வின்னி மண்டேலா அபூர்வ பெண்மணி



வாசகர் பகுதி

அண்மையில் மறைந்தார் வின்னி மண்டேலா. கருப்பின மக்களின் உரிமைக்காக 27 ஆண்டுகள் சிறையில் கழித்து பின்  தென்னாப்பிரிக்காவின் அதிபரான நெல்சன் மண்டேலாவின் இணையர் வின்னி மண்டேலா.

1936-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி பிறந்தார். 22 வயதில் நெல்சன் மண்டேலாவை சந்தித்தார். அப்போது நெல்சன்  மண்டேலாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. இருவரும் விரும்பி 1958-ல் நெல்சன் மண்டேலாவை வின்னி  திருமணம் செய்து கொண்டார்.

1963-ல் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்த ஜோடிக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன.

1958-ல் ஜெமானி என்ற மூத்தவள் பிறந்தாள். 1960-ல் ஷின்ட் ஷிவா என்ற இளையவள் பிறந்தாள்.நெல்சன் மண்டேலா  கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதும், வெள்ளை அரசு வின்னி மண்டேலாவை படாதபாடு படுத்த ஆரம்பித்தது. 36  வயதுக்குள் பல முறை சிறைக்கு அனுப்பப்பட்டார். ஒரு முறை 491 நாள் சிறையில் அடைபட்டார். அங்கு அவருக்கு  கொடுக்கப்பட்ட எண் 1323/69. இங்கு அனுபவித்த சிறைவாசம் பற்றி இப்படி எழுதுகிறார்...

‘‘இந்த தண்டனையின்போது என் அறை மிகவும் சிறியது. கை கால்களை நீட்டினால் பக்கவாட்டு, மேற்சுவர்கள்  இடிக்கும். யாரையும் சந்திக்கவிடாமல் தனிமைப்படுத்தப்பட்டேன். இது உயிருடன் என்னை கொல்வதற்கு சமம்! மூச்சு  விட்டதால் நான் உயிருடன் இருந்தேன். ஆனால் என் மதிப்பு, மரியாதையெல்லாம் போனது. எனக்கு தெரியாத வலியே
இல்லை. அந்த அளவுக்கு என்னை வெள்ளை அரசு பாடாய் படுத்தியது."
 
இது மட்டுமா? 13 வருடங்கள் பிரன்ட்போர்ட் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு இருந்த வீட்டில் தண்ணீர்,  மின்சாரம் கிடையாது. வெள்ளை அரசுக்கு பயந்து அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வர மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள்.  ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப குத்தினால் என்ன ஆகும்? குத்தின இடம் மரத்துப் போகும்! நரம்புகளும் கூட, மரித்துப்  போகும்!’’அது மட்டுமல்ல 14 வயது இளைஞன் ஒருவன் கொலைக்கும், மற்றொரு நபர் கொலைக்கும், வின்னி  மண்டேலாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டார்.

1990-ல் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வந்ததும் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். 1992ல் பிரிந்து, 1996ல்  விவாகரத்து பெற்றனர்.

1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் வின்னி.இறக்கும்  வரைகூட  நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தொடர்ந்தார்.

1994-96ம் ஆண்டுகளுக்கு இடையே கருப்பர் ஆட்சியில், இணை அமைச்சராக இருந்தார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டில்  பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பெண்கள் அணிக்கு தலைவியாக இருந்தார். நெல்சன் மண்டேலாவின்  இறுதி காலத்தில் சிறிது காலம் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். ஒடுக்கப்பட்ட பெண்மணியாக வாழ்ந்த வின்னிமண்டேலா  நிச்சயம் ஒரு வித்தியாசமான பெண்மணி தான்!

- வைஷ்ணவி, பெங்களூர்.