டவுட் கார்னர் ?



எனது மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். நன்றாகப் படிக்கக் கூடியவள். 90 சதவிகிதத்துக்கும் அதிகம் மதிப்பெண்  எடுக்கக் கூடியவள். ஆனால், ஏனோ கணக்குப் பாடம் மட்டும் அவளுக்குப் பிரச்னையாக இருக்கிறது. வெறும் 10, 12  மதிப்பெண்கள்தான் வாங்குகிறாள். இதற்கு என்னதான் தீர்வு?
- கு.அம்சவேணி, திண்டுக்கல்.பதிலளிக்கிறார் மன நல மருத்துவர் லீனா ஜஸ்டின்...

‘‘ஆரம்பத்திலிருந்தே அவள் இப்படித்தான் இருக்கிறாளா இல்லை இப்போதுதான் இப்படி இருக்கிறாளா என்று பார்க்க  வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே கணக்குப் பாடத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தால் அது Dyscalculia  என்று சொல்லப்படும் கணிதத் திறன் குறைபாடாக இருக்கலாம். இப்போதுதான் இப்படி இருக்கிறாள் என்றால் அது  பாடம் கடினமானதாக இருப்பதனால் இருக்கலாம். அது ஒன்றும் பெரிய பிரச்னையாக இருக்காது.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது ஆரம்பத்தில் அனைத்திலுமே தடுமாற்றம் இருக்கவே செய்யும். ஒன்றிரண்டு  ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவார்கள் இது இயல்பான ஒன்று. ஆனால், அப்படியாக எந்த  முன்னேற்றமும் இல்லாத குழந்தைக்கு கற்றல் திறன் குறைபாடு இருக்கலாம். கணிதத் திறன் குறைபாடு மட்டும்  உள்ளவர்கள் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் சிறந்து விளங்குவார்கள். அவர்களுக்கு 1,2,3,4 என வரிசையாக  சொல்ல வராது. பெரிய தொகையிலிருந்து சிறிய தொகையை கழிக்க வேண்டும் என்கிற அடிப்படையான கணக்கு கூட  போடத் தெரியாது.  

கணக்குப் பாடம் உள்ள நாட்களில் பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பு எடுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். கணக்குப் பாட  வேளையின் போது மட்டும் பதட்டத்தில் தலை சுற்றல், வாந்தி, வலிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு ஆளாவார்கள்.  அப்படியாக குறிப்பிட்ட ஒரு பாட வேளையின் போது மட்டும் இது போன்று அவர்களுக்குப் பிரச்னை ஏற்படுகிறது  என்றால் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். மன நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று முதலில் இது கற்றல்திறன்  குறைபாடு அல்லது கணிதத் திறன் குறைபாடுதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக நாம் படிப்பது  குறுகிய கால நினைவிலிருந்து நீண்ட கால நினைவுக்கு கடத்தப்பட வேண்டும். இது போன்ற பிரச்னை உள்ளவர்களின்  மூளையில் உள்ள நரம்பு செல்கள் படித்ததை குறுகிய கால நினைவிலிருந்து நீண்ட கால நினைவுக்குக்  கடத்துவதில்லை. அதனால் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் அவர்களது மனதில் பதியாது. ஏனென்றால்  அவர்களது மூளையின் இயக்கமே அப்படித்தான்.

மூளையின் நரம்பு செல்களை சீரமைக்க முடியாது என்பதால் திரும்பத் திரும்ப பல விதங்களில் அவர்களது மனதில்  எண்களைப் புகட்டுவதுதான் இப்பிரச்னைக்கான தீர்வாக இருக்கும். விளையாட்டு, இயற்கைக் காட்சிகள், விலங்குகள்  ஆகியவற்றை எண்களோடு தொடர்புபடுத்தி அவர்களை படிக்க வைக்க வேண்டும். கற்றல் திறன் குறைபாடு  (Dyslexia) உள்ள மாணவர்கள் National Institute of Open University மூலம் தேர்வெழுதுவோர்  ஆங்கிலத் தேர்வை புறக்கணித்து விட்டு மற்ற தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற அரசு வழி வகை செய்திருக்கிறது.  Dyscalculia பிரச்னை உள்ள மாணவர்களை குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற வைத்து கணிதம் இல்லாத  மேற்படிப்பில் அவர்களை சிறந்து விளங்க வைக்கலாம். இதனை கற்றலில் குறைபாடு என்று சொல்வதை விட  வித்தியாசமான முறையில் கற்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்’’ என்கிறார்.

- கி.ச.திலீபன்

(வாசகர்கள் இது போன்ற சந்தேகங்களை எங்களுடைய முகவரிக்கு அனுப்பலாம்.உங்களுடைய சந்தேகங்களுக்கு ‘டவுட்  கார்னர்’ பகுதியில்  விடை கிடைக்கும்.)