கோடையின் தாக்கத்தை சமாளிக்க...



வாசகர் பகுதி

* வெயிலில் போய் வந்து முகம் சிவந்து போய் விட்டதா? புள்ளி புள்ளியாய் வியர்க்குரு வந்து விட்டதா?  வெள்ளரிக்காயை அரைத்துப் பாலில் கலந்து கொள்ளுங்கள். முகத்தில் பூசி அரை மணி நேரம் விட்டு வைக்கவும்.  கழுத்தின் பின்புறம் கூடத் தடவ வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

* வெளியே கிளம்பும்போது அரைநெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். நாக்கு உலர்ந்து  போகாமல் இருக்கும்.

*  தாகத்துடன் வீட்டுக்கு வருபவர்களுக்கு சூடான பானத்திற்குப் பதில் வடித்த கஞ்சியினை ஆறவைத்து மோர் விட்டு  கரைத்து அதில் வெங்காயம் வதக்கியோ, பச்சையாகவோ அரிந்து போட்டு தாளித்துக் கொடுத்தால் உடலுக்கு நல்லது,  சத்தானது.

* கோடை வறட்சியின் போது உடல்நீர் வியர்வை மூலம் வெளியேறுவதால் வழக்கத்தை விட அதிக அளவு உப்பு  சேர்க்க வேண்டும். எலுமிச்சைச்சாற்றில் அல்லது மோரில் உப்பு சேர்த்து அருந்தலாம்.

*  முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய் வகைகள் கோடை காலத்திற்கு  உடலுக்கு ஏற்றவை. இவைகளைச் சமைத்தோ, சாலட்டாகவோ உணவில் சேர்க்கலாம்.

*  பழ ஜூஸ்களுக்கு  ஐஸ்  கட்டிகள் தயாரிக்கும்போது அந்த நீரில் ஒரு எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து ஒரு சிட்டிகை  உப்பு கலந்து ஐஸ் டிரேயில் ஊற்றித் தயாரிக்க வேண்டும். ஜூஸில் போடும் போது அதன் சுவையே அலாதி தான்.

* கோடைக்கால பானங்களில் மோர் மிக மிக சிறப்பானது. மோரில் பானைத் தண்ணீரை நிறைய விட்டு உப்புப் போட்டு  சிறிது கடுகு, துளி பெருங்காயம், சிறிது வறுத்துப் பொடியாக்கிய மோர்மிளகாய் போட்டுக் கலக்கி சிறிது வெள்ளரிக்காய்  துருவல் கலந்து சாப்பிட நீர் மோர் சூப்பராக இருக்கும்.

* கோடையில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். ஒரு கிளாஸ் மோரில் எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாப்பிடலாம். மோரில்  இளநீர் கலந்து சாப்பிட்டாலும் குணமாகும்.

*  இளநீரில் பனம் நுங்குகளை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக்கி  போட்டு கலந்து குடித்தால்  உடம்பே ஜில்லாகி  விடும்.

*  நன்னாரி வேர்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பானை நீரில் அதனைப் போட்டு குறைந்தது ஆறு மணி நேரம்  நன்கு ஊறிய பிறகு குடித்தால் கோடை வெப்பத்தின் தாக்கம் தெரியாது.

* இரண்டு தக்காளிப் பழங்களை மிக்சியில் விழுதாக அரைத்து நீர் மோரில் கலந்து ஒரு சிட்டிகை டேபிள்சால்ட், 1/4  டீஸ்பூன் பெருங்காயத்தூள், கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை போட்டு இரண்டு கப் குடித்தால் கோடையில்  ஏற்படும் களைப்பும் சோர்வும் பறந்து போகும்.

* வெயில் காலத்தில் அதிக காரம், மசாலா இல்லாமலும் அசைவ உணவுகளை குறைத்தும் சாப்பிடுவது நல்லது. அதிக  அளவில் கீரைகள், வெள்ளரிக்காய், தக்காளி, வாழைத்தண்டு, வெங்காயம் முதலியவை சேர்த்தால் உடலின் வெப்பம்  குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்

*  வெளியில் போகும்போது வெயிலில் கண்களை பாதுகாக்க கூலிங்கிளாஸ் அணிய வேண்டும்.

* ஜன்னல்களிலும், நிலைப் படியிலும் வெட்டிவேர் தட்டியை தொங்க விடுங்கள். வெயில் வருவதற்கு முன் தண்ணீர்  தெளித்து வையுங்கள். ஏசியே வேண்டாம். குளுமைக்கு குளுமை.

*  வீட்டு ஜன்னல்கள், வாசல் திரைச்சீலைகள் கரும்பச்சை, கருநீலம் ஆகிய அடர்த்தியான வண்ணங்களில் இருந்தால்  அறைக்குள் அதிக உஷ்ணம் வராது.

*  வெயில் காலத்தில் அதிகமாக தாகம் எடுக்காமல் இருக்க அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்திருக்கும் திராட்சை,  ஆரஞ்சு, சாத்துக்குடி, வெள்ளரிப் பிஞ்சு போன்றவைகளைச் சாப்பிடலாம். உடலுக்கு திட உணவை விட திரவ  உணவுகளின் தேவை ஏற்படுவது கோடையில்தான். எனவே பழச்சாறுகள், குளிர்ந்த நீர்மோர், இளநீர், தண்ணீர் சத்து  மிகுந்துள்ள தர்பூசணிப் பழம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

*  வெயிலில் போகும்போது தலைக்குத் தொப்பி அல்லது ஸ்கார்ஃப் அணிந்து செல்லுங்கள் அல்லது குடை எடுத்துச்  செல்லவும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.