குரல்கள் - பெண்ணின் சமூகப் பொறுப்புகள்
பெண்ணுக்கு இருக்கும் சமூகப் பொறுப்புகள் என்னென்ன? சமூகத்தின் ஓர் அங்கம் பெண் என்கிற வகையில் பெண்களுக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்புகள் எவ்வாறானவை என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களிடம் கேட்டபோது...
பத்மஜா நாராயணன், வங்கி ஊழியர்
ஓர் ஆணைப் போன்றே பெண்ணுக்கும் பல பரிமாணங்களில் பொறுப்புகள் இருக்கின்றன. முக்கியமாக ஒரு தாயாய் அவளின் பொறுப்புகள் முக்கியமானவை. அவசியமானவையும் கூட. தன் குழந்தைக்கு இச்சமூகத்தில் உள்ள பங்கையும், பொறுப்பையும் கற்றுத் தருபவள் தாய்தான். பாலின சமநிலை, சூழலியல் பாதுகாப்பு, தன்மானம் காத்தல், தன்னுரிமை பேணுதல் போன்றவற்றை தன் குழந்தைகளுக்குப் புகட்டுவது பெண்ணுக்கு இருக்கும் முக்கியப் பொறுப்பு. இது குடும்பப் பொறுப்பு மட்டுமல்ல வளமான சமூகத்தைக் கட்டமைப் பதற்கான சமூகப் பொறுப்பும் கூட.
ஆதிரா பாண்டிலட்சுமி, நாடகத்துறை
சமூகம் என்பது குடும்பங்களால் ஆனது. பெண்கள் குடும்பத்தின் தலையாய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள். இங்கு சிக்கல் என்னவென்றால் பெண்கள் ஒடுக்கப்படுவதற்குப் பின் ஆணாதிக்க மனநிலை இருக் கிறது. ஆனால் ஆணுக்கான ஆதிக்க மனப்பான்மையை பெண்களே ஏற்படுத்துகிறார்கள் என்பதுதான் வேதனை. பெண்கள் ஆணுக்குக் கீழானவர்கள் என்கிற எண்ணத்தை பெண்களே தங்கள் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறார்கள். இது நேரடியாகவும், அவர்களே அறியாத வண்ணமும்நிகழ்கிறது. தன் குழந்தை தவறே செய்தாலும் ‘‘ஆம்பளப்புள்ள இப்படித்தான் இருப்பான்’’ என அதனை ஆதரிக்கிறார்கள். பாலின சமத்துவத்தை வெறும் பேச்சளவில் இல்லாமல் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் பெண் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். ஆணை சார்ந்திருக்கும்போதுதான் அவர்களின்ஆதிக்கத்துக்கு அடி பணிய வேண்டியதாகிறது. சமத்துவத்துடன் வாழ்வதும், தங்கள் குழந்தைக்கு சமத்துவத்தைப் புகட்டுவதும் பெண்ணின் முக்கியமான பொறுப்பாகப் பார்க்கிறேன். குடும்பத்தைத் தாண்டியும் சமூகப் பிரச்னைகளுக்கெதிராகச் செயல்படுவதற்கான பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. ஆண் - பெண் இருவரும் சமம்தான். இந்தந்த வேலைகள் பெண்களுக்கானவை என்று ஒதுக்குவதை எப்படி எதிர்க்கிறோமோ அதே போல் இந்தந்த பொறுப்புகள் ஆணுக்கானவை என்று ஒதுக்குவதையும் எதிர்க்க வேண்டும்.
அர்ச்சனா, தனியார் நிறுவன ஊழியர்
பெண்களுக்கான சமூக பொறுப்பு என்பது கால சூழலுக்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது. முந்தைய தலைமுறைகளில் எல்லாம் பெண்கள் வீடு என்னும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்தார்கள். கட்டுப்பாடுகளுக்கேற்ப ஆடைகளை உடுத்தினார்கள். ஆணுக்கு நிகராக உட்கார்ந்து பேசுவது கூடத் தவறாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு அச்சூழல் மாற்றம் கண்டிருக்கிறது. நாம் விரும்பும் உடைகளை உடுத்தலாம். ஆனால் இடத்துக்குத் தகுந்தாற்போல் இந்த பொறுப்புணர்வும் மாறுபடும். சென்னை மாதிரியான மெட்ரோபாலிடன் நகரில் நாம உடுத்தும் உடையை கிராமங்களில் உடுத்த முடியாது. சமூகம் என்று நாம் சொல்வது நம்மை சுற்றியிருப்பவர்களால் ஆனது.அவர்களின் கண்ணோட்டத்துக்காக நாம் வாழ வேண்டிய நெருக்கடிக்கு ஆளாக வேண்டி வருகிறது.பாலியல் வன்முறை நடக்கும்போது கூட பாதிக்கப்பட்ட பெண் உடுத்தும் ஆடையைப் பற்றி பேசுகிறார்கள். சமூகம் வகுத்து வைத்திருக்கிற விதி முறைகளுக்குள் வாழ்வது பெண்ணின் பொறுப்பு கிடையாது. யாருடைய விருப்பத்துக்காகவும் இல்லாமல் தனக்கான ஒரு வாழ்க்கையை எந்தப் பாதகமும் இல்லாமல் வாழ்வது கூட பெண்ணின் பொறுப்புதான்.
