நடிக்கத் தொடங்கிய பின் உலகம் பெரிசாயிடுச்சு !
அரங்கக் கலைஞர் சௌம்யா
திருநங்கைகள் தங்களின் அங்கீகாரத்துக்காகக் குரல் எழுப்பி வரும் காலம் இது. தங்களை இச்சமூகத்தின் அங்கமாக நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்துறை, ஆட்சிப்பணிகள், கலைத்துறை என அவர்களின் பங்களிப்பு நீண்டு கொண்டே செல்கிறது. சௌம்யாவின் பங்களிப்பும் அவ்வகையே. நாடகக் கலைஞரான சௌம்யாவிடம் பேசினேன்...
‘‘நான் பிறந்தது கேரளாவா இருந்தாலும், வளர்ந்ததெல்லாம் சென்னை தான். ஆரம்பத்துல ஓட்டேரியில் குடியிருந்தோம். அப்புறம் குன்றத்தூருக்குக் குடி போய்ட்டோம். எனக்குள்ளான பெண் தன்மை என்னுடைய சின்ன வயசுல இருந்தே வெளிப்பட்டுச்சு. பள்ளிக்கூடத்துல நான் பொண்ணுக கிட்ட மட்டும்தான் பேசுவேன். அவங்ககூடவே சுத்திக்கிட்டிருப்பேன். பசங்ககிட்ட பேசவே மாட்டேன். ஏன்னா அவங்க என்னுடைய பேச்சு, பாவனையை கேலி பண்ணுவாங்க. இவன் என்ன பொண்ணுககிட்டயே பேசிக்கிட்டிருக்கான்னும் பல கேலிகளை சந்திச்சிருக்கேன். ‘‘உன் தம்பியெல்லாம் எப்படியிருக்கான்... நீ மட்டும் ஏண்டா இப்படி இருக்க?’’ன்னு என் அப்பா கூட என்கிட்ட கேட்டிருக்கார். ஆரம்பத்துல எனக்கே புரியலைதான். நாம ஏன் இப்படி இருக்கோம்னு.
ஆனா அதுதான் பிடிச்சிருந்தது. பள்ளிக்கூடத்துல சந்திக்கிற கேலி அப்புறம் குடும்பச் சூழல் காரணமா 9ம் வகுப்போட படிப்பை நிறுத்த வேண்டியதாப் போயிடுச ்சு. அப்பா இறந்ததுக்கப்புறம் நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். திருநங்கையாக நான் எங்க போனாலும் ஒரு வித்தியாசமான பார்வைக்கும், கேலிக்கும் ஆளாகிக்கிட்டேதான் இருந்தேன். அப்போதான் என்னைப் போல ஒரு திருநங்கை பழக்கமானாங்க. நுங்கம்பாக்கத்துல இருக்கிற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க.
 திருநங்கைகளுக்காக வேலை செய்யுற அமைப்பு அது. நம்மள மாதிரியே நிறைய பேர் இருக்காங்களான்னு ஆச்சரியமாய் பார்த்தேன். திருநங்கைகளுக்கான உலகமாக அது இருந்தது. அந்த அமைப்புல கொஞ்ச நாள் வேலை செஞ்சேன். அப்புறம் போரூர்ல இருக்கிற இன்னொரு அமைப்புல சேர்ந்தேன். அங்கதான் எனக்குள்ள நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது.
நாடகக் கலைஞரானது எப்படி?
கட்டியக்காரி நாடகக் குழுவின் இயக்குனர் ஸ்ரீஜித் எனக்குப் பழக்கமானார். ‘கவிதை வாசிப்பு’ நிகழ்வுக்கு முதலில் அழைத்தபோதுதான் மேடையேறினேன். குன்றத்தூரில் மூன்று நாட்கள் அதற்காக நடந்த முகாமில் கலந்துகொண்டேன். பதினைஞ்சு நிமிசம் வர மாதிரியான கவிதை நாடகம் அது. நடிப்பு மேல எனக்கு இருக்கிற ஆர்வத்தை ஸ்ரீஜித் புரிஞ்சிக்கிட்டார். பிச்சை யெடுக்கிறது, பாலியல் தொழில் பண்றதைத் தாண்டி வேற வாழ்க்கையே எங்களுக்கு இல்லையான்னு ஏங்கிக்கிட்டிருந்த நாட்கள்ல ஸ்ரீஜித்துடைய வருகை பெரிய வெளிச்சமா இருந்தது.
