ஜான்வியின் தியாகம்



வாசகர் பகுதி

6 வயது ஜான்வி கடந்த மாதம் வரை ரொம்ப சகஜமாய் விளையாடி படித்துக் கொண்டிருந்தாள்.ஒரு நாள் திடீரென  கடுமையான வயிற்றுவலி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டது. பிறகு தொடர்ந்து அவளால் தன் புத்தகத்தை கூட படிக்க  முடியாமல் போனபோது, முதலில் அவளுடைய ஊரான சித்ர துர்காவில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய்  சேர்த்தனர். பிறகு அங்கு கிடைத்த ஆலோசனையின்படி மங்களூர் மருத்துவமனைக்கு கொண்டு போய் காட்டினர்.  குழந்தையின் குழந்தைத்தனமான பேச்சைப் பார்த்து முதலில் குழந்தைக்கு ஒன்றுமில்லை எனக் கூறினாலும், பிறகு  ‘எம்.ஆர்.ஐ’ ஸ்கேன் எடுத்த போது, மூளையில் சதை வளர்ச்சி மற்றும் தண்ணீர் தேங்கி இருப்பது தெரிந்தது.பிறகு அந்த மருத்துவமனையின் சிபாரிசில் மற்றொரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு  செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு முன்பே பெற்றோரிடம்  ‘‘உங்க குழந்தை பிழைப்பது கஷ்டம். மிகக் கடினமானஆபரேஷன்.  இருந்தாலும் வெற்றிக்கு கடும் முயற்சி மேற்கொள்ளப்படும்’’ எனக் கூறி விட்டனர்.14 மணி நேரம் ஆபரேஷன்  நடந்தது. மூளையில் இருந்த சதையும், தண்ணீரும் அகற்றப்பட்டது. இருந்தும் ஜான்வி கோமாவிலேயே இருந்தாள்.  நினைவு திரும்பவில்லை. பிறகு ஒரு சமயம் கண்களை திறந்தாள். தன் பாவைகளைச் சுற்றி ஓட்டினாள். பிறகு  கண்களை மூடிக் கொண்டு விட்டாள்.பல மணி நேரங்கள் கழித்து சர்ஜன்கள், ‘ஜான்வியின் மூளை செயல்பாட்டில்  இல்லை. மூளை இறந்து விட்டது’ எனக் கூறினர்.

தங்கள் பெண் நிரந்தரமாய் இறப்பதில் பெற்றோருக்கு இஷ்டம் இல்லை. அதே சமயம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஜான்வியின் உடல் உறுப்புகளை தானம் செய்து, மேலும் பலருக்கு புது வாழ்வு தரலாமே என கோரிக்கை வைத்தனர்.  அதனை  ஏற்று இருதயம், கண்கள், சிறுநீரகங்கள், குடல் ஆகியவற்றை தேவையானவர்களுக்கு தர முன்வந்தனர். அதன்படி,  ஜான்வியின் இருதயம் - விசாகப்பட்டினத்தை சேர்ந்த 9 வயது பையனுக்கு தரப்பட்டது.கண்கள் - ஒவ்வொன்று வீதம்  இரு பேருக்கு வழங்கப்பட்டது. சிறுநீரகங்கள் - இரண்டு பெரியவர்களுக்கும். குடல் - 9 வயது குழந்தைகளுக்கும்  வழங்கப்பட்டது. ஆக ஜான்வி, இவர்கள் மூலம் இன்றும் வாழ்கிறாள். இவரைப் போல் மிக இளம்வயதில் இறக்கும்  குழந்தைகளை புதைத்து விடாமல், உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு கொடுத்து உதவி புது வாழ்வு தருவதென்பது ஓர்  உன்னத காரியம் அல்லவா?

- ராஜிராதா, பெங்களூரு.