மேற்குலகின் மையம்
மினி தொடர்
அமெரிக்கப் பயணக் கட்டுரை
பயணம் என்பது பொதுவாக எல்லாருக்குமே பிடித்தமான விஷயம். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். நிறைய மனிதர்களை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி நாம் தெரிந்து கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக வழங்குபவை தான் பயணக்கட்டுரைகள். பயணக்கட்டுரைகள் அந்த இடத்திற்குச் செல்வோருக்கு ஒரு கைடு போல பயன்படவேண்டும். தனது அமெரிக்கப் பயணங்களைப் பற்றி இங்கே தொடராக நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார் சரஸ்வதி சீனிவாசன்.
“ஒவ்வோர் இடத்திற்குச் செல்லும் பொழுதும், அங்குள்ள மனிதர்களின் வாழ்வு முறை, கலாச்சாரம், பாரம்பரியம், உணவு முறை போன்ற பலவற்றையும் அனுசரித்து ஒத்து வாழும் பொழுதுதான் விட்டுக் கொடுத்து, தன்னை மாற்றிக் கொண்டு பழகும் நிலை ஏற்படுகிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால், தமிழ் பேசும் மாநிலங்களாக இருந்தாலும், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் என கூறுகிறோமே!
வட மாநிலங்கள் என எடுத்துக் கொண்டால், தென் மாநிலங்களை விட கோதுமை உணவு அதிகம். மொழியையும் சமாளித்துப் பேசத் தெரிய வேண்டும். எங்கள் உறவினர் பையன் ஒருவன் முழுக்க முழுக்க அரிசி சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வந்தவன், வேலை சம்பந்தமாக வடக்கே ஓர் உள்ளடங்கிய இடத்தில் தங்க நேர்ந்தது.தினமும் இரவில் பிடித்த உணவு கிடைக்காமல், கிடைத்த உணவை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டு வந்தான். இதற்குக் காரணம் நம் பழக்கவழக்கங்களும் என்று கூட சொல்லலாம். அல்லது இடத் திற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக் கொள்ளாத இயலாமை எனலாம். நம் நாட்டிலேயே இவ்வளவு வித்தியாசங்களைக் காண முடிகிறதென்றால், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், பல கடல்களைத் தாண்டிச் சென்று பலப்பல மாதங்கள் வசிக்க நேரிட்டால், நமக்கு எத்தனை விதமான அனுபவங்கள் கிட்டும்? அவற்றையெல்லாம் நாம் ஏன் நமக்குக் கிடைத்த பாக்கியமாக, வாய்ப்பாக மாற்றிக் கொள்ளக்கூடாது?
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் குறிப்பாக ஐ.டி. துறையில் நிறையப் பேர் வேலை நிமித்தம், பல தேசங்களுக்கும் செல்ல நேரிடுகிறது. படிக்கும் போதே மனதளவில் தங்களை தயார் செய்து கொண்டு விடுகிறார்கள். படிப்பதற்காக செல்பவர்கள் பலர். இளம் வயதில் செல்வதால், மேலை நாடுகளின் கலாச்சாரத்திற்கு ஏற்ப தன்னையும் தயார்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியர்களுக்கு, அண்ணாந்து பார்க்க வைக்கும் ‘வியத்தகு உலகம்’ ‘அமெரிக்கா’ எனலாம். அதிலும் நம் நாட்டிற்குள்ளேயே இரண்டு - மூன்று தடவைகளுக்கு மேல் சென்றிராத பல இடங்கள் இருக்க, கடல் கடந்து பல தடவை போக வாய்ப்பு அமைந்தால், என்ன சொல்வது?