‘உனக்கு ஆர்வம் இருக்கு. நடிப்புல தீவிரமா இருக்க’ன்னு சொல்லி என்னை ‘மொளகாப்பொடி’ நாடகத்தில் நடிக்க வெச்சார். நான் நடிச்ச முதல் நாடகம் அதுதான். நாடகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் சுருங்கியிருந்த என் உலகம் இப்ப பெருசா விரிஞ்சிருக்கு. அப்புறம் கட்டியக்காரியில் ‘அவமானம்’, ‘மஞ்சள்’ நாடகங்கள்ல நடிச்சேன். அ.மங்கையின் மரப்பாச்சி நாடகக்குழுவுல இணைஞ்சு ‘சுடலையம்மா’, ‘நாங்க ரெடி’ நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். சமீபத்தில் மேடையேறிய‘ஔவை’ நாடகத்துலயும் நடிச்சிருக்கேன்.
நடிப்புக்கென என்ன மாதிரியான பயிற்சிகள் எடுத்துக்கிட்டீங்க?
நடிப்பைப் பொறுத்த வரை உடம்புல இருக்கிற மொத்த உறுப்புகளும் இயங்கணும். அதனால பல விதமான பயிற்சிகள் கொடுப்பாங்க. ஸ்ரீஜித் எப்பவுமே நாடகத்தை நம்ம வாழ்க்கையோட தொடர்புப்படுத்திக்க சொல்வார். ஒரு காட்சியில் அழணும்னா வெறுமனே நடிப்புக்காக அழுகை வராது. நாம துயரப்பட்ட சம்பவங்களோட அந்தக் காட்சியை தொடர்புப்படுத்திக்கிட்டோம்னா அழுகை வரும். அதே மாதிரி எது கிடைச்சா நாம மகிழ்ச்சியா இருப்பமோ அது கிடைச்சுட்ட மாதிரி நாம் உணர்ந்தோம்னா முகத்துல உண்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும். ஸ்ரீஜித்கிட்ட இருந்து இப்படி பல விசயங்களைக் கத்துக்கிட்டேன். நாடகம்ங்கிறது பெரும் கடல். அதுக்கான பயிற்சி எப்பவுமே தேவைப்பட்டுக்கிட்டே இருக்கும். நாடகத்துக்கு வந்த புதுசுல நான் விளையாட்டுத் தனமாத்தான் இருந்தேன். ஒரு நாடகம் அரங்கேறினப்புறம் அதுக்குக் கிடைக்கிற வரவேற்பு நம்மளோட பொறுப்பை உணர்த்துற மாதிரி இருக்கும். அதுக்கப்புறம் நான் தீவிரமாயிட்டேன்.
‘காலா’ படத்துல நடிச்சிருக்கீங்களாமே?
நாடகம் மூலமாத்தான் ‘காலா’வில் வாய்ப்பு கிடைச்சது. ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடிச்சிருக்கேன். இந்த வாய்ப்பு ஸ்ரீஜித் மற்றும் இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் ஜெனி மூலமாகக் கிடைச்சுது. ஜெனி மரப்பாச்சி நாடகக் குழுவில் இருந்தவங்க. அது மட்டுமில்லாம நான் நடிச்ச மஞ்சள் நாடகத்தை இயக்குனர் இரஞ்சித் தயாரிச்சார். ‘மொளகாப்பொடி’ நாடகத்தையும் பார்த்திருக்கார். ‘காலா’ படத்தில் ‘விழித்தெழு’ங்குற அமைப்பின் உறுப்பினராக நடிச்சிருக்கேன்.
அடுத்தக் கட்டப் பணிகள்?
நாடகப் பணிகள்தான். இப்ப அ.மங்கைஉடைய ‘ஔவை’ நாடக மேடையேற்றம்தான் போய்க்கிட்டிருக்கு. அடுத்தடுத்து நடிப்புத் துறையில் தீவிரமா இயங்கணும்.’’
-கி.ச.திலீபன்
|