பேரன்புடன்: இயற்கையின் தவறை மனிதம் கொண்டு உடைப்போம்



ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை ஒதுக்கிவிடாமல், பெற்றோருக்கும், சமூகத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த 20  நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய ஒரு குறும்படத்தை ‘போர் லயன்ஸ்’ (Four Lines) நிறுவனம்  தயாரித்திருக்கிறது. ஆட்டிசம் நாளாக கடைபிடிக்கப்படும் ஏப்ரல் 2 அன்று அரங்கம் நிறைந்த ஆட்டிசம் குழந்தைகள்  மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு இக்குறும்படத்தை பார்க்க நேர்ந்தது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஆட்டிசம்  குழந்தைகள் வந்திருக்கும் விருந்தினர்களை வரவேற்றும், பாடியும் சிறப்பித்தார்கள். தாங்கள் தயாரித்த பரிசுப்  பொருட்களை, சிறப்பு விருந்தினர்களுக்கு அவர்களே வழங்கி, தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

‘இயற்கையின் தவறை மனிதம்  கொண்டு உடைப்போம்’ எனும் சிந்தனையை வலியுறுத் திய இக்குறும்படத்தை,  ராதா நந்தகுமார் எண்ணத்தில், ஷ்ரவன் இசையில், ஒளிப் பதிவாளர் எஸ்.பி. மணி இயக்கி இருந்தார். இயக்குநர் பாலு  மகேந்திராவின் சினிமாப் பட்டறையில் இருந்துநடிப்பை பயின்று வெளிவந்த நிவாஷ் ஆட்டிசம் குறைபாடு குழந்தையாக  மிகவும் இயல்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். ‘பசங்க’ சிவக்குமார்  அவரின் அப்பாவாகவும், சவுந்தர்யா அம்மாவாகவும் நடித்து சொல்ல வந்த கருத்தை நிறைவுப்படுத்தி அசத்தினர்.

ஆட்டிசம் குறைபாடுடைய தங்கள் மகன் கார்த்தியை பொறுப்புடன் வளர்க்கும் பெற்றோர், அவனுக்கு திரும்ப திரும்ப  அனைத்து விசயங்களையும் சொல்லிக் கொடுப்பதும், சமூகத்தில் வாழத் தகுதியுள்ள ஒருவனாக அவனை மாற்றி,  வேலைக்கு  அனுப்புவதும், வேலைக்கு போகும் இடத்தில், அவன் குறையினை உணராத சக ஊழியர்களால் கார்த்தி  கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவதையும், வீடு திரும்பும் வேளையில், ஆட்டோவில் சக பயணிகளால் எதிர்பாராத  சிக்கலில் சிக்கி, காலதாமதமாக வீட்டுக்கு வருவதும் என 20 நிமிடம் ஓடும் இக்குறும்படம், ஆட்டிசம் குறைபாட்டின்  நிலையினை பார்வையாளருக்குக் கடத்தும் விழிப்புணர்வு குறும்படம்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்குறும்படத்தில், ஆட்டிசம் பாதித்த கதையின் உண்மையான நாயகன் சமூகத்தின்  பொறுப்பற்ற தன்மையால் உயிரோடில்லை என்ற நிஜம் நம் மனதில் சம்மட்டடியாக இறங்குகிறது.பக்கம் பக்கமாக எழுதி உணர்த்தப்படவேண்டிய விசயத்தை, இருபதே நிமிடங்களில் காட்சி வழியாக மனதில் ஏற்றி  இருந்தனர் ‘பேரன்புடன்’ குறும்படக் குழுவினர். படத்தின் துவக்கத்தில் ஆட்டிசம் குறைபாடு குழந்தைகளை வைத்தே  எடுக்கப்பட்ட பாடல் ஒன்றையும் ஒளிபரப்பினர்.ஆட்டிசம் குழந்தைகளை வாழத் தகுதியுடையவர்களாய் மாற்றி, பொதுவெளிக்குள் அனுப்பும்போது, சமூகமும்  அவர்களைப் புரிந்துஏற்றுக்கொள்ளவேண்டும் எனும் கருத்தை வலியுறுத்திய இக்குறும்படத்தில், இந்த உலகம் இம்மண்ணில் பிறந்த அனைத்து உயிர்களுக்குமானது. 

ஆட்டிசத்தால் பாதிப்படைந்துள்ள குழந்தைகளின் நிலையை பொது மக்களாகிய நாமும் புரிந்து கொண்டு, அவர் களை உணர்ந்து நடத்தினாலே, அவர்களும் நம்பிக்கையுடன் இவ்வுலகில் வாழ முடியும். இந்தக் குழந்தைகளுக்கு ஒவ்வொரு விசயத் தையும், மிகவும் பொறுமையாக திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்க வேண்டும்  அப்படிச் சொல்லிக் கொடுப்பதை சரியாகப் புரிந்து, அதை அவர்கள் எடுத்துக்கொண்டால், இந்த பூமியில வாழும் கடைசி  நிமிடம்வரை நாம் சொல்லிக் கொடுத்ததை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.  தங்கள் மூளையில் ஏற்றியதை மிகவும்  சரியாகச் செய்வார்கள். அதற்குத் தேவை பெற்றோருக்கு பொறுமை. சாதாரண மனிதர்கள் மாதிரி இவர்களுக்கு பொய் சொல்லவோ மற்றவர்களை ஏமாற்றவோ தெரியாது போன்ற கருத்துக்களை மிகவும் இயல்பாய் நடிப்பில், அழகாக வெளிப்படுத்தி  இருந்தார்கள் அனைவரும்.

உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. உலகளவில்  ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.  1995-96களில் பத்தாயிரம் குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்று இருந்தது. ஆனால் இன்று ஐம்பது குழந்தைக்கு ஒரு  குழந்தை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 40 லட்சம் பேருக்கு இக்குறைபாடு இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது என்று நம்மிடம் பேசத் துவங்கினார் இக்குறும்படம் உருவாகக் காரணமான ராதா நந்தகுமார்.
‘‘வங்கி ஊழியராக வாழ்க்கையைத் துவங்கிய நான் பிறந்தது, படித்தது வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத்தில்.  திருமணத்திற்குப் பிறகு, டெல்லிக்கு இடமாறினேன். என் இரண்டாவது மகன் அரவிந்திற்கு ஆட்டிசம் குறை இருக்கிறது.  என் குடும்பச் சூழலால் வங்கி வேலையை விட்டுவிட்டு, என் மகனுக்காக பேரன்ட் வாலன்டியராக மாறினேன்.  தொடர்ந்து குறைபாடுடைய குழந்தைகளின் நலனுக்கான அனைத்து தளத்திலும் இயங்கத் துவங்கினேன். என் கணவர் இறந்தபிறகு சமீபத்தில் சென்னைக்கு இடம் மாறினேன். சென்னையிலும் எனது  செயல்பாடுகள் தொடர்கின்றன. ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தன்று இது குறித்த விழிப்புணர்வு கொடுக்க நினைத்து  எடுத்த முயற்சிதான் இக்குறும்படம்.

என் மகன் படித்த பள்ளியில் அவனுடன் படித்த ஆட்டிசம் குறைபாடுடைய பையன் பிரவீன்.  அவனது பெற்றோர்  அவனை படிக்க வைத்து, நன்றாக பயிற்சி கொடுத்து, ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் பத்தாயிரம் சம்பளத்தில்  பணியில் சேர்த்தனர். அஞ்சல் துறையில் பணியாற்றிய அவனின் அப்பா அவனை தினமும் வேலைக்கு அழைத்துச்  சென்று விட்டுவிட்டு, திரும்பி அழைத்து வருவார். சம்பவம் நிகழ்ந்த அன்று அவர் வெளியூருக்குச் சென்று விட்டதால்,  அவனது அம்மாவுடன் அன்று பயணித்திருக்கிறான். பேருந்தின் நெருக்கடியில் மகனை தவறவிட்ட அவனது  அம்மாவிற்கு எங்கு தேடியும் பிரவீன் கிடைக்கவில்லை. வழி தவறிச் சென்ற பிரவீன் அஞ்சலகம் அஞ்சலகமாக அவன்  அப்பாவை தேடியதுடன், அவனது வீட்டு முகவரியினை பிரவீன் எதிர்ப்பட்டவர்களிடம் சரியாகச் சொல்லியும், ஆட்டிசம்  பாதிப்பு நபரான அவனுக்கு, யாரும் பொறுப்புடன் நின்று உதவ முன்வரவில்லை. அன்றைய இரவு தெருவில் தனியாக  நின்ற அவனை தண்ணீர் ஏற்றிவந்த லாரி மோதியதில், அந்த இடத்திலே பிரவீன் இறந்துவிட்டான்.

ஆட்டிசம் பாதிப்புக் குள்ளான ஒரு குழந்தைக்கு, அலுவலகம் செல்லும் அளவிற்கு பயிற்சி கொடுத்து வேலைக்கு அனுப்ப  அந்தப் பெற்றோர், வாழ்க்கை முழுவதும் எவ்வளவு போராடி இருப்பார்கள். அன்றைய தினம் யாராவது ஒருவர் வழி  தவறிய அந்தப் பையனுக்கு உதவி இருந்தால் இன்று பிரவீன் உயிரோடு இருந்திருப்பான். சமூகமும் கொஞ்சம்  பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டால் அவர்களும் இந்த உலகத்தில் வாழ முடியுமே?’’  என முடித்தார்.

