கவிதை முதல் வெள்ளித்திரை வரை
- எழுத்தாளர் குட்டி ரேவதி நேர்காணல்
கவிஞர்கள் பலர் உண்டு. ஆனால் சமூக நுண்ணுணர்வோடும் சமூக பொறுப்புணர்வோடும் கவிதைகள் எழுதுவோர் ஒரு சிலரே. அதில் குறிப்பிடத்தகுந்தவர் கவிஞர் குட்டி ரேவதி. பல தடைகளை கடந்து பல சர்ச்சைகளை தாண்டி அறிவுரீதியாகவும், சிந்தனைரீதியாகவும் சாதிய மறுப்பும் ஒழிப்பும்தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் வெளிப்படுத்தி வருபவர். சித்த மருத்துவரான இவர் கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், பாடலாசிரியர் என்ற பல படிகளை தாண்டி தற்போது சினிமாத்துறையில் தடம் பதித்து வருகிறார். அவருடனான உணர்வுபூர்வமான நேர்காணல்…
“சொந்த ஊர் திருச்சியில் உள்ள திருவெறும்பூர். மிகவும் சாதாரண குடும்பம்தான். அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். நான் வீட்டிற்கு மூத்தமகள், எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. ஆனால் பள்ளிக்காலத்தில் இருந்தே என்னிடம் மிதமிஞ்சிய வாசிப்பு இருந்ததற்குக் காரணம் அப்பாதான். எனக்கு வாசிப்பு ஆர்வம் இருந்ததால் அப்பா டவுனுக்குச் செல்லும்போதெல்லாம் பழைய புத்தகக்கடையில் இருந்து புத்தகங்கள் வாங்கி வருவார். அம்மா கொஞ்சம் அதை எதிர்த்தார். ‘படிக்கிற பிள்ளைக்கு இந்த புத்தகங்கள் தேவையா?’ என்பார். ஆனால் அப்பாவுக்கு நான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்பது ஆசை. அவர் ஆசைப்படியே என்னுடைய மிதமிஞ்சிய வாசிப்பு தான் என்னை எழுத வைத்தது. இப்போதும் திருச்சியில் உள்ள எனது வீட்டிற்குப் போனால் ஒரு நூலகமே இருக்கும்.
 எனக்கு சிறுவயதில் பெரிய எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதெல்லாம் கனவாக இருந்தது கிடையாது. இலக்கியவாதியாக வேண்டும் என்கிற திட்டமெல்லாம் இல்லை. ஒரு சிறந்த பெண் சித்த மருத்துவராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். மருத்துவச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. பெண் உடல் என்பது ஒரு புதிர். அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்தது.
அதனால் மருத்துவப் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்தரை ஆண்டுகள் சித்த மருத்துவப் படிப்பு படித்தேன். சித்த மருத்துவத்தின் பிரிவுகளில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். வர்மக்கலையும் படித்தேன்.
திருநெல்வேலியில் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். கல்வியிலும் இலக்கியத்திலும் சிறந்த மாவட்டம் அது. அங்கே இருந்த சமயம் எழுத்தாளர்களை சுலபமாக பார்க்க முடிந்தது. படத்திரையிடல்களும் நடக்கும். ஆர்.ஆர்.சீனிவாசன் நடத்தி வந்த ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ அதனை செய்யும். அங்கெல்லாம் செல்வதுண்டு. அதே சமயம் கவிதைகளும் எழுதிக்கொண்டிருந்தேன்.