மஞ்சுஷா மனோகரன், இல்லத்தரசி
ஆணுக்கு சரி நிகராக எல்லாவற்றிலும் போட்டி போடும்போது பொறுப்புணர்வு என்று வரும்போது மட்டும் தள்ளி நிற்பது நியாயமாக இருக்காது. வீட்டுப் பிரச்னை மட்டுமல்ல நாட்டுப் பிரச்னையிலும் பெண்களுக்கான பொறுப்பு இருக்கவே செய்கிறது. குடும்பத்தை ஆரோக்கியமாக கட்டமைத்தாலே சமூகப் பிரச்னைகள் குறைந்து விடும். ஏனென்றால் குடும்பங்களால் ஆனதுதான் சமூகம். ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தனித்து சிந்திக்காமல் சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருதி நடக்க வேண்டும். கட்டுப்பாடுகளுக்குட்பட்டு ஆடை அணிய வேண்டும் எனச் சொல்லவில்லை. அதே நேரம் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது கூட பெண்ணின் சமூகப் பொறுப்பு. பார்க்கிறவர்களை தொந்தரவு செய்யாதபடி உடை உடுத்த வேண்டும். என் உடை என் உரிமை என எதை வேண்டுமானாலும் அணிவேன் என்பது நமது சமூக சூழலுக்கு உகந்ததல்ல. ஆகவே இது போன்று ஒவ்வொன்றுக்குப் பின்பும் பெண்களுக்கான சமூகப் பொறுப்பும் அடங்கியிருப்பதை மறுக்க முடியாது.
எழில் அருள், உளவியல் ஆலோசகர்
ஆணுக்கு இருக்கும் அத்தனை சமூகப் பொறுப்புகளும் பெண்களுக்கும் உண்டு. தான் சந்திக்கும் சக பெண்களின் கல்வி மறுப்பு, சிறுமைப்படுத்துதல் குறித்து பேசத் தயங்கக் கூடாது. தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அதற்கு முதலில் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வாசிப்பின் வழியாக நமது சமூகத்தையும், அரசியலையும் தெரிந்து கொள்ள வேண்டும். தர்க்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மாலதி மைத்ரி, எழுத்தாளர்
பெண்களுக்கு அதிகப் பொறுப்புணர்வு இருக்கக் கூடாது என்பதுதான் என் வாதம். பெரும்பாலான பொறுப்புகள் பெண்கள் தலையில்தான் சுமத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பொறுப்புகள்தான் பெண்களுக்கான இன்றைய முக்கியப் பிரச்னை. சமூகப் பொறுப்பு, குடும்பப் பொறுப்பு என பொறுப்புகள் விலங்கு போல் அவர்களை கட்டி வைத்திருக்கிறது. பொறுப்புணர்வு என்பதே பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் போர்தான். இவற்றைத் துறக்கும்போதுதான் பெண்ணின் விடுதலை சாத்தியப்படும். சமூகம் சுமத்துகிற பொறுப்புகள் என்னும் கற்பிதங்களிலிருந்து அவர்கள் வெளி வர வேண்டும்.என்ன உடை அணிய வேண்டும் என்பதிலிருந்து அவர்கள் எப்படியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது வரையிலும் அவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பொறுப்பு என்கிற அலங்கார வார்த்தைகளைக் கூறி அவர்களை மிஸ் யூஸ் செய்கிறார்கள். அவர்களின் அறியாமையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வோடு இருந்து மட்டும் அவர்களுக்கு என்ன கிடைத்து விட்டது? இனி வணிக ஒப்பந்தம் போல்தான் அவர்கள் சமூகத்துடன் உறவாட வேண்டும். எனது ஓட்டு வேண்டுமா? ஆட்சி அதிகாரத்தில் எனக்கான பங்கு என்ன குடும்பத்தை நிர்வகித்துக் கொள்ள வேண்டுமா? குடும்ப அதிகாரத்தில் எனக்கான பங்கு என்ன என்கிற ஒப்பந்தத்துக்குள் அவர்கள் செல்ல வேண்டும். பொறுப்புணர்வு என்கிற பெயரில் சுமைகளை எல்லாம் பெரும்பாலும் பெண்கள் மீது ஏற்றி வைக்கப்படுகிறது. பெண்களுக்கு உரிமையே இல்லாத சமூகத்தில் அவர்கள் எதற்காக பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்? பெண்களென்றால் பொறுப்பாக இருக்க வேண்டும், வெளுப்பாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இச்சமூகம் திணிக்கும் கருத்துகள். அதற்கு அவர்கள் உடன்படத் தேவையில்லை. l
- கி.ச.திலீபன்
|