நேர்கொண்ட பார்வையை கல்விதான் கொடுக்கும்



- சமூக செயற்பாட்டாளர் ரூத் மனோரமா

எங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறதோ  அங்கெல்லாம் அதற்கெதிரான குரல்  எழ வேண்டும். ரூத் மனோரமாவின் பணியும்  அத்தகையதுதான். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலித் பெண்களின்  உரிமைகள் சார்ந்து செயல்பட்டு வருபவர். இந்திய அரசியல்அமைப்பு வழங்கியிருக்கும் உரிமைகளைப் பற்றி சாமானிய  மக்களிடம் விளக்குவதோடு உரிமை மீறல்களுக்கு எதிராக போராடவும் தூண்டியவர்.

ஜனநாயகமுறையில்  அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்திருக்கிறார். நகரங்களில்  வாழும் ஏழை மக்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளிகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்.   அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவரை சந்தித்தேன்.

சமூக செயற்பாட்டாளராக உங்கள் தொடக்கம் பற்றி...
சென்னைதான் என் சொந்த ஊர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்தான் முதுகலை சமூகப்பணி படித்தேன். என் சிறு  வயதிலிருந்தே அம்பேத்கரியம், பெரியாரியம், பெண்ணியம் போன்றவற்றின் பரிட்சயம் இருந்தது. என் குடும்பப்  பின்புலம்தான் அதற்கான முக்கியக் காரணம். படித்து முடித்ததும் 1977ம் ஆண்டு ‘க்ரெய்ல்’ எனும் அமைப்பில்  ‘கம்யூனிட்டி டெவலெப்மென்ட்’ சார்ந்த வேலைக்கான வாய்ப்பு வந்தது.

வீட்டில் இருந்தால் திருமணம் செய்து வைத்து  விடுவார்கள் என்பதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெங்களூருக்குச் சென்றேன். அன்றைய  காலகட்டத்தில் உலக அளவில் பெண்களுக்கான உலக மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பெண்ணுரிமை சார்ந்த குரல்  உலகெங்கும் பரவலாக எழுந்து வந்தது. அத்தகைய சூழலில் இந்திய மக்களுக்கான பிரச்னைகள் சார்ந்து இயங்க  வேண்டும் என நினைத்தேன்.

பணக்காரப் பெண்கள் மற்றும் படித்த பெண்களை விட படிக்காத ஏழைப் பெண்களே கடும் நெருக்கடிக்கு ஆளாகி  வந்தனர். அவர்கள் மத்தியில் வேலை செய்தேன். தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், குடியாத்தம் ஆகிய பகுதிகளிலிருந்து  பிழைப்பு தேடி பெங்களூருக்கு வந்த தமிழர்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். அவர்களில் தலித் மக்களே  பெரும்பகுதியினர்.

அவர்களுக்கு மருத்துவ வசதிகள், ரேசன் பொருட்கள் போன்ற அடிப்படையான வசதிகள் கூட  கிடைக்கப்பெறாமல் இருந்தது. வீட்டு வேலைகள், கட்டுமானப் பணிகள் என அமைப்புசாரா தொழிலாளிகளாக அவர்கள்  பணி புரிந்து வந்தனர். இதனால் அவர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் அரசு சலுகைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இச்சூழலில்தான் 1981ம் ஆண்டு ‘மகளிர் குரல்’ (Voice of women) என்கிற சங்கத்தை  ஆரம்பித்தேன்.

சமூகப் பிரச்னைகள் வீட்டில் உள்ள பெண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்பதால் அவர்களிடமிருந்து தொடங்க  நினைத்தேன். அமைப்புசாரா பெண் தொழிலாளிகளை ஒருங்கிணைத்தேன். நாம் எதற்காக வேலை செய்ய வேண்டும்?  யார் யாரிடம் நமது உரிமைகளைப் பெற வேண்டும்  என்பது போன்ற அடிப்படையான விசயங்களை விளக்கி ஜனநாயக  முறையில் இச்சங்கத்தைத் தொடங்கினேன். பெண்களுக்கென பல பிரச்னைகள் இருக்கின்றன.

 அவற்றுள் ஏழை தலித்  பெண்கள் என்று வரும்போது அவர்களுக்கு பாலின வேறுபாடு, வர்க்க வேறுபாட்டுடன் சாதிய வேறுபாடும் அது சார்ந்த  ஒடுக்குமுறைகளுக்குள்ளும் ஆளாக நேரிடுகிறது. அவர்களுக்கென தலித் பெண்கள் கூட்டமைப்பைத் தொடங்கினேன்.  பெண்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டும் என்றும், அரசியல் உரிமையைப்  பெற வேண்டும் எனவும் இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பைத் தொடங்கினேன்.

இவற்றின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்கிறது?


‘மகளிர் குரல்’ சங்கம் பெங்களூரில் 135 யூனிட்களாக செயல்பட்டு வருகிறது. 25 ஆயிரம் பெண்கள் இச்சங்கத்தில்  உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எனது வேலை பெண்களை ஒன்றுபடுத்தி சங்கங்களை அமைப்பதோடு அதனை  எடுத்துச் செல்வதற்கான தலைமைத்துவப் பண்பை வளர்க்கும் பயிற்சியையும் அளிப்பதுதான்.

மனித உரிமை,  பெண்ணுரிமை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகள் என சட்ட ரீதியாக, சுகாதார ரீதியாக  வளர்ச்சியடைய அவர்களை பயிற்றுவிக்கும் பணியைத்தான் தொடர்ந்து செய்து வருகிறேன், பயிற்சி அளிப்பதோடு  அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திய போராட்டங்களையும் ஒருங்கிணைக்கிறேன்.

