கர்ப்பப்பை பத்திரம்
பெண்களுக்கு மட்டுமேயான உடல் நலப் பிரச்னைகளில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் முதன்மையானவை. 50 வயதைக் கடந்த பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்னை கர்ப்பப்பைக் கட்டி. இந்தக் கட்டிகள் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி மகப்பேறு மருத்துவர் மனுலக்ஷ்மியிடம் கேட்ட போது...‘‘கர்ப்பபைக் கட்டி (Fybroids) மரபு வழியாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மரபு காரணங்கள் இல்லாமலும் சிலருக்கு ஏற்படும். இந்தக் கட்டி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிய முடியாது. வருமுன் காக்கவும் முடியாது என்பதால் கட்டி உருவான பிற்பாடே இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டி வரும். கட்டி எங்கே, எத்தனை, எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதற்கான அறிகுறிகள் தெரிய வரும். சிறிய கட்டிகளும், கர்ப்பப்பைக்கு வெளிப்பகுதியில் உண்டான கட்டிகளும் எவ்விதப் பிரச்னைகளையும் ஏற்படுத்தாது. கர்ப்பப்பையில் பெரிதாக வளரும் கட்டிகள்தான் பிரச்னை.
இக்கட்டிகள் உருவான பிறகு அதன் காரணமாக மாதவிடாய் நாட்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். கரு உருவாவதில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கட்டி வளர்ந்ததும் அருகில் இருக்கும் உறுப்புகளுக்கு இடையூறு செய்யும். இதனால் முதுகு வலி, அடிவயிறு வலி, சிறுநீரகத்தை அழுத்தும்போது அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறு நீர் கழிக்க சிரமப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும்போது இக்கட்டிகள் இருப்பதை கண்டறியலாம். வேறு ஏதாவது பிரச்னைக்காக ஸ்கேன் செய்யும்போது கூட இக்கட்டிகள் இருப்பதைக் கண்டறிய முடியும். இக்கட்டியின் அளவைப் பொறுத்து இதன் விளைவுகள் இருக்கும். பெரிய கட்டியாக இருந்தால் அதன் காரணமாக பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுமே தவிர உயிருக்கு ஒன்றும் ஆபத்து இருக்காது.
இக்கட்டி கர்ப்பப்பையின் சதைகளில் வளரும். 50 வயதுக்கு மேல் உள்ள 40-50 சதவிகிதம் பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படுகிறது. இளம்பெண்கள் பெருமளவில் இப்பிரச்னைக்கு ஆளாவதில்லை. கர்ப்பப்பையில் கட்டி இருப்பதைக் கண்டறிந்த உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. அக்கட்டிகளால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும்போதுதான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி மூலம் தற்காலிகத் தீர்வைத் தர முடியும். அவை கட்டியின் அளவைக் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். மருந்து மாத்திரைகளை நிறுத்தினால் அது மீண்டும் வளர்ந்து விடும். அறுவை சிகிச்சை மூலம் கட்டிகளை அகற்றுவது மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வு.
அறுவை சிகிச்சை மற்றும் கீ ஹோல் லேப்ரோஸ்கோபி மூலம் இக்கட்டியை அகற்ற முடியும். நிறைய கட்டிகள் இருக்கும்போது கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும். 5 செ.மீக்கும் அதிக அளவில் கட்டி வளர்ந்தாலே பக்கத்தில் உள்ள உறுப்புகளில் அழுத்தி வலி ஏற்படுத்தும். அறுவை சிகிச்சையைக் காட்டிலும் கீ ஹோல் லேப்ரோஸ்கோபி மூலம் இதனை அகற்றுவது சுலபமானது. இதன் மூலம் கட்டியை மட்டுமல்லாமல் கர்ப்பப்பையைக் கூட வலி இல்லாமல் எளிதாக அகற்றலாம். சிகிச்சை முடிந்த அடுத்த நாளே நோயாளியை வீட்டுக்கு அனுப்பி விடலாம்’’ என்கிறார் மனுலக்ஷ்மி.
- கி.ச.திலீபன்
|