட், காதுகளுக்குத் தோடு கூட பண்ணலாம்” என்கிறார் ஸ்ரீப்ரியா.
‘‘100 ரூபாய்க்கும் பண்ணலாம். 5 ஆயிரம் ரூபாய்க்கு ஆடம்பரமான பொருளும் பண்ணலாம். உட்டன் பேஸ் இல்லாமப் பண்ற பொருள்களா இருந்தா, அழுக்கானாலும் கழுவித் துடைச்சு வைக்கலாம். எதை வேணாலும் பண்ண முடியுங்கிறதால, விற்பனை வாய்ப்புக்கும் குறைவே இல்லை. முதலீடு 2,500 ரூபாய்லேருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை. 50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிறவர், 6 நாள்களில் லாமாசா கலையைக் கற்றுத் தரக் காத்திருக்கிறார். தேவையான பொருள்களுடன் பயிற்சிக்
கட்டணம் 4,500 ரூபாய். (ணூ9884709785)

டெரகோட்டா நகைகள்

பட்டுப்புடவைக்குத் தனி, டிசைனர் சேலைகளுக்குத் தனி, மாடர்ன் உடைகளுக்குத் தனி, காட்டன் உடைகளுக்குத் தனி என ஒவ்வொரு உடைக்கும் ஒவ்வொரு மாதிரியான நகைகள் அணிய
வேண்டியிருக்கும். அதே நிறத்தில், அதே டிசைனில் நகைகளைத் தேர்ந்தெடுப்பது அத்தனை சுலபமான காரியமில்லை. நுணுக்கங்கள் தேடத் தேட, பட்ஜெட்டும் பெரிதாகும்.
‘‘டெரகோட்டா நகைகள் இப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லாதவை. வட இந்தியப் பெண்களும், வெளிநாட்டுப் பெண்களும் நம்மூர் பெண்களைப் போல பளபள தங்க நகைகளை விரும்பறதில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா நகைகள்தான் அவங்களோட முதல் விருப்பம்” என்கிறார்
சென்னையைச் சேர்ந்த மீரா.

அதென்ன டெரகோட்டா நகை?
‘‘சாதாரண களிமண்ல செய்யறதுதான். ஆற்றுப்படுகையில களிமண் கிடைக்கும். மண்பானை செய்யறவங்கக்கிட்டயும் வாங்கலாம். அந்தக் களிமண்ணை சுத்தம் செய்து, ரொம்ப நைசான பக்குவத்துக்கு மாத்தணும். பக்குவப்படுத்தின களிமண்ணும் கிடைக்குது. நகைகள் செய்யறதுக்கான கருவிகள், அச்சுகள் கிடைக்கும். அதை வாங்கி நம்ம விருப்பத்துக்கேத்த டிசைன்களை உருவாக்கி, மண்பானை செய்யறவங்கக்கிட்ட கொடுத்தா, அவங்க சுட்டுக் கொடுப்பாங்க. அதுக்கப்புறம் பெயின்ட் பண்ணி, உபயோகிக்கலாம். டெரகோட்டா நகைகள்ல கழுத்துக்கான ஆரம், தோடுகள், வளையல், பிரேஸ்லெட், கொலுசு, மோதிரம்னு எல்லாம் பண்ணலாம். டிரெஸ் என்ன கலரோ, அதை அப்படியே நகையில கொண்டு வர முடியும். கோல்டன், சில்வர் கலர்லயும் பண்ணலாம்” என்கிறார்.
“களிமண், மைக்ரோன் ஒயர், டூல்ஸ், அக்ரிலிக் பெயின்ட்டுன்னு இதுக்கான தேவைகள் கம்மி. ஒரு கிலோ பதப்படுத்தப்பட்ட களிமண்ணோட விலை 250 ரூபாய். அதுல 15 செட் பண்ணலாம். 20 ரூபாய்க்கு செய்யற ஒரு செட் தோடு, 100 ரூபாய்க்கு விற்பனையாகும். 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும்கூட விற்கற அளவுக்கு ஆடம்பரமா பண்ண முடியும். ஒரு நாளைக்கு 2 கிலோ வரைக்கும் பண்ணலாம். களிமண்ணைப் பதப்படுத்தறது, நகைகளை சுடறது உள்பட எல்லா வேலைகளையும் வீட்லயே நாமளே செய்துக்க முடியும். நகைகளா வடிவம் பெற்றபிறகு, களிமண்ல பண்ணினதுன்னு நீங்க சத்தியம் செய்தா கூட யாரும் நம்ப மாட்டாங்க...” மீராவின் வார்த்தைகள் ஆர்வம் கிளப்புகின்றன. 1,500 ரூபாய் கட்டணத்தில் 2 நாள் பயிற்சியில் மீராவிடம் டெரகோட்டா நகைகள் செய்யக் கற்றுக் கொள்ளலாம். (NO :7708869499)
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்