ப்யூட்டி பாக்ஸ்



ஹேமலதா, அழகுக்கலை நிபுணர்

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது

மருக்கள்


அழகு என்பது நம்மை பளிச்சென வெளியில் காட்டிக்கொள்வதிலேயே இருக்கிறது. நம் உடையும், முகமும் பார்ப்பதற்கு  பளிச்செனத் தெரிந்தாலே அன்றைய நாள் முழுவதும் மலர்ச்சிதான். நம்மைப் பார்ப்பவர்களுக்கும் தானாக உற்சாகம்  தொற்றிக் கொள்ளும். நம் அழகை வெளிக்காட்டும் சருமத்தில் சற்றேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவ்வளவுதான்.  பொதுவெளிகளில் நம் தன்னம்பிக்கையையே குறைத்துவிடும்..
 
HPV எனப்படும் Human Papilloma Virus மூலமாக மரு தோன்றுகிறது. சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு  மருக்கள் இருக்கும். மற்றும் சிலருக்கு முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில்  வரும். நம் தோலில் சேரும் அழுக்கின் அதிகப்படியான வளர்ச்சியே மரு. மரு உடலில் எங்கு வேண்டுமானாலும் எந்தப்  பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். சிலவகை மருக்கள் பார்ப்பதற்கு மச்சத்தைப் போல் தோன்றினாலும்,  அவற்றால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் இந்தவகை மருக்கள் இளம் வயதினரின் அழகைக் கெடுப்பது  போல் தோற்றமளிக்கும்.

சிலவகை மருக்களை நாமே வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நீக்க முடியும். ஆனால் எல்லா வகை  மருக்களையும் அப்படிச் செய்ய இயலாது. சிலவகை படர்ந்த மருக்கள் அல்லது ஆழமாக வேரோடிய மருக்களை  மருத்துவரை அல்லது அதற்கென பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களை அணுகி நீக்கலாம். மருவை கூர்ந்து  நோக்கினால் காலிஃப்ளவர் பூவைப் போன்ற வடிவை ஒத்து இருக்கும். அதன் மேல் கண்ணிற்குத் தெரியாத நிறைய  ரோமங்கள் படர்ந்திருக்கும். மருவில் நிறைய வகை உள்ளது. அதில் நான்கு வகைகள் முக்கியமானவை.
1. சாதாரண வடிவில் வரும் மரு
2. படர்ந்து பரவும் மரு
3. கருப்பு நிறத்தில் வெளியில் சற்றே பெரிதாக துருத்திக் கொண்டிருக்கும் மரு
4. ப்ளான்டர் மருக்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கே மரு அதிகமாக வருகிறது. தோலில் எண்ணைத் தன்மை அதிகமாக  உள்ளவர்களுக்கு மரு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வெளியில் செல்லும்போது அதிகமாகத் தோலில் படும்  உஷ்ணம் மற்றும் அழுக்கு போன்றவை நம் தோலை பாதிக்கின்றது. நம் தோலை இவைகள் பாதிக்காத வண்ணம்,  சருமப் பாதுகாப்பிற்கான, சன் புரொடக் ஷன் அல்லது சன் கண்ட்ரோல் லோஷனை தடவிக் கொண்டு வெளியில்  சென்றால் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பு. இதனால் தோல் நேரடியான தாக்குதலுக்கு உள்ளாகாமல்  பாதுகாக்கப்படும்.நம் தோலிற்கு எந்தவித பாதுகாப்பும் செய்யாமல் வெளியில் செல்லும்போது, தோலில் தோன்றும்  பாதிப்புகள், தோலின் இரண்டு அடுக்கு லேயர்களுக்குள் உள் நுழைந்து அங்கே நிரந்தரமாகச் சேருவதன் மூலமாகவும்  மரு உருவாகுகிறது.