அப்படியாகத்தான், எனக்கும் என் கணவருக்கும் வாய்ப்புகள் அமைந்தன. என் கணவருக்கு வேறு நாடுகளுக்கு சென்ற அனுபவம் உண்டு. நானோ, காவிரி நீரைக் குடித்து, தஞ்சை மண்ணில் வளர்ந்தவள். தாய், தந்தைக்கு ஒரே மகளாக இருந்ததால், வெளியூரே அனுப்பாமல் வளர்த்தார்கள். அவர்கள் செல்லும் இடங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்வார்கள். பின் திருமணமாகி கணவருடன் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் முதன் முதலில் சென்ற வெளிநாடே ‘அமெரிக்கா’தான். என் மகனின் வற்புறுத்தலால் நாங்கள் இருவரும் செல்ல தீர்மானித்தோம்.
முதலில் அது எனக்கு அவ்வளவு பெரிய விஷயமாக தோன்றவேயில்லை. கிளம்புவதற்கு நாட்கள் நெருங்கும் நிலையில் தான் ஒரு பக்கம் இன்பம், மற்றொரு பக்கம் கொஞ்சம் கவலை. நான் பணியில் இருந்ததால், எனக்குள்ள விடுப்புடன் சில மாதங்கள் சேர்த்து விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. என் தோழிகள், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் என்னைப் பலப் பல கேள்விகள் கேட்டுத் துளைத்தார்கள். மேலும், ‘நீ இன்னும் ஒரு மாதம் லீவு எடு’, ‘இந்த வாய்ப்பு எப்பொழுதும் கிடைக்காது’, ‘உன் அலர்ஜி பிரச்சனைக்கு சரியான இடம்’ போன்ற ஆலோசனைகள், அவர்களின் நல்லெண்ணங்களை பிரதிபலித்தன. வேலையிலும், நான் முதன் முதலாக நீளமான விடுப்பு கேட்டதால், மிகவும் சந்தோஷமாக, வாழ்த்துக்களுடன் கொடுத்து விட்டார்கள். நானும் நன்றியுணர்வோடு சில வேலைகளை முன் கூட்டியே முடித்துத் தந்தேன்.
மறுபக்கம் கவலை என்னவென்றால், என் பெற்றோர் ‘வயதான காலத்தில் எங்களை விட்டுப் போகிறாயா? சீக்கிரம் வந்து எங்களைப் பார்’ என்று சொல்லி, ‘அங்கேயே தங்கி விடாதே!’ என்று ஓர் அன்புக் கட்டளையும் இட்டனர். இதை நினைத்து என் மனதில் வேதனையும் சூழ்ந்து கொண்டது. ஆனாலும், என் கணவர் குடும்பத்தினர் ‘எத்தனை வருடங்களாக வேலை, ‘பிஸி - பிஸி’ என்றிருப்பீர்கள்... கொஞ்ச காலம் மாறுதலுக்காக ேபாய் வாருங்கள்’ என்று கூறியது சிறிது ஆறுதலாகயிருந்தது.விடுமுறை விண்ணப்பித்தது முதல், என் சக ஊழியர்கள் ‘டிரெஸ்’ எடுத்தாச்சா? ‘சூட்கேஸ்’ வாங்கியாச்சா? ‘எவ்வளவு பெட்டிகள் எடுத்துக் கொண்டு போகிறீர்கள்?’ என்று கேட்பதுடன், ‘நிறைய பேன்ட் வாங்கிக் கொள், புடவைகள் அதிகம் வேண்டாம், நகை ரொம்ப போட்டுக் கொள்ளாதே!’ என்றெல்லாம் பலப் பல யோசனைகள் சொன்னார்கள். எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு என் விருப்பத்தோடு, அவர்களின் யோசனைகளுக்கும் முக்கியத்துவம் தந்தேன். இப்படியாக பல நாட்கள் ‘ஷாப்பிங்’ செய்து யோசித்து யோசித்து செயல்படுத்தினோம்.வீட்டில் செய்ய வேண்டிய முன்னேற் பாடுகளையெல்லாம், ஒரு வழியாக முடித்து விட்டு, அனைவருக்கும் ‘டா டா’ - ‘பை பை’ சொல்லி விட்டு விமான நிலையம் சென்றடைந்தோம்.
