அளவும் அழகும்!





மல்லிகைக்குக் கொடி
செம்பருத்திக்குச் செடி
தாமரைக்குத் தண்ணீர்
- இவைதானே அழகு?
இப்படி அதற்கு உண்டான இடத்தில் அளவாக அழகாக வளர்ந்திருப்பதே செடிக்கும் நல்லது... நமக்கும் நல்லது! இதுபற்றி விரிவாக விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் கோவை பா.வின்சென்ட்.

 என்ன செடி? என்ன அளவு?
*  தினப்படி தேவைப்படும் கொத்தமல்லியை பெரிய தொட்டியில் நீள அகலமாக வளர்த்து என்ன பயன்? செடியின் தன்மைக்கு ஏற்ப அதற்குண்டான அளவுகளில் செடி வளர்ப்பது தண்ணீர் சேமிப்பை அளிக்கும். மண்வளத்தையும் செடி அமைந்திருக்கும் இடத்தின் தரையையும் பாதுகாக்கும்.

*  தாவரங்களின் வேர் அமைப்பு மற்றும் அதன் வளர்ச்சியைப் பொறுத்து தொட்டி அல்லது பையின் அளவு, உயரம் போன்றவற்றை தீர்மானிக்க வேண்டும். இப்படி சரியான அளவில் வளர்க்கும்போது இடு பொருட்களின் அளவு, இடத்தின் அளவு போன்றவற்றிலும் சிக்கனம் கடைபிடிக்கலாம்.

*  இடப்பற்றாக்குறை இருப்பின், வேர் குறைவாகவுள்ள சில கீரை வகைகளை (உதாரணம்: பாலக் கீரை) செங்குத்து முறையில் கூட வளர்க்கலாம். புதினா, வல்லாரை போன்ற படரும் தாவரங்களுக்கு 4 இன்ச் உயரம் போதுமானது. கொத்தமல்லி, தண்டுக்கீரை, நூல்கோல், முட்டைகோஸ் போன்றவற்றுக்கு 6 - 9 இன்ச் உயரம் போதுமானது. தக்காளி, கத்திரி, வெண்டை, அவரை, முள்ளங்கி போன்றவற்றுக்கு 1 அடி பை அல்லது தொட்டி போதுமானது. கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, தவசுக்கீரை, பப்பாளி போன்ற சில மர
வகைகளை 1.5 அடி உயர தொட்டிப் பைகளில் வளர்க்கலாம்.

சூரிய ஒளி? காலநிலை?

*  நமது முன்னோர் எந்தக் காலத்தில் என்ன பயிர் செய்வது என்பதற்கு ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி மூலம் அறிவுறுத்தினார்கள். சூரிய ஒளியும் வெப்ப அளவும் நமது வீட்டுத் தோட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.



*  பொதுவாக நமது காய்கறிகளுக்கு அதிக ஒளி தேவை. நவீனமுறையில் நிழல் வலை அமைத்து சூரிய ஒளி, வெப்ப அளவுகளை கட்டுப்படுத்தி நல்ல மகசூல் எடுக்கலாம்.

*  இங்கிலீஷ் காய்கறிகள் என்றழைக்கப்படும் முட்டைகோஸ், பூகோஸ், நூல்கோல், பீட்ரூட் போன்றவற்றின் மகசூல் பனி
காலங்களில் நன்றாக இருக்கும்.

*  கீரைகள், முள்ளங்கி போன்றவை எல்லா காலங்களிலும் வளரும்.  

தொட்டி விலை? பை விலை?
*  தொட்டி அல்லது பைகளின் விலை, அளவு, தரம், எதனால் செய்யப்பட்டது, அழகுணர்ச்சி என பல்வேறு அம்சங்களைப் பொருத்து அமையும். ரூ.10ல் தொடங்கி பல ஆயிரங்களைத் தொடும். நம் வசதி மற்றும் தேவையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கலாம்.

*  வீட்டினுள் வைக்கப்படும் செடிகளுக்கு அழகு மற்றும் உருவ அமைப்பைக் கருத்தில் கொண்டு சீன களிமண் தொட்டிகள் சிறப்பாக இருக்கும்.

*  வெயிலில் வைக்கப்படும் தொட்டி அல்லது பைகள் புற ஊதா கதிர்கள் தாங்கி உடையாமல் அல்லது கிழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், நீடித்து உழைக்கும்.

*  ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற மதிப்பு மிகு தாவரங்களுக்கு சாதாரண தொட்டிகள் போலன்றி பக்கவாட்டில் துளைகளுடன் இருக்க வேண்டும்.
(விதை போடுவோம்)
தொகுப்பு: வர்ஷா