நிவாஸ், நடிகர் மற்றும் யோகா மாஸ்டர்


‘‘என் பெற்றோர்களுக்காக பொறியியல் படித்தேன். ஆனால் நடிப்புத்தான் எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதனால்  பாலுமகேந்திரா சாரின் நடிப்புப் பட்டறையில் ஆக்டிங் கோர்ஸ் எடுத்து படித்தேன். ஒரு சில குறும்படங்களில்  நடிப்பதன்  மூலமும், விளம்பரங்களில் மாடலிங் செய்வதன் மூலமும் என்னை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறேன். நடிப்பு போக  மீதி நேரத்தில் வருமானத்திற்காக எனக்கு தெரிந்த யோகாவை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கத் துவங்கினேன்.  அப்போது ராதா மேடத்தின் மகனான, ஆட்டிசம் குறைபாடுடைய அரவிந்த், என் முதல் மாணவனாக யோகா வகுப்பில்  இணைந்தான். அவனைத் தொடர்ந்து நிறைய ஆட்டிசம் குழந்தைகள் என்னிடம் யோகா கற்றுக்கொள்ள வரத்  துவங்கினார்கள். முதலில் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க நிறையவே கஷ்டப்பட்டேன். அவர்களை புரிந்துகொண்டு  விட்டால் கையாள்வது சுலபம். தொடர்ந்து அவர்களிடம் பழகிய பிறகு, நிறைய புரிதல் ஏற்பட்டது.அவர்களின் செயல்பாடுகளை முழுமையாக நான் உள்வாங்கியதால் என்னால் ஆட்டிசம் குறைபாடுடைய மாணவனாக இக்குறும் படத்தில் நடிப்பதில் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. நான் உள்வாங்கிய  அவர்களின் மேனரிசத்தை அப்படியே இப்படத்தில் வெளிப்படுத்தினேன். ஆட்டிசம் குழந்தைகள் தினமும் யோகா  செய்வதால், அவர்களிடத்தில் சிறிய மாற்றத்தை என்னால் உணர முடிகிறது’’ என முடித்தார்.

மணி, கேமராமேன் மற்றும் இயக்குநர்


‘‘ஒருசில குறும்படம், டாக்கு மென்டரி என பணியாற்றி இருந்தாலும், இந்தக் குறும்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.  ‘என்று தணியும்', ‘கல்லூரி', ‘ஜோக்கர்', ‘பரதேசி', ‘தென்மேற்கு பருவக்காற்று' படங்களிலும், சமீபத்தில் தேசிய  விருது பெற்ற படமான ‘டூலெட்’ படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளேன். திரைக்கு வரவிருக்கும்  சைலன்ட் மூவியான ‘அடவி’ படத்திலும் நான் பணியாற்றியுள்ளேன்.ஆட்டிசம் குறைபாடு குறித்த ஒரு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க நினைத்து இந்தப் படத்தை எடுத்தோம்.  இது ஒரு சமூக நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட படம். இதில் வேலை செய்த அனைவரும் மிகவும் உணர்வுப் பூர்வமாக  பணியாற்றினார்கள். ‘பசங்க’ சிவக்குமார் சார் உட்பட இதில் பணியாற்றிய, நடித்த யாரும் எந்த ஊதியமும்  பெற்றுக்கொள்ள
வில்லை.  இந்தக் குழந்தைகளுடன் பழகிய பிறகே இந்தப் படத்தை எடுத்தேன்’’ என்றார்.

- மகேஸ்வரி

*    ஆட்டிசம் என்பது மூளை மற்றும் மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர்களும் சமுதாயமும்  புரிந்து கொள்ள வேண்டும். சில வகை ஆட்டிசத்தை எவ்வளவு வேகமாகக் கண்டறி கிறோமோ, அவ்வளவு சீக்கிரம்  குணப்படுத்திவிடவும் முடியும். பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் ஆட்டிசம் குறைபாடு உடையோரை  திறமை சாலிகளாக மாற்றவும் முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
*    ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்ற மாபெரும் விஞ்ஞானிகள் ஆட்டிசத்தால்  பாதிக்கப்பட்டவர்கள். பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஸ்டீபன் ஸ்பில்பெர்க் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனரான  பில்கேட்ஸ் போன்றவர்களும் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளாகி பெரிய அளவில் சாதித்தவர்கள்.
*    ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பவர் ஏரியல்வியூவில் பார்க்கும் ஒரு
நகரத்தை 15 நிமிடத்தில் ஓவிய மாக வரைபவர். டெம்பிள் கிராண்டின் என்பவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில்  விலங்கியல் துறை பேராசிரியராகவும் அதே சமயம் எழுத்தாளராகவும் இருக்கின்றார். அமெரிக்காவில் இந்திய  பெற்றோர்களுக்கு பிறந்த கிருஷ்ணன் நாராயணன் ஒரு எழுத்தாளராக இருக்கின்றார்.
*    வசீகரிக்கும் முகமும் புத்தி சாலித்தனமான பேச்சும் கொண்ட இளம் வயது ரோசி கிங் ஆட்டிசத்தால்  பாதிக்கப்பட்டவர். குழந்தைகளுக்கான எம்மி விருது உட்பட இங்கிலாந்தில் பல விருதுகளைப் பெற்றவர். ஆட்டிசம்  குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘என் ஆட்டிசமும் நானும்’. பிபிசியில் ஒளிபரப்பான சிறப்பு நிகழ்ச்சி.
இது, பெரிய அளவில் பாராட்டுகளை வாரிக் குவித்தது.