வேலைக்காக சென்னை வந்தேன். அப்போது டைரியில் எழுதி வைத்திருந்த எனது கவிதைகளை புத்தகமாகக்கொண்டு வந்தேன். 1999ம் ஆண்டு என் முதல் கவிதைத் தொகுப்பு ‘பூனையை போல அலையும் வெளிச்சம்’ வெளிவந்தது. தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. அதன் பிறகு இரண்டாவது கவிதைத்தொகுப்பாக ‘முலைகள்’ வெளிவந்தது. அது பயங்கர எதிர்ப்பைச் சந்தித்தது. அந்த பெயரை வைக்கும்போது இவ்வளவு சர்ச்சை வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு மருத்துவர். எங்கள் மருத்துவத்தைப் பொறுத்தவரை அது ஒரு மருத்துவக் கலைச்சொல்தான். பதிப்பாளரும் ‘இந்த தலைப்பை நன்கு யோசித்துதானே வைக்கிறீர்கள்?’ என்று மட்டும்தான் கேட்டார்.
பெண்களுடைய உடல் இந்த உலகத்தில் எப்படி நடத்தப்படுகிறது? பெண்ணுடைய உடல் பொது சொத்தாகத்தான் பார்க்கப்படுகிறது. இன்றும் முலைகளும் பிட்டங்களும்காட்சிப் பொருளாகத்தான் இருக்கிறது. எனது அந்த புத்தகம் இந்த அரசியலைத்தான் முன் வைக்கிறது. பெண் உடலைக் கொண்டாட வேண்டிய அவசியத்தை உணர்த்த விரும்பினேன். அதனால் அந்த கவிதைகளை எழுதினேன். அதற்கு அந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நம்பினேன்.ஆனால் வெளிவந்த பிறகு ஆண் எழுத்தாளர்கள் கொதித்தெழுந்தார்கள். இன்று வரை ஜீரணிக்க முடியாத அளவுக்கு மிகக்கடுமையான வார்த்தைகளால் நான் தாக்கப்பட்டேன். நிறைய ஆபாச கடிதங்களும் வரும். அப்போது என் அப்பா இறந்திருந்த சமயம் வேறு என்பதால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். நான்கு ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தன.
பிறகு சர்ச்சையின் காரணங்களை புரிந்து கொள்ள நினைத்தேன். இல்லையென்றால் பின்வாங்கி இருப்பேன். முதல் காரணமாக சாதி இருந்தது. இரண்டாவது குடும்பரீதியான விஷயங்களை மட்டும்தான் அதிலும் அதுவரை உயர் சாதி என்று சொல்லப்படும் சாதிப்பெண்கள் தான் அதிகம் எழுதி வந்தனர். ஆனால் ஆணோ பெண்ணோ, அவர் எந்த சாதியில் பிறந்தவராயினும் அவரால் எழுத முடியும். உங்களின் ஆர்வம், வாசிப்பு, தீவிரம், மன வெளிப்பாடு இவைதான் நீங்கள் எழுத வேண்டியதை தீர்மானிக்கின்றன.
 சர்ச்சைக்கான காரணங்களை அறிந்த பின் தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள், உலக இலக்கியங்கள் என எல்லாவற்றையும் படித்து என்னை இலக்கியத்தில் மேம்படுத்திக்கொண்டேன். பெண்கள் எதை எதை எழுத வரும்போது எல்லாம் அதனை எதிர்கொள்ள முடியாமல் இந்த சமூகம் திணறுகிறது என்று புரிந்து கொண்டேன்.
பெண் எழுத்தாளர்களை சீண்டிக்கொண்டேதான் இருப்பார்கள். திரும்ப பதில் சொன்னால் திரும்பத் திரும்ப சீண்டுவார்கள். அவர்களின் கருத்துக்களுக்கு நாம் எதிர்வினை செய்யக்கூடாது. வாசகத்தளம் என்பது ஆண் எழுத்தாளர்களை விட பெரியது. நாம் எழுத வந்ததன் நோக்கம் நிறைவேறினால் போதும். மற்றவர்களின் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இப்படி பலவிதங்களில் என்னை உரம் போட்டு தயார்படுத்திக்கொண்டேன்.
