பட்டு A to Z : களஞ்சியம்





முதல் சேலை, பிரியமானவர்கள் பரிசாகத் தந்த சேலை, கூறைச் சேலை, வளைகாப்புச் சேலை... ஒவ்வொரு சேலையும் ஏதோ ஒரு சுவாரஸ்யமான நினைவைச் சுமந்து கொண்டிருக்கும். அதுதான் பட்டுச் சேலையின் சிறப்பு. எத்தனை சேலை இருந்தாலும், அலுக்காது. நைந்து, கரைந்து, ஜரிகை உதிர்ந்து கொட்டுகிற நிலைக்குப் பழையதாகிப் போனாலும், சேலையின் சென்டிமென்ட் அத்தனை சீக்கிரத்தில் அதை அப்புறப்படுத்த விடாது. அந்தளவுக்கு பட்டின் மேல் பற்றுண்டு பெண்களுக்கு.

பட்டுக்கு மட்டும் ஏன் இத்தனை பகட்டு?
பட்டின் வரலாற்றினைப் புரட்டினால் தெரிகிறது உண்மை...
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சீனப் பேரரசி ஒருவர், தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போது, முசுக்கொட்டைச் செடியில் அழகாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கூட்டினைப் பார்த்திருக்கிறார். அதிலிருந்து ஒரு இழையைப் பிடித்து இழுத்திருக்கிறார். அது நீண்டுகொண்டே போக, மொத்தக் கூடுமே, ஒரே இழையால் ஆன விவரம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தோட்டத்தில் இருந்த மற்ற கூடுகளையும் சேகரித்து, இழைகளைப் பிரித்து, சிறியதாக ஒரு உடை தயாரித்துப் பார்த்தாராம். அந்த நூலிழையும், அதில் தயாரித்த உடையின் நேர்த்தியும் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போக, பட்டு நூலாடைகள் தயாரிப்புக்கு அதுவே ஆரம்பமாக அமைந்திருக்கிறது. ஆனாலும், பட்டு என்பது ராஜகுடும்பத்துக்கு மட்டுமே உரித்தானது என்று ரகசியம் காக்கப்பட்டதாம். அதன் பிறகு சுமார் 2,500 ஆண்டுகள் கழித்து, ஒரு ரோமானிய மன்னன், சீன இளவரசியைத் திருமணம் செய்ய, அதுநாள் வரை சீனர்களுக்கு மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பட்டு, இடம் பெயர்ந்திருக்கிறது. இருப்பினும், பட்டுப் புழுவை வளர்க்கத் தெரியாததால், அதையடுத்த சில காலத்துக்கும் சீனாவில் மட்டுமே பட்டின் கொடி பறந்து கொண்டிருந்ததாம். இதைத் தெரிந்து கொண்ட ஜப்பானியர்கள், பட்டுப் புழு வளர்க்கத் தெரிந்த சீனப்பெண்களைக் கடத்திக் கொண்டும், வேலைக்கு அழைத்துச் சென்றும், அவர்கள் மூலம் தொழில் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டு, பட்டு நூல் உற்பத்தியில் சீனர்களையே தோற்கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஜப்பான், பட்டு நெசவுக்கான காப்புரிமையை மற்ற நாடுகளுக்கும் தர முன் வந்ததையடுத்து, இந்தியா உள்பட பல நாடுகளுக்கும் பட்டு நெசவு பரவி, பட்டின் புகழ் உலகெங்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது. இத்தனை சிரமங்களுக்குப் பிறகு கிடைத்ததாலோ என்னவோ பட்டுக்கு அத்தனை பெருமை!

பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பட்டில் காசைக் கொட்டி, பீரோ நிறைய அடுக்கி வைக்கிற உங்களுக்குத் தெரியுமா பட்டு எப்படித் தயாராகிறது என்று?
பட்டுப்புழு வளர்ப்பு முறையை ஆங்கிலத்தில் ‘சில்க் ஃபார்மிங்’ என்கிறார்கள். பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலமான 30 நாள்களுக்கு மிகப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தரமான மல்பெரி இலைகளைத் தீனியாகத் தரவேண்டும். மனிதர்களை மாதிரியே அவற்றுக்கும் சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் அவசியம். அந்தச் சூழலைக் கொடுக்கும்படியான ஒரு தனி புழுவளர்ப்பு மனை அமைத்து, பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும். இந்த புழு வளர்ப்பு மனையில் வருடத்துக்கு 10 முதல் 12 முறைகள் புழு வளர்ப்பு நடைபெறும். இப்படிப் பார்த்துப் பார்த்து பதவிசாக, பத்திரமாக வளர்க்கப்படுகிற பட்டுப்புழுக்களை ஒரு கட்டத்தில், கொத்தாகப் பிடித்து, கொதிக்கிற வெந்நீரில் போடுவார்கள். துடிக்கத் துடிக்க இறக்கும் அவை, அத்தனை நாள் தன்னைப் போஷாக்காக வளர்த்தவர்களுக்கு நன்றிக்கடனாக, பட்டுநூலை விட்டுச் செல்லும். அந்தக் கட்டத்தில் பட்டுப்புழுக்களை கொல்லாவிட்டால், அவை அடுத்து பட்டாம்பூச்சிகளாக மாறி, பறந்து விடுமே!

