பெண்களுக்கு கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பில்லையா?
பேராசிரியர் நிர்மலா தேவி பிரச்சனை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவிகளுக்கு ஆசை காட்டி, அதிக மதிப்பெண் பெறவைப்பதாகவும் வேலை வாங்கித்தருவதாகவும் கூட பேரம் பேசி பாலியல்ரீதியான அழைப்புகளை யாருக்காகவோ கேட்கும் நிர்மலாதேவியின் ஆடியோ வெளியானதிலிருந்து கல்வி பயிலும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்திருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வாயிலாக நாம் கற்றுக்கொண்டது என்ன, இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்று சிலரிடம் கருத்து கேட்டேன்.
பேராசிரியர் சிவகுமார் பேசுகையில், ‘‘கல்வியைப் பொறுத்தவரை முழு ஈடுபாட்டுடனும் சமூக அக்கறையுடனும் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் குறைவாக இருப்பதற்கு காரணமாக நான் கருதுவது, கடந்த 10 ஆண்டுகளாக உதவிபெறும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நியமிக்கப்பட்டவர்கள் பல லட்சங்களை கொடுத்து வந்ததாக ஊடகங்களில் பார்க்கிறோம். கல்வி ஒரு பக்கம் வியாபாரம் ஆகிவிட்டது. அரசு சார்ந்த பல்கலைக்கழகங்கள், உதவிபெறும் கல்லூரிகளில் முறைகேடாக நியமனங்கள் நடந்திருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் கேள்வி எழுப்பின. எந்த வித நடவடிக்கையும் தமிழக அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.
இது கல்வியினுடைய சீரழிவு. உயர் கல்வி மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வி துறையிலும் இந்த நிலையை பார்க்கலாம். அண்மையில் பல் தொழில்நுட்ப கல்லூரி தேர்வு வாரியத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமானது. இது போன்ற சீர் கேடுகள் வருவதற்கு என்ன காரணம் என்றால் துணைவேந்தர்கள் எல்லாம், கல்வி சார்ந்த அடிப்படையில் நியமிக்கப்படாமல் ஏதோ ஒரு பலன் பெறுவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்து வருகிறார்கள். சில துணைவேந்தர்கள் கைது செய்யப்பட்டதையும் நாம் பார்த்தோம். இந்தப் பின்னணியில் பார்த்தோமேயானால் பல்கலைக்கழகம் கல்லூரிகளை கவனிக்க வேண்டும். ஆட்சிக்குழு, செனட் அமைப்பு, கல்விக்குழு இந்த அமைப்புகள் முறையாக செயல்படவேண்டும். முறையாக தேர்தல் நடக்க வேண்டும். இவை அடிப்படையானவை.
அருப்புக்கோட்டை தேவாங்கா கல்லூரியை எடுத்துக்கொண்டால், அங்கு நிர்வாகத்திலே இரு பிரிவினருக்கு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது கல்வி செயல்பாட்டை பாதித்திருக்கிறது. கடந்த காலங்களில் மதுரை காமராஜர் ஆசிரியர் மன்றம் போராடி இந்த கல்லூரிக்கு நிரந்தரக் கட்டிடம் பெற்றுத்தந்தனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசு உதவிபெறும் கல்லூரி இது. அண்மையில் பேராசிரியர் பாலியல் சம்பந்தமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு சில மாணவிகளை அழைத்த ஒலிக்குறிப்புகளை பார்த்தோம். இந்த சம்பவம் மேலே குறிப்பிட்ட சீர்கேடுகளின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பார்த்தால் விசாகா அறிக்கைக்கு பின்னால் பல்கலைக்கழக மானியக்குழு இது குறித்து விவாதித்து எல்லா கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை கொடுத்தது. அதில் குழுக்கள் அமைக்கப்படவேண்டும், அந்தக் குழுவில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆராய்ச்சி மாணவர்கள்தான் அதிகமாக பாலியல் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள் என்று சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடுகிறது. ஆய்வுக்கூடங்களில் ஆய்வு தொடர்பாக 24 மணிநேரமும், அந்தக் கருவிகளை கண்காணிக்க வேண்டிய தேவை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுகிறது. சில மாணவிகள், தங்களுடைய ஆண் நண்பர்களை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு வளாகங்களில் இல்லை.மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்களாலேயே மாணவ, மாணவிகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்.
இது மட்டுமல்லாமல் மாணவர்களின் ஆராய்ச்சியின் முடிவு அறிக்கையில் பெரும்பாலான பேராசிரியர்கள் தங்களுடைய பெயரை முன்னால் போட்டுக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு அடிமைத்தனத்தை இவர்கள் கடைபிடிக்கிறார்கள். இப்படி இருக்கக்கூடிய பேராசிரியர்கள் மாணவ - மாணவிகளை கை பொம்மையாக பயன்படுத்துகிறார்கள். இது போன்ற சூழலில்தான் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்.
மாணவிகள் அவர்களின் அடிபணிதலுக்கு மறுத்தால் அவர்களின் அறிக்கையை மோசமாக கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இந்த அடிமைத்தனத்தை உடைக்க வேண்டும் என்றால், ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு சங்கம் இருக்க வேண்டும். தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சங்கங்களை இவர்கள் அனுமதிப்பதில்லை. புதுடெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அமைப்பு உண்டு. அங்கேயும் கூட இது போன்ற பிரச்சனைகள் நடந்ததை நாம் பார்த்தோம். ஆனால் அதை எதிர்த்து போராட மாணவர்களுக்கு ஒரு அமைப்பு இருந்தது. இங்கு அது போன்ற அமைப்பு இல்லை. அப்படியானால் இங்கு என்ன மாதிரியான நிலை இருக்கும் என்று நாம் யோசிக்க வேண்டும். மாணவர்கள் தங்களுடைய கோரிக்கையை யாரிடம் சொல்ல முடியும் என்கிற கேள்வி இருக்கிறது.