என்னை நான் வலிமைப்படுத்திக் கொண்டேன். இப்படி இந்த சமுதாயத்தைப் புரிந்து கொண்டதால் நான் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. ஓய்ந்தும் போகவில்லை. இப்போதும் இந்தத் துறையில் வெற்றிகரமாக இயங்குகிறேன். எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
எந்த ஒரு விமர்சனத்தையும் நமக்கு என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டால் நம் வலிமை குறையும். தனக்கான அங்கீகாரத்துக்காக மட்டுமே பெண்கள் போராடினால் ரொம்ப தூரம் ஓட முடியாது. களைப்பாகி விடும். பெண்களிடையே ஒரு ரிலே ரேஸ்போல, ஒரு தீப்பந்தத்தை கை மாற்றுவது மாதிரியான ஓர் ஒருங்கிணைப்பு வேண்டும். அதற்கு எழுத்து ஒரு சிறந்த களம்.‘சண்டைக்கோழி’ பட சர்ச்சை வந்தபோது பெண் இலக்கியவாதிகள் எல்லாரும் எனக்கு உடன் இருந்தார்கள்.எனக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுத்தார்கள்.
இந்த 20 வருடங்களில் எழுத வந்த பெண்கள் எல்லாருமே ஏதேதோ தடைகளை தாண்டித்தான் வந்திருக்கிறார்கள். இது சாதாரண விஷயமில்லை. பெரிய விஷயம். இதுதான் எழுத்தில் பெண்களை பொருத்தமட்டில் ஈடு இணை இல்லா பொற்காலம். சமீப காலமாக பெண்கள் இந்த சமூகத்தை ரெஸ்ட்லெஸ் ஆக்குகிறோம்.ஒரு புத்தகக்கடையில் ஒரு பத்து புத்தகங்கள் இருந்தால் அதில் நான்கோ, ஐந்தோ பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. அந்த அளவுக்கு ஒரு டிமாண்டை பெண் எழுத் தாளர்கள் உருவாக்கி இருக்கிறோம்.
இதுவரை மொத்தம் எனது பதினோரு கவிதைத்தொகுப்புகள் வெளியாகி உள்ளன. லண்டனில் உலக அளவில் சமீபத்திய சிறந்த 50 காதல் கவிதைகளை தேர்ந்தெடுத்தார்கள். அதில் ‘முலைகள்’ புத்தகத்தில் இருந்து கவிதையை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.ஒரு கட்டத்திற்குப்பிறகு ஆழமான கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். ஒருசிறுகதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது. கவிதைத்தொகுப்புகளை மொத்தமாக சேர்த்து ஒரு புத்தகம் உருவாக்குவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. தற்போது ஒரு சிறுகதைத்தொகுப்பு வெளியாக இருக்கிறது.கல்லூரி பருவத்தில் படத்திரையிடல்கள் பார்க்கும் போதே இயக்குனராகும் ஆசை மெல்ல எட்டிப் பார்த்தது. கவிதைகள், கட்டுரைகள் வெளியான பின்பு ஆவணப்படங்களும் இயக்கினேன்.
 திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. 2006ம் ஆண்டு திரைத்துறைக்குள் நுழைந்தேன். இலக்கியத்திலிருந்து சினிமாவிற்கு வருதல் என்பது எல்லாக் காலக்கட்டத்திலும் நடந்து தான் இருக்கிறது என்றாலும் பெண்களின் வருகை கொஞ்சம் சிரமம் தான். இயக்குனர் பரத்பாலாவின் அறிமுகம் கிடைத்தது திரைத்துரையின் நுழைவாயிலாக இருந்தது. அவர் திரைக்கதை எழுத ஒருத்தரை தேடிக்கொண்டிருந்த போது எனக்கும் அவருக்குமான தோழி அனு என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ‘மரியான்’ திரைப்படத்தில் அவருக்கு அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்தேன். ‘மரியான்’ படத்தில் ‘நெஞ்சே எழு’, ‘எங்கே போன ராசா’ போன்ற பாடல்களை எழுதினேன். அதன் பிறகு மற்ற திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதி உள்ளேன். ‘மாயா’, ‘எட்டுத்தோட்டாக்கள்’ போன்ற படங்களிலும் எழுதினேன். ‘அருவி’ படத்தில் ஒரு பாடலை தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தையும் நான்தான் எழுதினேன்.