ஒரு கிலோ பட்டு நூல் தயாரிக்க, 3 ஆயிரம் பட்டுப்புழுக்கள் சுமார் 104 கிலோ மல்பெரி இலைகளைத் தின்ன வேண்டும். சுத்தமான பட்டுக்காக 5 ஆயிரம் பட்டுப்புழுக்கள் உயிரிழக்க வேண்டும். இது சிம்பிளான பட்டுச்சேலைக்கான கணக்கு. அகலமான ஜரிகை வைத்த பார்டர், உடல் முழுக்க ஜரிகை என நீங்கள் விரும்பும் புடவையின் ஆடம்பரத்தைப் பொறுத்து, உயிர்த்தியாகம் செய்கிற பட்டுப்புழுக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகும்.

சேலையே கட்டி பழக்கமில்லாத பல பெண்களுக்கும் முதல் சேலை கல்யாணச் சேலையாகத்தான் இருக்கும். முதல் சேலை, அதிலும் கூறைச் சேலை என்றால் அந்த அனுபவமே அலாதியானதில்லையா?

கல்யாணப் பட்டு... என்னவெல்லாம் லேட்டஸ்ட்? எப்படித் தேர்ந்தெடுப்பது? யாருக்கு, எது பொருத்தம்?

பட்டின் வகைகள் மல்பெரி பட்டு
உண்ணும் உணவுக்கேற்ப, வேறுபட்ட புழுக்களில் இருந்து வணிகரீதியாக 5 வகை பட்டுகளைப் பெறலாம். அவற்றில் முதலிடம் மல்பெரி பட்டுக்கு. மல்பெரி செடியை உணவாக உட்கொள்ளும் ஒரு வகை பட்டுப்புழுவிலிருந்து இந்தப் பட்டு கிடைக்கிறது. இந்தப் பட்டுப்புழுக்களை அறைகளிலேயே வளர்க்கலாம். இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் மொத்த பட்டு உற்பத்தியில் 92 சதவிகிதம் மல்பெரி பட்டுதான். அணிவதற்கு மிக மென்மையானது இது.

எரி பட்டு
ஆமணக்கு இலைகளை உட்கொள்ளும் பட்டுப்புழுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்காக பழங்காலத்தில் இருந்து உற்பத்தி செய்து பயன்படுத்தக் கூடிய பட்டு வகை இது. இந்தியாவின் வடகிழக்கு மற்றும் அசாம் மாநிலங்களில் தயாராகிறது.

ஒக் டசார் பட்டு

ஒக் என்கிற செடியை உணவாகக் கொள்ளும் பட்டுப்புழுவிலிருந்து கிடைக்கும் இது மெலிதாக இருக்கும். மணிப்பூர், இமாசலப்பிரதேசம், அசாம், மேகாலயா, ஜம்மு, காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பட்டு உற்பத்தியில் உலகளவில் நம்பர் 1 - சீனா.

டசார் பட்டு
இதன் இழைகள் தாமிர நிறத்தில் சற்றே முரடாக இருக்கும். நெகிழ்வுத்தன்மை இருக்காது. மெத்தை விரிப்புக்கும், உள் அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படுகிறது. ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஆந்திரா மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்கள் இந்தப் பட்டுத் தயாரிப்பில் சிறந்தவர்கள்.

முகா பட்டு

இதன் பூர்வீகம் அசாம். இது இயற்கையான மஞ்சள் நிறத்தில் இருக்கும். நறுமணமிக்க செடிகளைத் தின்று வளரும் பட்டுப்புழுக்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் சற்று காஸ்ட்லியானது.

எல்லாம் அடுத்த இதழில்!
- சாஹா
படம்:  புதூர் சரவணன்