நம்மை சுத்தமாக வைத்துக் கொள்ளாமை, உடலைத் தேய்த்துக் குளிக்காமல் இருத்தல் போன்றவையும் வேறு சில  காரணங்கள். இதனால் கழுத்து இடுக்கு, அக்குள் பகுதிகள், கால், முதுகுப் பகுதி போன்ற இடங்களில் மருக்கள்  அதிகமாகத் தோன்றுகிறது. மரு இருப்பவர்களின் டவல், சோப்பு, உடை போன்றவைகளைப் பயன்படுத்துதல் கூடாது.  மரு ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மையுடையது. கழுத்தில் அழுத்தமான ஆபரணங்களை  அணிபவர்களுக்கும், அதன் அழுத்தத்தால் தோல் பாதிப்படைந்து, கழுத்தில் தழும்புகள் ஏற்பட்டு அழுக்குகள் உள் சென்று,  கொலோஜன் மற்றும் ரத்த நாளங்களோடு இணைந்து, கழுத்துப் பகுதியில் மரு தோன்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெற்றோர்கள் அல்லது குடும்பத்தில் யாருக்காவது மரு இருந்தால் நமக்கும் மரு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும்  அதிகம் உண்டு.

இந்தியாவில் ஒரு வருடத்தில் மருவால் பாதிக்கப்படுபவர்கள் 10 மில்லியனைத் தாண்டும் என்கின்றனர் மருத்துவ  ஆய்வில். மேலும் மரு விரைவாகத் தோலில் பரவக் கூடிய தன்மை உடையது. மருவில் இருந்து கசியும் நீர் அதன்  அருகே உள்ள இடங்களில் படும்போது நீர் கசிவு படுகிற இடங்களில் எல்லாம் பரவத் தொடங்குகிறது. மரு இருக்கும்  இடத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டால் அந்த மரு வலி தராது. ரத்த ஓட்டம் இருப்பின் அந்த மரு வலி தரத் துவங்கும்.

எனவே மருவை எந்தவித பாதுகாப்பும் இன்றி நாமாக நீக்க முயற்சித்தல் கூடாது. அவ்வாறு செய்தால் மரு இருந்த  இடத்திற்கு அருகிலேயே நூற்றுக்கணக்கில் பரவத் தொடங்கும். மருவின் ஆயுட் காலம் ஒரு வாரத்தில் துவங்கி ஐந்து  ஆண்டுகள் வரை இருக்கும் என்கின்றனர். சிலரது உடலில் தோன்றும் மருக்கள் ரத்தக் கசிவுடன், வலி, அரிப்பு, பரவுதல்  போன்ற தன்மை உடையதாக இருக்கும். இந்தவகை மருக்களை மருத்துவரை அணுகி நீக்குவதே நல்லது.மருவை சிலர் தானாகவே முயன்று தலை முடியினை மருவில் கட்டி வைத்தல் அல்லது பிளேடால் நறுக்கி எடுத்தல்  போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுகின்றனர். அது மிகவும் தவறான செயல். அப்படிச் செய்வதால் மரு  பரவுவதுடன், சர்க்கரை நோயாளியாக இருந்தால் மிகப் பெரிய காயமாக மாறி, உடல் உபாதைகளை ஏற்படுத்துவதுடன்,  உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. மிகப் பெரிய மருக்களாக இருந்தால் மருத்துவரை அணுகுவதே  நல்லது.

மிகச் சாதாரணமான தோற்றத்தில் இருக்கும் மருவை வீட்டு வைத் தியம் மற்றும் அழகு நிலையங்களில் வந்து சரி  செய்து கொள்ளலாம். சிறிய வடிவில், உதிரக் கூடிய தன்மை கொண்ட மருக்களை நாமாகவே வீட்டில் உள்ள  பொருட்களை கொண்டு சரி செய்யலாம்.
* அம்மான் பச்சரிசி இலையில் வரும் பாலை காலை மாலை இரண்டு வேளையும், மருவின் மேல் வைப்பதன் மூலம்,  மரு காய்ந்து தானாகவே விழுந்துவிடும்.