சென்னையிலிருந்து குறைந்தது மூன்று இடங்களிலாவது விமானம் மாறித்தான் ஆக வேண்டும். இரண்டு மூன்று விமானங்கள் மாறும் பொழுது, ஒவ்வொரு இடத்திலும் ‘கேட்’ நம்பர் பார்த்துக் கொண்டு ‘எஸ்கலேட்டரில்’ ஏறி நடந்து, பின் ஓடி நம் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ‘செக்யூரிட்டி’ செக் முடிந்து ‘கிளியர்’ பண்ணுவதற்குள் அப்பாடா! பின் விமானத்தில் ‘ஓய்வோ ஓய்வு’தான். அப்பொழுது சிறிது நேரம் எழுந்து நிற்க மாட்டோமா எனத் தோன்றும்.இப்படியாக ‘துபாய்’ வழியாக ‘சிகாகோ’ சென்று அங்கிருந்து குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்தோம். எங்கள் மகனின் நண்பர்கள் உட்பட அனைவரும் அங்கு காத்திருந்தனர். விமான நிலையமே, எங்களுக்கு சொர்க்கத்தைப் பார்ப்பது போல் இருந்தது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.சுற்றுமுற்றும் பார்க்கிறோம். பூமியில் தான் இருக்கிறோமா என்று யோசிக்க வைத்தது.
எந்த ஒரு இடத்திலும் வரிசை தவறி யாரும் செல்லவில்லை. நேர் எதிரே வந்து விட்டால் கூட ‘சாரி’ சொல்லி விட்டு விலகிச் செல்லும் பழக்கம் தான் ஒவ்வொருவரிடமும் வியக்க வைத்தது. என்ன ஒரு நாகரிகம்! ‘பாஸ்போர்ட்’ - சரிபார்த்தல் வரிசைகள் - தனித்தனி ஒற்றை வரிசைகள் - கோடு தாண்டாமல், அவர்கள் தலையசைத்தப் பின்னரே ஒருவர் ஒருவராக செல்லும் பழக்கம். இவற்றைப் பார்த்தவுடன் எங்களுக்கு என்ன ஒரு ஆச்சரியம்.வெளியே வந்து பெட்டிகளை காரில் வைத்தோம்! ‘ஹூய் - ஹூய்’ என்று திடீர் குளிர்காற்று உறைய வைத்தது. ஒரு பக்கம் லேசான வெயில்! மதியம் மூன்று மணிதான். என் கணவருக்கு உதடுகள் நடுங்க ஆரம்பித்தன! அப்பொழுதுதான் என் மகன் சொன்ன கம்பளியின் அவசியம் தெரிந்தது. நாங்கள் முதலில் சென்ற இடம் வட அமெரிக்காவிலுள்ள மிகவும் பிரபலமான குளிர்ப் பிரதேசம், கல்லூரிகளுக்குச் சிறந்த இடமான ‘மினியாபோலிஸ்’ என்பது. நிறைய அமெரிக்கர்கள் நிறைந்த இடம். பெரும்பாலும் நிறைய படித்தவர்கள்
மிகுந்த இடம் என்றும் சொல்வார்கள்.நாங்கள் முதன் முதலில் சென்றது ‘மார்ச்’ மாதம் என்றதால், நான் குளிரைப் பற்றி யோசிக்கவேயில்லை. என் மகன் எங்களை கண்டிப்பாக ‘கம்பளி’ ஆடைகள் ஒன்றிரண்டாவது எடுத்து வரச் சொல்லியிருந்தான். பெட்டிகளின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தாலும், அவன் அவற்றைக் கொண்டு வரச் சொன்னதின் முக்கியத்துவம், அங்கு சென்று அடைந்த பொழுதுதான் எனக்குப் புலப்பட்டது.
(பயணம் தொடரும்) எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்
- சரஸ்வதி சீனிவாசன்
|