புரட்சித் தலைவி!





வீரம், விவேகம், விடாமுயற்சியின் அடையாளம் லஷ்மி பாய். ‘புரட்சித்தலைவர்களில் இவர் மிக ஆபத்தானவர்’ என்று ஆங்கிலேய படைத்தளபதி ஹீரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய  ஜான்சியின் ராணி லஷ்மி பாய், 1835ல் பிறந்தார். ‘மணிகர்ணிகா’ என்பது இயற்பெயர். 4 வயதானபோது தாய் இறந்து போனார். துணிச்சலும் வீரமும் புத்திசாலித்தனமும் கொண்ட 7 வயது மணிகர்ணிகாவை, ஜான்சியை ஆண்ட கங்காதர ராவ் நெவல்கர் ராஜா திருமணம் செய்துகொண்டார். மணிகர்ணிகா, லஷ்மி பாயாக மாறினார். ஜான்சி ராணியாகவும் பதவியேற்றுக் கொண்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு லஷ்மி பாய் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தையோ 4 மாதங்களிலேயே இறந்து போனது. ஓர் ஆண் குழந்தையைத் தத்தெடுத்து, ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டனர். ஆனாலும், குழந்தையின் இழப்பு ராஜாவின் உடல்நலத்தைப் பாதித்தது. 1853ல் அவர் மரணம் அடைந்தார். ‘நேரடி வாரிசு இல்லாதவர்களின் அரசுகள் ஆங்கிலேயரின் கீழ் வந்துவிடும்’ என்ற சட்டம் அப்போது இருந்தது. 60 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து விட்டு, லஷ்மி பாயை வெளியேறச் சொன்னார்கள். அதோடு, ஜான்சியைக் கைப்பற்ற ஹீரோஸ் தலைமையில் ஆங்கிலேயப் படை வந்தது. ‘நானும் அடிபணிய மாட்டேன்... என் நாட்டையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்று உறுதி பூண்டார். கடுமையான போர். 3 நாள்களுக்குப் பிறகு ஆங்கிலேயப் படை நகரத்துக்குள் நுழைந்து சூறையாடியது. குழந்தையுடன் மதில் சுவர் தாண்டி, பெரும் பெண்கள் படையுடன் நகரத்தை விட்டு வெளியேறினார் லஷ்மி பாய். தாந்தியா தோபே மற்றும் சில புரட்சிப் படைகளுடன் சேர்ந்துகொண்டார் லஷ்மி பாய். இந்தப் படை குவாலியரை முற்றுகையிட்டு, கோட்டையைக் கைப்பற்றியது. குவாலியரை நோக்கி வந்த ஆங்கிலேயப் படைகளுக்கும் லஷ்மி பாய் படைகளுக்கும் இடையே போர் தீவிரமாக நடைபெற்றது. 1858 ஜூன் 17 அன்று, போரில் ஏற்பட்ட படுகாயத்தால் களத்திலேயே வீரமரணம் அடைந்தார் 22 வயதான லஷ்மி பாய். இந்திய வரலாற்றில் வீரம் மிக்கப் பெண்ணாக நிலைத்துவிட்டார் ஜான்சி ராணி!