குடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு?
வாசகர் பகுதி
உண்மைச் சம்பவம்
2009-ம் ஆண்டு மே 17-ம் தேதி விநாயகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாலதி, தன் வீட்டுப் பசுவுக்கு, புல் சாப்பிடத் தர, எடுத்து வர வயல்வெளிக்குச் சென்றார். ஒரு மணி நேரமாகியும் திரும்பவில்லை மாலதி! புல்லை வெட்டி எடுத்து வரவா இவ்வளவு நேரம்? என்று கவலைப்பட்ட அவர் கணவன் சம்பத், அக்கம் பக்கத்தாரை கூட்டிக் கொண்டு மாலதி சென்ற இடத்திற்கு செல்கிறார்.
அங்கு மாலதி, விழுந்து கிடக்கிறாள். அவள் கைகள், மின்சார ஒயரை பிடித்திருந்தன!திகைத்த சம்பத் உடனே, வாதனூர் மின் ஆபீஸ்/ஜூனியர் எஞ்ஜினியரை சென்று பார்த்து, உடனே மின்சாரத்தை அணைக்கச் சொன்னார். அவர்களும் உடனே மின்சாரத்தை நிறுத்தினர். திரும்ப வந்து மாலதியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சம்பத் ஓடினார்.மாலதி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனையில் கூறி விட்டனர். இறந்த பின் உடலை பரிசோதித்து ஒப்படைத்த போது, ஆஸ்பத்திரி ‘மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக’ அறிக்கை கொடுத்தது.
விநாயகம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மின்சாரம் தாக்கி மாலதி இறந்தார் என வழக்கு முடிக்கப்பட்டது.சம்பத், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனைவி இறந்ததற்கு நிவாரணமாக புதுச்சேரி மின் நிலையம் தனக்கு, 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என வழக்கு தொடுத்தார்.புதுச்சேரி மின் நிலைய சூப்ரண்டென்ட் எஞ்ஜினியர் - 1, அதற்கு பதில் மனு தாக்கல் செய்தார். அதில் மாலதி மின்சாரம் தாக்கி இறந்தது உண்மை என ஒப்புக் கொண்டிருந்தார்.
இதனை ஏற்ற கோர்ட், இறந்த மாலதிக்கு மாத வருமானம் 3000 ரூபாய் என கணக்கிட்டு மற்ற ஈடுகளையும் சேர்த்து 4 லட்ச ரூபாய் புதுச்சேரி மின் நிலையம் வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறியது.மாலதியின் கணவர் சம்பத், ‘நிவாரணம் போதாது, 5 லட்ச ரூபாய் தர வேண்டும்’ என மெட்ராஸ் மேல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த தடவை புதுச்சேரி மின் நிலையம், ‘மாலதி மின்சாரம் தாக்கி இறந்தது உண்மை. ஆனால் அதற்கு எங்கள் பொறுப்பின்மையே காரணம் என்பதை ஏற்க இயலாது. ஆக நாங்கள் எதுவும் தரத் தேவையில்லை’ என வாதிட்டது.
இந்த வழக்கு ஜஸ்டிஸ் கே.கே.சசிதரன் மற்றும் எம்.வி.முரளிதரன் அவர்கள் முன்னிலையில் வாதிடப்பட்டது.தீர்ப்பாக ‘ஏற்கனவே கீழ் கோர்ட் கொடுக்கச் சொன்ன தொகையை புதுச்சேரி மின் நிலையம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டதுடன், ‘‘இறந்த மாலதிக்கு மாதம் சம்பளமாக 3000 ரூபாய் நிர்ணயிக் கப்பட்டு நிவாரணம் வழங்கியதை நியாயமாக எடுத்துக் கொள்ள இயலாது எனக் கூறி அதற்கு அவர்கள் கூறிய காரணம், இறந்து போன மாலதி குடும்பத் தலைவி, இரு குழந்தைகளுக்கு தாயார், கணவருக்கு மனைவி, அது மட்டுமல்ல அவருடைய வேலை, அலுவலகம் மாதிரி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்து விடுவதில்லை.
இரவு-பகல் என எந்நேரமும் அவருடைய உதவி தேவைப்படும். மேலும் குழந்தைகளுக்கு ஒரு தாய் காட்டும் அன்பும், கவனிப்பும் இனி அவற்றிற்கு கிடைக்காது. ஒரு மனைவியாக அவர் இல்லாதது கணவருக்கு பெரிய நஷ்டம். உண்மையில் குடும்பத்தை நிர்வகிப்பவரே அவர்தான். ஆக அவருடைய இழப்பு சாதாரணமானது அல்ல. மேலும் அவருக்கு பதிலாக அவருடைய அம்மா வந்து குழந்தைகளை பராமரிப்பார். சமையல்களை செய்வார் என்பதையெல்லாம் சமமாக ஏற்க இயலாது. ஆக அவருக்கு நிவாரணமாக தர அரசு ஒப்புக் கொண்ட தொகையை வழங்க தீர்ப்பு கூறுகிறேன்’’ என முடித்தனர்.ஒரு குடும்பத்தலைவி, தாய், மனைவி அந்தஸ்து பணத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்படுவது சரியல்ல என்பது உண்மை தானே?
- ராஜிராதா, பெங்களூரு.
(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)
|