80களில் ஆட்சியில் இருந்த ஜனதா ஆட்சிக்காலத்தில் குடிசைப்பகுதிகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எந்த  ஆட்சியாக இருந்தாலும் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும். குடிசைப்பகுதி மக்களை அப்புறப்படுத்துவது  ஏழை மக்களுக்கு இழைக்கும் அநீதி. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்து குடிசைப்பகுதிகளை அகற்றுவதற்கான தடை  உத்தரவை வாங்கினேன். நகர்ப்புறங்களில் வாழக்கூடிய ஏழைகள், அமைப்புசாரா தொழிலாளிகளுக்கு முறையான கூலி வழங்கப்படாமல் இருந்தது. 

வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 5 ரூபாய், 10 ரூபாய் அளவே சம்பளம் கொடுக்கப்பட்டது. சங்கத்தின் மூலம்  அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடிந்திருக்கிறது. இன்றைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் அதற்கு 13  ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்க வேண்டும் என்று ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. வெறும் எழுத்தளவில்  இல்லாமல் ஒவ்வொரு தொழிலாளியும் நியாயமான ஊதியத்தைக் கேட்டுப் பெற வேண்டும் என்கிற போராட்ட  உணர்வையும் அவர்களுக்குள் ஏற்படுத்துகிறோம்.

இந்தியப் பெண்களின் நிலை குறித்த ஆய்வறிக்கையை இந்திய அரசு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐநா சபையிடம்  சமர்ப்பிக்கும். அந்த ஆய்வறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்காது. இந்தியப் பெண்களின் முக்கியப் பிரச்னைகள்  அதில் குறிப்பிடப்பட்டிருக்காது. எனவே இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் சார்பாக இந்திய அரசு அளிக்கும்  ஆய்வறிக்கைக்கு மாற்றாக உண்மை நிலையை விளக்கும் ஆய்வறிக்கையை ஐநா சபையின் CERA கமிட்டியிடம்  சமர்ப்பிக்கிறேன். அதன் மூலமாக குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஒடுக்குமுறையிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் எவை?

ஒடுக்குமுறையிலிருந்து வெளி வர வேண்டுமென்றால் அதற்கு கல்வி மிகவும் அவசியம். பாரதி சொல்வது போல்  நேர்கொண்ட பார்வையை கல்வியின் மூலம்தான் கொடுக்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மிகவும்  முக்கியமானது. கல்விதான் சமத்துவத்தை ஏற்படுத்தும். இன்றைக்கு தலித் மக்களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு  மற்றும் இட ஒதுக்கீட்டின் காரணமாக அரசுப் பணிகள் ஓரளவு கிடைத்திருக்கின்றன.

இந்த மாற்றமே கல்வியால்தான்  சாத்தியப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான்  இருக்கின்றன. இரட்டைக்குவளை முறை இன்றைக்கு முற்றிலுமாக ஒழியவில்லை. சாதியின் ஆதாரத்தின் மேல்தான்  அரசியல், பொருளாதாரம் எல்லாம் கட்டப்பட்டிருக்கிறது. இதை உடைத்து எறிய வேண்டும் என்றால் அம்பேத்கர்  சொல்லும்படி ‘கற்பி ஒன்றுசேர் போராடு’ என்பதே வழி.

உங்கள் முயற்சியில் உருவாக்கப்பட்ட மாற்றுப் பாராளுமன்றத்தின் நோக்கம் என்ன?

பெண்களின் பிரச்னைகளை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து மேற்கொண்ட போராட்டத்தின் வழியாகவே  தேவையான மாற்றங்கள் சாத்தியப்பட்டிருக்கின்றன. பெண்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்  மூலமே வலுவான அரசை உருவாக்க முடியும். இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பு 14 மாநிலங்களில் செயல்பட்டு  வருகிறது. அதன் சார்பாக மாற்றுப் பாராளுமன்றத்தை உருவாக்கினோம்.

இந்தியா முழுவதிலுமுள்ள பல நூறு  பெண்களிலிருந்து 540 பெண்களைத் தேர்வு செய்து சபாநாயகரை நியமித்து மாற்றுப் பாராளுமன்றத்தை 3 நாட்கள் நடத்தினோம். அதில் கலந்து கொண்டவர்கள் பெண்களின் பிரச்னைகள் மட்டுமின்றி  பொதுப் பிரச்னைகள் பற்றியும் பேசினர். பாமரப் பெண்களுக்கு பாராளுமன்றத்தைப் பற்றி என்ன தெரியும் என்று யாரும்  நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே இதனை நடத்தினோம்.

அரசியல் அதிகாரத்தை பெண்கள் கையில் எடுக்க  வேண்டும் என்றால் அவர்களுக்கு அரசியல் சார்ந்த அறிவு அவசியம். சட்டத்தை எப்படி தயாரிப்பது, பிரச்னைகளை  எப்படிப் பேச வேண்டும், பாராளுமன்றம் எப்படி இயங்குகிறது, என்றெல்லாம் இப்பாராளுமன்றத்தின் மூலம் அவர்கள்  கற்றுக் கொண்டார்கள். பெண்களைக் கொண்டு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியே அது.அது மட்டுமல்லாமல் தலித், பழங்குடி, சிறுபான்மையின பெண்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அளிப்பது முக்கியப்  பணி. அவற்றை அளித்ததோடு அவர்களின் தேவைகள் சார்ந்து அரசுடன் உரையாடவும் செய்கிறோம்.

-கி.ச.திலீபன்