ஆசிரியர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காக சங்கம் வைத்து போராடுகிறார்கள்.ஆனால் மாணவர்கள் சங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதில் எங்கு ஜனநாயகம் இருக்கிறது? இதையும் மீறிதான் அந்த நான்கு மாணவிகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஒலிக்குறிப்பு ஊடகங்களில் வந்த பிறகு ஆளுநர் உயர் கல்வித்துறை அமைச்சரை கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்து சந்தானம் குழுவை அமைத்தது சரியான விஷயம் அல்ல. ஆய்வு மாணவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை மிகக்கொடுமையானது. அந்த மாணவர்களை தங்களுடைய தனிப்பட்ட வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த நிலை பல்கலைக்கழகங்கள் மட்டுமல்ல ஐஐடி போன்ற நிறுவனங்களிலும் உள்ளது. ஆய்வே வேண்டாம் என்று ஓடிப்போனவர்களும் உண்டு.
மாணவிகள் பாலியல் தொல்லையில் இருந்து மீள்வதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இது போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக போராடுகிறவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இந்தியாவில் இருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான சூழலில் கல்வி நிலையங்கள் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்றால் கல்வி வியாபாரம் ஆவதை தடுக்க வேண்டும். கல்வித் தரம் அடிப்படையில் ஆசிரியர், பேராசிரியர் நியமனம் இருக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு வரக்கூடிய நிதியினை தற்போதுள்ள மத்திய அரசு நிறுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. அப்படி செய்தால் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த யாரும் கல்வி கற்க முடியாத சூழல் தமிழகத்தில் ஏற்படும்” என்கிறார்.
ஆய்வு மாணவி சுசீந்திரா கூறுகையில், “பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் என அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவிகள் இது போன்ற ஆசிரியர்களாலும், பேராசிரியர்களாலும், உயர் அதிகாரிகளாலும் பல்வேறு விதமான பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கிறார்கள். நிர்மலா தேவி விஷயத்தில் அவர் வெறும் அம்பு மட்டும்தான், அம்பை எய்து விட்டு அம்பை எய்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இதற்கு முன்பு திருச்சி, விருதுநகர் மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
எத்தனை உயர் கல்வி நிலையங்களில், பல்கலைக்கழகங்களில் பாலியல் குற்றப்பிரிவு ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற புள்ளி விவரங்கள் உண்டா? அப்படி அமைக்கப்பட்டிருக்கக்கூடிய நிறுவனங்களில் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா, வர்மா கமிட்டியில் போடப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில் இயங்குகிறதா என்கிற கேள்விகளுக்கு அரசிடம்பதில் இல்லை. பேராசிரியர்களிடம் கேள்வியே கேட்கக்கூடாது என்று பைலாவை வைத்துக்கொண்டு அவ்வப்போது சர்க்குலர் கொடுப்பது என்ன விதமான பாதுகாப்பை மாணவர்களுக்கு கொடுக்கும். இது ஒரு வித ஒடுக்கு முறைதானே? இன்று எத்தனை ஆராய்ச்சி மாணவர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகும் அலுவலகத்தில் அமர்த்தி வைக்கப்படுகிறார்கள். குறிப்பாக அறிவியல் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 6 - 7 மணிக்கும் ஆராய்ச்சிக் கூடத்தை திறந்து வைத்து ஆய்வு செய்யுங்கள் என்று சொல்லும் அயோக்கியத்தனம் எத்தனை பல்கலைக்கழகங்களில் நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா? ஆராய்ச்சி மாணவர்களின் நேரம் 24/7 என்கிற அடிப்படை காரணத்தை வைத்துக்கொண்டு இவர்களுக்காக வேலை பார்ப்பது என்னவிதமான மனநிலையாக இருக்கும்?
நிர்வாகமும், அரசும், ஒரு சிசி டிவி கேமராவை முறைப்படுத்த முடியவில்லை, கதவுகளை ஒழுங்குபடுத்த முடியவில்லை. கல்லூரி வாசல்களில் கூட கொலை நடக்கிறது. ஒன்றும் கேட்கமுடியவில்லை. ஆளுநர் ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கல்வி நிலையங்களில் என்ன ஆய்வு செய்தார் என்று தெரியவில்லை.இது போன்ற பிரச்சனைகளில் உயர் அதிகாரிகள் பெயர் அடிபடும்போது அதை பூதாகரமாக மாற்றுகிற அரசியல் விளையாட்டு இங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அமைதியாக இருப்பது என்பது, காவிரி பிரச்சனையில் இருந்து இந்த சம்பவத்திற்கு மக்களை திசைதிருப்பும் முயற்சியாக நான் பார்க்கிறேன்.அந்த ஆடியோவில் ஆளுநர் பெயருக்கு பதிலாக அமைச்சர்கள் பெயர்கள் வந்திருந்தால் இந்த பிரச்சனையை இந்த அளவிற்கு விட்டு இருப்பார்களா என்பது பெரிய கேள்விதான்” என்கிறார். l
- ஜெ.சதீஷ்
|