* வெள்ளைப் பூண்டில் உள்ள என்சைம் மருவை அழிக்கும் வல்லமை உடையது. எனவே பூண்டை தோல் நீக்கி  பேஸ்டாக்கி மருவில் தினமும் தடவ வேண்டும். வெங்காயத்தையும் பேஸ்டாக்கி தடவலாம்.

* உருளைக் கிழங்கை பேஸ்ட் செய்து மருவில் தடவுதல் மூலமும், பெருங்காயத் தூளையும் மருவின் மேல்  தடவுவதன் மூலமும் மருக்கள் நீங்க வாய்ப்புண்டு.

* கற்பூர எண்ணை, ஆப்பிள் சிடார் வினிகர் இவற்றில் ஏதாவது ஒன்றை பஞ்சில் நனைத்து மருவின் மேல் காலை  மாலை இரண்டு வேளையும் வைக்க வேண்டும்.

* விட்டமின் இ மாத்திரை, ஆலுவேரா ஜெல், டீ ட்ரீ ஆயில் இவையும் மருவை உதிரச் செய்யும் தன்மை கொண்டவை.

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை, வீட்டில் நாமாகவே செய்யலாம். இவற்றை தொடர்ந்து செய்வதன்  மூலம் சிலவகை மருக்கள் அதன் தன்மையைப் பொறுத்து குறிப்பிட்ட காலத்திற்குப் பின் உதிரத் துவங்கும்.மருவை நீக்குவதற்கென முறைப்படியான அழகு நிலையங்களை அணுகி, மெஷின் மூல மாக ஊசி முனையில் மின்  அதிர்வினை மருவின் மேல் கொடுத்து, நீக்கும் முறையும் உள்ளது.அல்ட்ராசோனிக் மெஷின் மூலமாக, ஊசி முனை  கொண்டு கன்னம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள மருவை எடுக்கும் முறையினை நமக்காக செய்து காட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் ரவீனா.

அவருடன் இணைந்து தங்கள் கன்னம் மற்றும் கழுத்தில் உள்ள மருவை நீக்கிக் கொள்கின்றனர் ரோகினி மற்றும் புனிதா.
* மருவை நீக்குவதற்கு முன்பு அதற்கான லோஷனை மருவில் தடவி, ஒரு சில நிமிடங்கள் விடவேண்டும்.
* அல்ட்ராசோனிக் இயந்திரம் மூலமாக ஊசி முனையில் மின்சார அதிர்வுகளை உருவாக்கி மருக்களின் மேல் வைத்து  நீக்க வேண்டும்.
* வேரின் ஆழத்தைப் பொறுத்து ஒரே நாளிலோ அல்லது சிறிது சிறிதாகவோ வேருடன் எடுத்துவிட முடியும்.
* மெஷின் மூலமாக வேரோடு
நீக்கி விட்டால் அந்த இடத்தில் மீண்டும் வராது.
* மருவை நீக்கிய இடத்தில் மீண்டும் லோஷனை தடவ வேண்டும்.

முகம் மற்றும் முதுகு போன்ற பகுதிகளில் படர்ந்து காணப்படும் மருக்களையும் இந்த இயந்திரம் கொண்டு நீக்க  முடியும். ரத்த ஓட்டம் உள்ள மருவை எடுக்கும்போது சற்று கவனமாக எடுத்தல் வேண்டும். ஏனெனில் மரு இருந்த  இடத்தில் இருந்து ரத்தம் வேகமாக வெளியேறத் துவங்கும்.

இனிவரும் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…கை  அக்குள், தொடையின் இடுக்கு கள் போன்ற மறைவுப் பகுதிகள் மற்றும் கண்ணுக்கு  கீழே கருவளையும்,
உதட்டிற்கு கீழே தோன்றும் கருமை நிறங்களை எப்படி நீக்குவது என்பதை பார்ப்போம்…

எழுத்து வடிவம்: மகேஸ்வரி
(தொடரும்…)

படங்கள்: ஆர்.கோபால்


வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இதழ் முகவரிக்கு ‘ப்யூட்டி பாக்ஸ்’ என்னும் பெயரில் கேள்விகளை  அனுப்பினால் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா தங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.