பரத்பாலாவிடம் இணை இயக்குனராக இணைந்தது சரியான பள்ளியில் இணைந்தது போல் இருந்தது. ஏ. ஆர். ரஹ்மானின் அறிமுகம் கிடைத்தது. நல்ல வழிகாட்டுதலும் கிடைத்தது. சினிமா தொழில் நுட்பங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டேன். சினிமாத்துறையைப் பொறுத்தவரை ஒரு நல்ல ப்ரொஃபஷனலாக உணர்கிறேன். சில படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளேன்.சினிமாவை பொறுத்தவரை மெனக்கெடுதல் அவசியம். பகல், இரவு என எப்போது வேலை இருந்தாலும் போக வேண்டும். நம் முழுப்படைப்பாற்றலையும் எந்நேரமும் தர வேண்டி இருக்கும். ‘நெஞ்சே எழு’ பாட்டெல்லாம் இரவில் தான் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் இரவில்தான் ரெக்கார்டிங் வைப்பார். ஏ. ஆர். ரஹ்மானை சந்தித்த பிறகு என் வாழ்க்கை மாறி இருக்கிறது. அவதூறு, மட்டம் தட்டுதல் இல்லாமல் ஒரு மரியாதைக்குரிய இடம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
பெண்களுக்கு வெளி உலகம் தெரியாது என்பதெல்லாம் ஒரு கற்பிதம். பெண்களுக்கு நுண்ணு ணர்வு அதிகம். இந்த சமூகம் எந்த மாதிரி பாதுகாப்பற்ற சமூகம் என்பது ஆண்களை விட பெண்களுக்கு நன்கு தெரியும். சின்ன வயதிலே பெண்களுக்கு இந்த விஷயம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு உலக அறிவு, ஆளுமை எல்லாமே இருக்கிறது. ஆனால் பெண்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புதான் அவ்வளவாக கிடைப்பது இல்லை. பாதுகாப்பற்ற இந்த உலகத்தில் எப்படி பாதுகாப்பாக இருப்பது, எப்படி தகவமைத்துக்கொள்வது என எல்லாம் பெண்களுக்குத் தெரியும். பெண்கள் எப்போதும் கடுமையான எச்சரிக்கை உணர்வோடு இருப்பார்கள். இதை பல இடங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்.
முன்னேற நினைக்கும் பெண்களுக்கு மறுப்புகளும் எதிர்ப்புகளும் இருக்கும். பயங்கரமாக முட்டி மோத வேண்டி இருக்கும். கதவை தட்டவேண்டும். எல்லாப் பெண்களுக்கும் அவரவருக்கான மறுப்பு இருக்கும். தடைகள் இருக்கும். அதை கடந்து விடக் கூடிய வலிமையும் பெண்களிடம் இருக்கிறது.பெண்களுக்கு நிறைய கடமைகள் இருப்பது உண்மை தான். அதையும் தாண்டி எழுதுதல் என்பது தனக்குத்தானே ஊக்கம் கொடுக்கும் விஷயம். குடும்ப வேலைகள் ஒரு பொருட்டல்ல. கடமையும் பொறுப்பும் இருக்கும்போது வலிமையும் தானாக வரும். அதிக சுமை உடைய வண்டியை ஓட்ட வேண்டுமென்றால் அதற்குரிய வலிமை வந்து தான் ஆக வேண்டும்.
எழுத்து என்பது அந்த வலிமையைத் தரக்கூடியது. நான் போராடி வந்துவிட்டேன். எழுத முடியாத பெண்கள், எழுத வேண்டும் என்ற ஆசையைக் கூட வெளிப்படுத்த முடியாதப் பெண்களின் பிரதிநிதியாக எழுத வந்த பெண்கள் இருக்க வேண்டும். ‘பனிக்குடம்’ என்றொரு காலாண்டு சிற்றிதழ் நடத்தினேன். அது பெண் எழுத்தாளர்களுக்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது.90 வரை மேல்தட்டு என்று சொல்லப்பட்டவர்கள்தான் எழுதினார்கள்.
