குரல்கள் - திருமணத்துக்குப் பிறகு சுதந்திரத்தை இழக்கிறீர்களா?



தமயந்தி, எழுத்தாளர்

திருமணத்துக்குப் பின் ஆண் - பெண் இருவருமே தங்களது சுதந்திரத்தை இழக்கிறார்கள். அதன் சதவிகிதம் மட்டுமே  ஒருவருக்கொருவர் வேறுபடும். சுதந்திரம் என்பது அவரவர் முகத்தை அணிந்து வாழ்வது. திருமணம் ஆனவர்கள் அதை  அணிந்து பார்த்ததில்லை. இங்கு நடப்பது திருமணமல்ல. ஓர் ஒப்பந்தம்தான். இந்த ஒப்பந்தத்துக்குள்தான் வரதட்சணை,  சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் வருகின்றன‌.

திருமணம் என்கிற உறவின் அமைப்பையே மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். இன்றைக்கு இருக்கும் திருமண  சட்டங்கள் நவீன வாழ்க்கைக்கு தீர்வு சொல்வதாக இல்லை. இன்றைக்கு விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதாகச்  சொல்கிறார்கள். இந்தத் திருமண முறையின் தோல்வி இது. தோல்வியை ஒத்துக் கொண்டால்தான் ஆரோக்கியமான  மாற்றத்தை நோக்கி நகர முடியும். திருமணத்தைப் பொறுத்த வரையிலும் புரிதல்தான் வெற்றி. அந்தப் புரிதல் இந்தச்  சமூகத்துக்கே இல்லை. அரசுக்கும் இல்லை. ஆட்டுக் கூட்டத்தைப் போல எவரோ ஒருவர் வகுத்து வைத்திருக்கும்  முறைகளுக்குப் பின்னால் கண்மூடித்தனமாக போய்க்கொண்டிருக்கிறோம்.

இதில் திருமண உறவு எந்த நிலையில் இருக்கும்? ஒன்றாக வாழ்தல் என்பது அழகான விசயம். ஆனால் அது இங்கு  பல சிக்கல்களுக்கு மத்தியில் இருக்கிறது. மாற்றம் என்பது ஆண் - பெண் இருதரப்பினரிடமிருந்து ஏற்பட வேண்டியது.  மனைவியின் நடத்தையை சந்தேகப்படும் கணவன் மட்டுமல்ல கணவனைச் சந்தேகப்படும் மனைவிகளும் இங்கு  அதிகம். இரு தரப்பிலும் இப்படித்தான் இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் தங்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ  அதை தங்கள் இணையிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய தம்பதியரே புரிதல்மிக்கவர்கள். அப்படிப்பட்ட  தம்பதியரை நான் பார்க்க விரும்புகிறேன். உறவுக்குள் சரியான புரிதல் ஏற்படும்போதுதான் சுதந்திரமும் சாத்தியப்படும்.

ஜா.தீபா, திரைத்துறை

திருமணத்துக்குப் பிறகான சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடன் கூடியது. அந்த உறவுக்கான பொறுப்பு ஆண் - பெண்  இருவருக்கும் இருக்கிறது. திருமணத்துக்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து வேறுபட்டு இதற்கான பொறுப்புகளை  ஏற்க வேண்டி வருவதைத்தான் சுதந்திரத்தை இழப்பதாகக் கருதுகிறார்கள். போன தலைமுறைப் பெண்கள்  திருமணத்துக்குப் பிறகு தங்களது சுதந்திரத்தை இழந்தார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியும். கணவனது குல  தெய்வமே இவர்களது குல தெய்வம். உணவில் கூட கணவரின் உணவுப்பழக்கத்தின்படிதான் சாப்பிட நேர்ந்தது.  இன்றைக்கு அச்சூழல் மாறி வருகிறது.

திருமணத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி. நம் சுதந்திரம் என்பது நாம் தீர்மானிப்பதாக இல்லை. ஆண் - பெண்  இருவருக்குமே இது பொருந்தும். திருமண உறவு என்பது ஒரு பொறுப்பு அதை நாம் ஏற்கும்போது பலவற்றை விட்டுக்  கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. நமக்குக் கிடைக்கும் வாழ்க்கைத் துணையைப் பொறுத்து நமது சுதந்திரம்  முடிவு செய்யப்படும். தனிப்பட்ட முறையில் நான் என்னவாக இருக்க வேண்டும் என நினைத்தேனோ அதன்படியே  இருக்கும்படியான வாழ்க்கைத் துணையை நான் தேர்ந்தெடுத்தேன். எல்லோருக்கும் இது சாத்தியமா என்பது  தெரியவில்லை.

