ஆர்கெஸ்ட்ராவிலிருந்து மக்கள் இசைக்கு...
மேட்டூர் வசந்தியின் பயணம்
“ ‘ஊரடங்கும் சாமத்துல நான் ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன். ஊர் கோடி ஓரத்துல உன் நெனப்புல படுத்திருந்தேன்...’ என்கிற பாடல்தான் நான் முதன் முதலில் முற்போக்கு மேடையில் பாடிய பாடல்’’ என்று மெல்லியகுரலில் பேசுகிறார் சேலம் மேட்டூரைச் சேர்ந்த மக்கள் இசை பாடகர் வசந்தி. சமூகக் கருத்துகளை இசை ஊடாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் நீண்டகாலமாக பயணித்து வருபவரிடம் அவருடைய இசைப் பயணம் குறித்து பேசினேன்.
“நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே கேள்வி ஞானத்தின் வழியே பாடல்கள் பாடி வருகிறேன். பள்ளியில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடுவேன். என்னுடைய திருமணத்திற்கு பிறகுதான் மக்கள் இசை பாடல்களும், கிராமிய பாடல்களும் பாடத்துவங்கினேன்.
என்னுடைய திருமணம் காதல் திருமணம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டைவிட்டு வெளியேறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம். இதனால் ஊரில் அப்போது நிலைமை சரி இல்லாததால் ஒரு வருடம் அறிவொளி இயக்கத்துடன் ஒவ்வொரு ஊராக சுற்றி வந்தோம். நிலைமை சரியான பிறகு ஊருக்கு குடியேறினோம். அவர் ஒரு மெல்லிசைக்குழுவில் ஆர்மோனியம் கற்றுக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த மெல்லிசைக்குழுவிற்கு என்னை அறிமுகப்படுத்தினார்.
 அந்த இசைக்குழுவில் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்கள் பாடி வந்தேன். அப்படிதான் என்னுடைய இசைப்பயணம் தொடங்கியது. என்னை இசை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது என்னுடைய கணவர் காவேரி துரைதான். திருமணத்திற்கு பிறகு அறிவொளி இயக்கத்தின் மூலம் மக்கள் இசை பாடல்கள் எனக்கு பிடித்தது. அறிவொளி கலைப்பயணம் மூலம் ஓர் ஆண்டு தொடர்ச்சியாக பல மாவட்டங்களுக்கு சென்றிருந்தேன். அப்போது கிராமியப் பாடல்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின்பும் மெல்லிசைக்குழுவில் 10 ஆண்டுகள்பாடிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் சினிமா பாடல்கள் பாடுவது
எனக்கு சங்கடத்தை உருவாக்கியது. அதனால் மெல்லிசைக்குழுவில் இருந்து விலகி முற்போக்கு மேடைகளில் சமூகத்திற்குத் தேவையான பாடல்கள், பெண்ணுரிமை குறித்த பாடல்கள் என பாடத்தொடங்கினேன். அதன் பிறகு நாட்டுப்புற பாடல்களை பாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சேலம் பகுதியில் எல்லாம் நாட்டுப்புற பாடல்களே கிடையாது. நாட்டுப்புறக் கலையை மக்கள் மத்தியில் புதுப்பிக்க வேண்டும் என்று எண்ணினேன். தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்கு பாடப்படும் ஒப்பாரி பாடல்கள், வயல்களில் களைப்பு தெரியாமல் இருக்க விவசாயிகள் பாடும் பாடல்கள் என சேகரித்து அவற்றை தொகுத்து மேடைகள் மூலமாக மக்களுக்கு கொடுத்து வருகிறோம்.
முடிந்தவரை உங்கள் வீட்டு விழாக்களில் நாட்டுப் புற பாடல்களை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறோம். நாட்டுப்புறப் பாடல்களை எழுதி வையுங்கள் என்று பாரதியார் அன்றே சொல்லியிருந்தார். அதை யாரும் செய்யவில்லை. பல பாடல்கள் அழிந்தே விட்டது. அதைப்போல் கிராமிய இசையை விட்டுவிடக்கூடாது என்று மக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறோம். கிராமிய இசைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
பாடல்கள் மூலமாக முற்போக்கு சிந்தனைகளை கொண்டு செல்ல வேண்டும். பெண் உரிமை, பெரியாரிய கொள்கைகளை மக்களிடம் இந்த கலை மூலம் கொண்டு சேர்க்க வேண்டும். பெண் உரிமை பாடல்கள் பாடும்போது பெண்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைக்கும். “எங்களோட உள்ள கிடக்கையை நீங்க வெளிப்படுத்தியிருக்கீங்க” என்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பெண்கள் என்னிடம் சொல்வார்கள். ஆண்களும் “நல்ல கருத்துகளை பாடல் மூலம் சொல்லியிருக்கீங்க” என அவ்வப்போது சொல்வதுண்டு.
சமீபத்தில் கவிஞர் ஏகாதசி எழுதிய பாடல் ஒன்றை எல்லா மேடைகளிலும் பாடி வருகிறேன். அந்தப் பாடலில் “சமத்துவ கொள்கையில் ஒத்துப்போகிற கணவனோடு நீ கருத்தரி, பிள்ளைகள் பெற மட்டும் பெண் என்றால் கர்ப்பப்பையை அறுத்தெரி” என்கிற வரியை கேட்கும் போதெல்லாம் நிறைய பேர் பாராட்டுவார்கள். முற்போக்கான பாடல்களை பாடும் இடங்களில் இதுவரை எந்தப் பிரச்சனையையும் நான் சந்தித்தது இல்லை. ஆனால் மாற்றாக பெண் உரிமைப் பாடல்களை மேடையில் பாடும்போது ஆண்கள் சிலருக்கு கோபம் வருவதை பார்த்திருக்கிறேன். “என்ன இப்படி பாடுறீங்க? வீட்ல வந்து பாருங்க நாங்க எப்படி அடி வாங்குறோம்னு” என்னிடம் பேசியிருக்காங்க. மக்கள் இசை பாடல்கள் பாடுவதற்கு பெண்கள் பெரும்பாலும் முன்வருவதில்லை.
இசை என்பது வருமானத்திற்கானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் இசை பாடல்கள் அப்படியானது இல்லை, அதனால் வருமானம் ஈட்ட முடியாது என்று பெண்கள் மக்கள் இசை பாடல்களை பாட வருவதில்லை. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாட்டுப்புறப் பாடல்களில் அழகான வரிகள் உள்ளன, அர்த்தமுள்ள வரிகள் இந்தப் பாடல்களில் உள்ளன என்று பிரச்சாரம் செய்கிறோம். இன்னொரு புறம் சிலர் இது காசுக்கான வேலை என்று நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய குடும்பச் சூழல் என்றும் எடுத்துக்கொள்ளலாம். எங்களைப்போன்ற மக்கள் இசை பாடகர்கள் சொல்வதெல்லாம் கொச்சைப்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் நல்ல கருத்துக்களை கிராமிய இசை வாயிலாக கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்பதுதான்” என்கிறார் வசந்தி.
- ஜெ. சதீஷ்
|