அவர்களின் மூன்றாவது தலைமுறை படிக்கும் போது நம்முடைய முதல் தலைமுறை படிக்க ஆரம்பித்தது. கல்வி, பொருளாதாரம் என்று எல்லா வகையிலும் அவர்கள் முன்னேறிவிட்டார்கள். அதனால் அந்த அங்கீகாரத்தை அவர்கள் தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். எனவே அந்த சாதியைச் சேராதப் பெண்களை நிராகரிப்பார்கள். இதனால் பெண் இனத்துக்குள் பிரச்னைகள் வருது. எனவே அவர்கள் போட்ட கோட்டை நாம் அழிப்பதை விட அதை விட பெரிய கோட்டை போட வேண்டும். போட்டி போட்டால் நேரம்தான் வீணாகும். அதற்காக பின்வாங்கிவிட்டால் மற்ற பெண்களுக்கு இடமில்லாமல் போய்விடும். போராட்டத்திற்கான வலிமையை சேகரித்துக்கொள்வது நல்லது.
பெண்கள் பேசுவதற்கு வாய்க்கும், எழுதுவதற்கு விரல்களுக்கும் மொழி கொடுத்தவர் பெரியார். பெண் முன்னேற்றம் என்ற தேரின் சக்கரத்தை முன்னிறுத்தி நகர்த்தியவர் பெரியார். நம் சமூகத்தில் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் உலகளாவிய அளவில் தொடர்பு கிடைத்திருப்பதால் பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்கள் செல்ஃபி போடுவது, அர்த்தமற்ற விஷயங்களை பகிர்வது என அந்த வாய்ப்பை வீணாக்குகிறார்கள். சமூகத்தில் நடக்கும் வன்முறைகள் நம்மை மறுபடி வீட்டுக்குள் முடக்கிவிடுமோ என்ற நிலையில் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டாமா?
பெண்கள் சினிமாவிற்கு வந்தால் தங்கள் ஆற்றலை நிரூபித்துவிடுவார்கள். அறிவுரீதியாக சிந்தனை ரீதியாக பெண்கள்ஆண்களை விட சிறந்தவர்கள் என்பதால்தான் அவர்களின் திறமை முடக்கப்படுகிறது. வாய்ப்புகளை மறுப்பதன் வழியாக இதெல்லாம் பெண்களுக்குத் தெரியாது என்ற ஒரு கற்பிதத்தை உருவாக்குகிறார்கள். மற்ற பெண்களுக்கான நீதி கிடைக்காதபோது வாய்ப்பு கிடைத்த பெண்களின் பொறுப்புணர்வு அதிகமாகிறது. அந்தக் கடமையை பெண்கள் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்.தற்போது ஏ. ஆர். ரஹ்மானுடன் இணைந்து ‘கருணாமிருத சாகரம்’ என்று 3000 ஆண்டு தமிழிசையைக் குறித்து ஒரு ப்ராஜெக்டை செய்து கொண்டிருக்கிறேன்.
கவிதை நூல் தொகுப்புகள் * பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000) * முலைகள் (2002) * தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003) * உடலின் கதவு (2006) * யானுமிட்ட தீ (2010) * மாமத யானை (2011) * இடிந்த கரை (2012) * அகவன் மகள் (2013) * காலவேக மதயானை (2016) * அகமுகம் (2018)
சிறுகதை நூல் * நிறைய அறைகள் உள்ள வீடு (2013),பாதரசம் பதிப்பகம்
கட்டுரை நூல் தொகுப்பு * காலத்தைச் செரிக்கும் வித்தை(2009)
- ஸ்ரீதேவி மோகன் படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
|