சாருமதி, அங்கன்வாடி பணியாளர்

திருமணத்துக்கு முன்னால் வீட்டில் இருந்த வரைக்கும் கிடைக்காத சுதந்திரம் திருமணத்துக்கு அப்புறம்  கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்  பயம்தான் என் பெற்றோருக்கும். என்னை சுதந்திரமாக‌ எங்கேயும் அனுப்பாமல் குறுகிய‌ வட்டத்துக்குள்ளேயே  வைத்துவிட்டார் கள். ஆனால் திருமணத்துக்குப் பின் நான் நினைத்த இடங்களுக்கு என்னால் போக முடிகிற‌து.

சுதந்திரம் இருக்கிறதுதான். ஆனால் அது நிபந்தனைகளுக்குட்பட்டதாக இருக்கிறது. வேலை விஷயமாக‌ வெளியில்  கிளம்பினால் ஒவ்வொரு நடவடிக்கையையும் சொல்லிக்கொண்டே இருக்க‌வேண்டியதாக‌ இருக்கிறது. சமைப்பதில் கூட  நாம் புதிதாக ஏதாவது செய்து பார்க்கலாமென்றால் அது முடியாது. வீட்டில் இருப்பவர்கள் என்ன கேட்கிறார்களோ  அதைத்தான் சமைக்க முடியும். பல சூழல்களில் நம்சுதந்திரம் மறுக்கப்படுகிறதுதான். ஆனால் சுதந்திரமே இல்லை என  சொல்ல முடியாது.

குசம்மா, பல் மருத்துவர்

திருமணத்துக்குப் பிறகான சுதந்திரம் என்பது பொறுப்புணர்வோடு கலந்தது. திருமணத்துக்கு முன் நமது சொந்த  விருப்பங்கள்படி நடப்பதற்கு சுதந்திரம் இருந்தது. திருமணத்துக்குப் பின் குடும்பத்துக்கான முடிவுகளை எடுப்
பதற்கான சுதந்திரம் இருக்கிறது. வேறு வடிவில் சுதந்திரம் மாற்றம் கண்டிருக்கிறதோ தவிர சுதந்திரம் இல்லாமல்  போய் விடவில்லை.

சுகிதா, நாடகக் கலைஞர்

சுதந்திரத்தை இழக்கிறேன்னு சொல்ல முடியாது. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் புரிஞ்சு கிட்டு பொருந்திப் போறோம்னு  சொல்லலாம். நானும் என் கணவரும் ஒரே துறையில்தான் இருக்கோம். நாடகத்துறை பத்தின புரிதல் எங்க ரெண்டு  பேருக்கும் இருக்கு. காலைல போய்ட்டு சாயங்காலம் வர்ற வேலை கிடையாது இது. வருசத்துல எல்லா நாளும்  நாடகம் இருக்காது. சில நேரங்கள்ல ரெண்டு மூனு மாசம் கூட வேலை இல்லாம இருப்போம். இது மாதிரி தனிப்பட்ட  விருப்பங்கள், வேலை சார்ந்து புரிஞ்சுக்கிட்ட ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கும்போது நம்ம சுதந்திரம்  பாதிப்புக்குள்ளாகாது.

கிருஷ்ணப்ரியா, அரசு ஊழியர்

திருமணம் ஒரு பெண்ணை மனைவி, மருமகள், தாய் போன்ற புதிய கூண்டுகளுக்குள் அடைக்கிறது. கூண்டுகளில்  அடைபடும்போது சுதந்திரம் பறிபோவது அல்லது குறைவது இயல்பாகவே நடந்துவிடுகிறது. கூண்டின் கதவுகள்  சிலருக்கு திறந்தும், சிலருக்கு அவ்வப்போது திறந்தும், பலருக்கு எப்போதும் மூடியுமிருக்கும். இந்த அளவில் பெண்ணின்  சுதந்திரத்தை புரிந்து கொள்ளலாம். எப்படியும், சுதந்திரமாய் பறத்தல் சாத்தியமற்றுத்தான் போகிறது.

- கி.ச.திலீபன்